Monday, December 21, 2015

தனுசு ஆண்டு பலன் - 2016,

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்



தனுசு ஆண்டு பலன்  -  2016, 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அறியும் திறமைகொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 02-08-2016 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் பலமாகச் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அசையும்- அசையா சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். 08-01-2016 முதல் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், இந்த ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடருவதாலும், எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள், எடுக்கும் முயற்சிகளில் தடைபோன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள், பணவரவுகள் தடை உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்துச் செயல்படுத்துவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வீண் பிரச்சினைகளையும் பழிச்சொற்களையும் சந்திக்கநேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்.உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையும். ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

குடும்பம், பொருளாதார நிலைபணவரவுகள் ஆகஸ்ட் மாதம் வரை திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிற்பாதியில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கநேரிடும். குடும்பத்தில் அமைதி குறையும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

உத்தியோகம்இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிவரும். பணியில் நிம்மதிக் குறைவு உண்டாகும். தேவையற்ற பழிச்சொற்களுக்கும் ஆளாக நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு தாமதப்படும்.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்த வொரு புதிய முயற்சிகளிலும் வீண் இழப்புகளை சந்திக்கநேரிடும். ஆண்டின் முற்பாதி வரை லாபங்களைத் தந்த தொழில்கள்கூட பிற் பாதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்டு மாதம் வரை சரளமான நிலை இருந்தாலும் பின்பு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது, நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
அரசியல்வரும் ஆகஸட் மாதம் வரை செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். பின்பு எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை.

கலைஞர்கள்ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலப் பலனைத் தந்தாலும், பிற்பாதியில் சிக்கல்கள் அதிகரிக்கும். வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். மற்ற கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறி நிலையே இருக்கும். நடிப்புத் துறை மட்டுமின்றி பாடல், இசை துறைகளில் உள்ளவர்களுக்கும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியைத் தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பெண்கள்குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய கால மாகும். புத்திர வழியில் மனசஞ்சலங்களும் வீண் விரயங்களும் ஏற்படும். ஆண்டின் தொடக்கம் சாதகமாக இருந்தாலும் பிற்பாதியில் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள், கொடுக் கல்- வாங்கல்களிலும் பிரச்சினைகள் ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும்.
மாணவ- மாணவியர்கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக்கொண்டால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றப் பலனை அடையமுடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் நீங்கள் அவப்பெயரை சந்திக்கநேரிடும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்

ஜனவரி லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதும் 8-ஆம் தேதி முதல் 3-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிறுசிறு மருத்துவச் செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.சந்திராஷ்டமம்: 23-01-2016 மதியம் 02.03 மணி முதல் 25-01-2016 இரவு 09.54 மணி வரை.

பிப்ரவரி முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொட்டதெல்லாம் துலங்கும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உறவினர் வருகை மகிழ்ச்சிதரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பெயர், புகழ் உயரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.சந்திராஷ்டமம்: 19-02-2016 இரவு 08.47 மணி முதல் 22-02-2016 காலை 05.27 மணி வரை.

மார்ச் முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும் சூரியனும் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 12-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வதால் அனுகூலப் பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 18-03-2016 அதிகாலை 02.20 முதல் 20-03-2016 பகல் 11.35 மணி மணி வரை.

ஏப்ரல் சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும் விரய ஸ்தானமான, 12-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். குரு 9-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்வது, சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 14-04-2016 காலை 08.28 மணி முதல் 16-04-2016 மாலை 05.17 மணி வரை.

மே ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் முழு வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 11-05-2016 மதியம் 04.25 மணி முதல் 13-05-2016 இரவு 11.57 மணி வரை.

ஜூன் 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களையும் தவிர்த்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். முருகனை வழிபடவும்.சந்திராஷ்டமம்: 08-06-2016 அதிகாலை 01.57 முதல் 10-06-2016 காலை 08.06 மணி வரை.

ஜூலை சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், புதனும், 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தி லிருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பணவரவுகள் சரளமாக நடைபெறும். தடைப் பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர் களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 05-07-2016 பகல் 11.42 மணி முதல் 07-07-2016 மாலை 05.12 மணி வரை.

ஆகஸ்ட் ஏழரைச் சனி நடைபெறுவதும் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இம்மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பண விவகாரங்களில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி, குருவுக்கு பரிகாரம் செய்வது மூலம் நற்பலன்களை அடையமுடியும்.சந்திராஷ்டமம்: 01-08-2016 இரவு 08.17 மணி முதல் 04-08-2016 அதிகாலை 02.07 மணி வரை மற்றும் 29-08-2016 காலை 03.04 மணி முதல் 31-08-2016 காலை 09.49 மணி வரை.

செப்டம்பர் ஏழரைச் சனி நடைபெறுவதும், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும்  தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணவரவுகளிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றே தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடு, சிவவழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 25-09-2016 காலை 08.36 மணி முதல் 27-09-2016 மாலை 16.00 மணி வரை.

அக்டோபர்ஜென்ம ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் சுக்கிரனும் மாத பிற்பாதியில் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் லாபங்கள் பெருகும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும், ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலையில் பளு சற்று கூடுதலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளிக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 22-10-2016 மதியம் 02.31 மணி முதல் 24-10-2016 இரவு 09.32 மணி வரை.

நவம்பர் ஏழரைச் சனி நடைபெற்றாலும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். புதிய பொருள் சேர்க்கைகளும் ஆடை ஆபரணங்களும் சேரும். வெளியூர் பயணங்களால் சாதகப் பலன்களை அடையமுடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலனைத் தரும்.சந்திராஷ்டமம்: 18-11-2016 இரவு 10.33 மணி முதல் 21-11-2016 காலை 04.02 மணி வரை.

டிசம்பர் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.சந்திராஷ்டமம்: 16-12-2016 காலை 08.51 மணி முதல் 18-12-2016 மதியம் 12.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         1, 2, 3, 9.கிழமை:     வியாழன், திங்கள்.திசை:     வடகிழக்கு.நிறம்:     மஞ்சள், சிகப்பு.கல்:         புஷ்பராகம்.   தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

No comments: