Monday, March 5, 2012

சுகவாழ்வு, சொகுசு வாழ்வு

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏழை முதல் பணக்காரர் வரை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதையே விரும்புவார்கள். மனிதனின் ஆசைக்கும், அபிலாஷைகளுக்கும் அளவுதான் ஏது? நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்ல ஆசை, பைக்கில் செல்பவருக்கு காரில் செல்ல ஆசை, காரில் செல்பவருக்கு விமானத்தில் செல்ல ஆசை. இப்படி சொகுசுவாழ்வு வாழ விரும்புவதை ஆசைகளாய் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவரும் உண்டு. உழைக்காமலே உயரவேண்டும் என்ற பேராசை பிடித்தவர்களும் உண்டு.

சிலர் சுகவாழ்வு வாழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டும் தன்னைச் சுற்றி பத்து வேலையாட்கள் எப்போதும் கைகட்டி நிற்பதாக நினைத்து வாழ்பவரும் உண்டு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைத்து வாழ்வதே சுகமான வாழ்க்கையாகும். வரும்போது எதைக் கொண்டு வந்தோம். போகும் போது எதைக் கொண்டு செல்வோம் என யாரும் நினைப்பதே இல்லை. இருக்கும் வரை சுகவாழ்வு வாழ்வதையே  விரும்புவார்கள். சரி எல்லோருக்குமே சுகவாழ்வு, சொகு-சு வாழ்வு அமையுமா?

அதுதான் இல்லை!  எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும், நாயிடம் கிடைத்த தேங்காய் போல தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் இருப்பவர்களும் உண்டு. ஜோதிடத்தின் மூலமாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு, அவரின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதைப் பற்றி தெளிவாக அறியலாம். 4 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். அதுபோல 4ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதி சுப கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம்  இருக்காது. 4ம் அதிபதி நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு மேன்மையடையும்.

அதுவே 4ம் அதிபதி பகை பெற்றோ, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். 4ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பாவிகள் சூழ்ந்திருந்தாலும் நற்பலன்கள் உண்டாகாது. பொதுவாக 4ம் வீட்டில் என்ன கிரகம் இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியன்

ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலருக்கு இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு ஓரளவுக்கு மேன்மை ஏற்படும்.

சந்திரன்

4ல் சந்திரன் இருந்தால் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன யோகம், இல்லறத்துணையுடன் சுகபோக வாழ்க்கை போன்ற நற்பலன்கள் யாவும் அமையும். அசைவ உணவில் நாட்டம், அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு மற்றும் நல்ல கற்பனை வளம் இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும்.

செவ்வாய்

4ம் வீட்டில் செவ்வாய் பலத்துடன் அமையப் பெற்றிருந்தால் பூமி, மனை யோகம் உண்டாகும். நிலபுலன்களால் நல்ல வருவாய் அமையும். உடன் பிறந்தவர்களாலும் உன்னதமான உயர்வுகள் ஏற்படும். சற்று முன்கோபமும் பேச்சில் வேகம், விவேகமும் நிறைந்திருப்பதால் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். உடலில் வெட்டுக் காயங்கள் உண்டாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு நன்றாகவே அமையும்.

புதன்

4ல் புதன் பலம் பெற்று அமையப் பெற்றால், நல்ல அறிவாற்றல் கொண்டவராகவும் பல்வேறு கலைகளில் ஈடுபாட்டுடனும் இருப்பார். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வார். சுகபோக வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை எளிதில் அமையும். நவீனகரமான பொருட்சேர்க்கைகளும், அசையும், அசையாச் சொத்து யோகங்களும் சிறப்பாக அமையும்.

குரு

4ம் வீட்டில் குருபகவான் பலம் பெற்று கிரக சேர்க்கையுடன் அமைந்திருப்பதால் மற்றவர்களை வழி நடத்தும் யோகம், நல்ல புத்திக் கூர்மை, பல்வேறு பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை யாவும் உண்டாகும். பூமி மனை யோகம், சுகபோக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

சுக்கிரன்

4ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்று அமையப் பெற்றால் நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலங்கள் ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பெண்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். நவீனகரமான வீடு, வண்டி, வாகனங்கள் அமையும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு யாவும் மிகச் சிறப்பாக அமையும்.

சனி

4ல் சனி அமையப்பெற்றால் பழைய வீடு வாங்கம் யோகம், பழைய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வை அனுபவிக்க சில தடைகள் ஏற்படும்.

ராகு

சாயாகிரகமான ராகு 4ல் இருந்தால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அதை அனுபவிக்க தடைகள் ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். மதம் மாறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ராகு சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றாலும், எதிர்பாராத வகையில் நற்பலன்களும் அசையாச் சொத்து யோகமும் உண்டாகும்.

கேது

கேது 4 ல் இருந்தால் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார். உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். கேது சுப சேர்க்கை பெற்றிருந்தால், சில தடைகளுக்குப் பிறகு அசையா சொத்து யோகமும் வாழ்வில் ஓரளவுக்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் உண்டாகும்.

Astrologer Murugubalamurugan



No comments: