Saturday, March 10, 2018

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் என்றால் என்ன?
     
ஆறறிவு கொண்ட மனிதனுக்கு நல்ல சிந்தனை திறன், சிறந்த செயல் பாடு, எதையும் பகுத்தறிந்த செயல் படும் ஆற்றல் யாவும் உண்டு. சிரிக்கத் தெரிந்த மிருகமாகிய மனிதனுக்கு மனது என்று ஒன்று உண்டு. அதில் குழப்பம் என்ற ஒன்றும் உண்டு. ஆறு அறிவு கொண்ட மனிதன் கடவுள் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் செயல்படுகிறான். ஒரு பக்கத்து, வெளிப்பாடுகளை கொண்டு அவனிடம் உறவாடுபவர்கள் அவனின் மறுபக்கத்தை உணர நேர்ந்தால் சற்று தள்ளி தான் நிற்பார்கள். ஜோதிட ரீதியாக நவகிரகங்கள் தான் இப்படி மனிதனின் மனக்குழப்பத்திற்கும், தடுமாற்றத்திற்கும் காரணமாக இருக்கின்றது. சந்திரன் மனோகாரகன் ஆவார். அவர் கோட்சார ரீதியாக ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் தங்குவார். ஒருவரின் ஜென்ம ராசிக்கு 8ம் ராசியில் கோட்சார ரீதியாக சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் என்கிறோம்.

  ஒருவருக்கு சந்திராஷ்டம தினங்கள் வரும் போது அவரின் எண்ண ஓட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நாட்களில் குழப்பமான மனநிலை, கவனக்குறைவினால் தவறுகள் செய்ய சுடிய சூழ்நிலை, கட்டுக்கடங்காத முறையற்ற எண்ணங்கள் போன்றவை உண்டாகிறது. தேவையற்ற வாய் வார்த்தைகளால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டை சச்சரவுகளும் இந்நாட்களில் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். துர்சக்தி மனதை ஆட்டிப்படைப்பது போலிருக்கும். பிறர் செய்யும் நல்ல செயல்கள் கூட தவறாகவே தோன்றும் பெரியோர்களின் பேச்சை உதாசீனப்படுத்துச் செய்யும். தொழில் வியாபாரத்தில் மற்றவர்களிடம் ஏமாறக்கூடிய நிலை, பண விஷயத்தில் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியா நிலை உண்டாகும். வாய் சண்டைகளே சில நேரங்களில் பெரிதாகி கை கலப்பிற்கு வழி வகுக்கும். 
   
சந்திராஷ்டம தினங்களில் எந்தவொரு புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதும், முக்கிய முடிவுகளை எடுக்காதிருப்பதும் நல்லது. கூடுமானவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். சந்திராஷ்டம தினங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் மனதை ஈடுபடுத்துவது, யோகா, தியானம் போன்றவற்றை செய்வது, சந்திரனுக்குரிய தானியமாகிய உளுந்தில் ஏதாவது தின்பண்டங்கள் செய்து அனைவருக்கும் வழங்குவது போன்றவை நற்பலனை தரும். 

No comments: