Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - சிம்மம்

 

புத்தாண்டு பலன் & 2021 - சிம்மம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1&ஆம் பாதம்.

வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வரும் 2021&ஆம் ஆண்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி பெற முடியும்.

கணவன்& மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பகைமை பாராட்டியவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், பொன் பொருள் சேர்க்கை யாவும் அமையும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.

இந்த ஆண்டில் சர்ப்ப கிரகமான கேது 4&லும், ராகு 10&லும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எது எப்படி இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 

இவ்வாண்டில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடி, மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் சூழ்நிலை இருந்தாலும் சனி 6&ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும்.

குரு பகவான் வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலத்தில் சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்& வாங்கலில் மிகவும் சரளமான நிலை இருந்து நல்ல லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழச்சியும் பூரிப்பும் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி, சோர்வு போன்றவை அவ்வபோது ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் தடையின்றி செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை 

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகும். கடன்கள் குறையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. ஏப்ரலுக்கு பிறகு சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் ஏப்ரல் முதல் நல்ல லாபத்தினை பெற முடியும். கொடுக்கல்& வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த தொகைகளை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரிங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். மறைமுக எதிப்புகள் விலகி போட்டிகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் வேலை பளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் தடையின்றி வந்து சேரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுப காரியங்கள் ஏபரல் மாதத்திற்கு மேல் கைகூடும். கணவன்& மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் ஏப்ரல் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். மான்புமிகு பதவிகளும் தேடி வரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். வர வேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசை போன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ& மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டி செல்வீர்கள். கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 1,2,3,9      நிறம் & வெள்ளை, சிவப்பு       கிழமை & ஞாயிறு, திங்கள்

கல் &  மாணிக்கம்           திசை & கிழக்கு        தெய்வம் & சிவன்

No comments: