Friday, March 9, 2012

உயர்கல்வி, மேற்கல்வி தரும் 5ம் பாவம்


உயர்கல்வி, மேற்கல்வி தரும் 5ம் பாவம்

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வி செல்வம் அழியாதது. பிறரால் களவாட முடியாதது. கல்வி அறிவு இருந்தால் எங்கு சென்றாலும் அதனால் மதிப்பும், மரியாதையும் உயரும். எங்கு யாரிடத்தில் எப்படிப் பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற ஆற்றல் உண்டாகும். ஆயிரம் கோவில்கள் கட்டி, அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதை விட ஒரு கல்விச்சாலை அமைத்து பலருக்குக் கல்வி அறிவு புகட்டுதல் மிகவும் சிறப்பானதாகும்.
கல்விச் சிறப்பு அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஜோதிட ரீதியாக ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகத்தில் 5ம் பாவத்தைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

கற்றறிந்த சான்றோர்களால் இயற்றப்பட்ட பல நூல்கள் நமக்கு இன்றும் பலவகையில் உதவிகரமாகவும், அறிவுக்கு விருந்தளிப்பதாகவும் அமைந்துள்ளது. இதற்கு 5ம் பாவம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 5ம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை சேர்க்கையுடன் இருந்தாலும், 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் வாய்ப்பும், நல்ல அறிவாற்றல் யாவும் சிறப்பாக அமையும்.

பொதுவாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2ம் பாவமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். கல்வி என்பது இன்றைய விஞ்ஞான யுகத்தில் மிகவும் முக்கியம் என்றாலும் படிப்பது முக்கியமில்லை. மிக சிறப்பாக படிப்பது தான் முக்கியம். இதற்கு 5ம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப்பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம்  இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனைகள் பல செய்ய நேரிடும்.

5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் 5ம் அதிபதி கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்ய நேரிடும்.

2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும்.

அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது.  சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும்.
5ம் பாவத்தில் கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் உயர்படிப்பு யோகம், அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப அமையும்.

பொதுவாக, 5ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று, உடன் செவ்வாய் அமையப் பெற்றோ, பலன் பெற்றோ இருந்தால் மருந்து, அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சாதனை செய்ய நேரிடும். அதுவும் சூரியன், செவ்வாய் பலம் பெறுவதுடன் உடன் மருத்துவ கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

5ல் சந்திரன்  வலுப்பெற்றால் மருந்து, கேட்டரிங், கடல் சார்புடைய படிப்பில் சாதிக்க முடியும்.

செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 5ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்க முடியும்.

செவ்வாய் 5ல் பலமாக இருந்தால், நிர்வாகம் சார்ந்த எம்.பி.ஏ. படிக்க முடியும்.  செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் கட்டடத்துறை சார்ந்த துறை, எந்திரம் சார்ந்த துறையில் உயர்கல்வி கற்கக்வடிய யோகம் உண்டாகும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கம்ப்யூட்டர் துறையில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் புதன் பலம் பெற்றால் கணக்கு கம்ப்யூட்டர், ஆடிட்டிங் சார்ந்த துறைகளில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் குரு பலம் பெற்றால் வங்கிப் பணிக்கான  கல்வி, வக்கீல், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழி நடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குரு, புதன் இணைந்திருந்தால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து, பள்ளிக் கல்லூரிகளில்  ஆசிரியர், பேராசிரியர் ஆகும் யோகம் உண்டாகும்.

சனி பலம் பெற்றால் டெக்னிக்கல் கல்வி உண்டாகும்.

சுக்கிரன் பலம் பெற்றால் கலை, இசை தொடர்புடைய கல்வியில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

ராகு பகவான் 5ல் சுபப் பார்வையுடன் பலம் பெற்றால் புதுவகையான கல்வியில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் ஆற்றல்  உண்டாகும்.

5ல் கேது அமையப் பெற்றால் மருந்து, கெமிக்கல்  சார்ந்த கல்வி, சமயம் சார்ந்த கல்வியில் சாதிக்க நேரிடும்.

எனவே, ஒருவருக்கு 5ம் இடம் பலமாக அமைந்து விட்டால் நல்ல கல்வி ஞானம் கிடைக்கப் பெற்று, சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும், மதிப்பு மரியாதையையும் பெறமுடியும். நல்ல நிர்வாக திறமையும், பலரை வழி நடத்தக்கூடிய அறிவாற்றலும் உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகமும் உண்டு. கல்வி ஒருவருக்கு வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே வாழ்வில் அனைவரும் கண்டிப்பாக முன்னேறுவோமாக!


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



No comments: