Wednesday, March 14, 2018

பேச்சுத் திறன்

பேச்சுத் திறன் 

     
நேருக்கு நேர் இனிமையாக பேசி விட்டு பின்னர் போக விட்டு புறம் பேசும் மனிதர்களிடம் பழகாமல் தவிர்த்து விடுவது நல்லது. அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலப்பதற்கு ஒப்பாகும். ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
     மாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். சிலர் வாயை திறந்தாலே பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.
     நரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.
     வாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் யாவும் சிறப்பாக அமையும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.
     அதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தால் அவன் நாக்கில் சனி எனக் கூறி அனைவரும் ஒதுங்கி கொள்வார்கள்.
                                                                                  

No comments: