Friday, June 19, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015-2016 சிம்மம்



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 

குரு பெயர்ச்சி பலன்    2015-2016  சிம்மம்
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

சிம்மம் ; மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்வதும் சனி 4ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம் சனி நடப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5,7,9ஆம் வீடுகளை பார்வை செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தற்போது 2,8ல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 08.01.2016 ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் உங்களின் தனி திறனால் சுறு சுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள்.

குடும்பப் பொருளாதாரநிலை
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்
பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது.

பெண்கள்
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

மாணவ மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் எதிர் கொள்ள நேரிடும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் நிலையில் பாதிப்புகளையும், வீண் அலைச்சல்களையும் உண்டாக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். 

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் ஜென்ம ராசியில் சுக்ரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.  எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும்.  குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு கை கால் அசதி, மூட்டுக்களில் வலி போன்றவை உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். சனியும் 4ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின்  நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சனி  4ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 2ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். சிலர் வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் தடையின்றி நடைபெறும். போட்டி பொறாமைகள் விலகும். வம்பு வழக்குகள் யாவும் மறையும். 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் பணவரவுகளில் இருந்த தடைகள் ஓரளவுக்கு விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். சனி 4&ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும். சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் ஓரளவுக்கு நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும்  ஊதிய உயர்வுகளையும்  சிறு சிறு தடைகளுக்கு பின் பெற்று விட முடியும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சுக்ரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். 4&ல் சனி சஞ்சரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். பூர்வீக சொத்துக்களால் உறவினர்களிடையே பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி குறைவு உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

மகம்
எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்புபவர்களாக விளங்கும் உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடியே நிலவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சொந்த பூமி மனை போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும்.

பூரம்
பேச்சாற்றலால் அனைவரையும் வசப் படுத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் தோன்றும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெறும்.

உத்திரம் 1ஆம் பாதம்
நல்ல மன வலிமையும் உண்மை பேசும் குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   1,2,3,9
நிறம்   வெள்ளை, சிவப்பு
கிழமை  ஞாயிறு, திங்கள்
கல்    மாணிக்கம்
திசை   கிழக்கு
தெய்வம்  சிவன்

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது. வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டை  கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றவது நல்லது. சனி 4ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.சர்ப கிரகங்களும் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.


No comments: