Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 ரிஷபம்


 குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

ரிஷபம்  ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். பண பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இந்த தருணத்தில் சர்ப கிரகமான கேது 6-ல் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதும், அதன் பின் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது, தொழில் விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலையாட்களை எல்லா விஷயத்திலும் நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்படுகின்ற பொழுது வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும் என்றாலும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் கிடைக்கும். சக ஊழியருடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட நீங்கள் சிறப்பாக கையாள முடியும். குரு பார்வை 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், எந்த பிரச்சினையையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய ஒரு பலம், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக கூட சுபச் செலவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் உடல் ஆரோக்கியமானது நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். தூக்கத்தில் கனவுத் தொல்லைகள் இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவற்றால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை உட் கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை   

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து விட முடியும். குரு 12-ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், வீண் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நெருக்கடியான நேரத்தில் வாழ்க்கை துணையின் ஆறுதல் வார்த்தைகளும், தகுந்த உதவிகளும் கிடைப்பதால் எதையும் சமாளிக்க முடியும். வீடு, வாகனம் வாங்கும் விஷயத்தில் கவனமாக முடிவு எடுப்பது நல்லது.

கமிஷன் ஏஜென்ஸி 

குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்களுக்கு லாபம் சற்று குறையும். 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இதனால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் எதிர்பாராத விரயங்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகளும் சற்று தாமதப்படும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் செலவை ஏற்படுத்தும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் சற்று தாமதமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை மந்தமடையும். மறைமுக வருவாய் குறையும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய முடியாமல் விளைபொருட்கள் தேக்கமடையும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகள் இடையே வீண் விரோதங்கள் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

பெண்கள்

பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் எதிர்பாராத வகையில் கடன் வாங்க நேரிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சில மனகவலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக முயற்சி எடுத்து படித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் படிப்பில் கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். அரசு வழி உதவிகள் தாமதப்படும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் விரய ஸ்தானமான 12-ல் ராகு சேர்க்கைப் பெற்று கேது நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, கையில் இருப்பதை கொண்ட செலவு செய்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் ரீதியாக பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்து செலவுகள் ஏற்படும் நேரம் என்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எளிதில் முடிய வேண்டிய விஷயங்கள் தாமதமாகும். அனைத்து காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டையாவது எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 12--ல் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பண வரவுகள் தாமதமாகும். குடும்பத்தில் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது உத்தமம். கேது பகவான் 6-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் சஞ்சரிக்க கூடிய சனி வக்கிர கதியில் இருப்பதாலும் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். உறவினர்கள் செய்யக்கூடிய இடையூறுகளால் குடும்பத்தில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் கூட தாமதமாகும். துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது, குரு பகவானுக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் இருப்பதால் உங்களுடைய நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். சர்ப கிரகங்கள் சற்று சாதகமாக இருப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறனால் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெறுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து அதன் மூலம் பொருளாதார மேன்மைகளை அடைய முடியும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு திருப்திகரமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் மீது இருந்த வீண் பழிச்சொற்கள் விலகி மன நிம்மதியுடன் பணி புரிவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் தெம்புடன் செயல்படுவீர்கள். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு கேது நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். சனியும் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நிலவக்கூடிய காலம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நீங்களே முன்நின்று செயல்படுவது நல்லது. ராகு 11-ல் இருப்பதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சிறப்பாக கையாள முடியும். ஒரு சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி அதன் மூலம் உங்கள் கையிருப்பு குறைய கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு ராசியாதிபதி நட்சத்திரமான பரணியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 11--ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட்டால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். நெருங்கியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வெளி நபர்களிடம் தொழில் விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாகும். உங்கள் பணியில் கவனத்தோடு இருந்தால் தான் அடைய வேண்டிய அனுகூலங்களை அடைய முடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது கெடுதியை குறைக்கும்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் 12--ல் சஞ்சரிக்கக்கூடிய இக்காலத்தில் நீங்கள் ஒவ்வொரு செயலிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். நெருங்கியவர்களால் மன அமைதி குறைவு ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை. சனி 10-ல் சஞ்சரித்தாலும், ராகு 11-ல் இருப்பதால் எந்த பிரச்சினையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். பெரிய முதலீடு கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. பணிக்கு செல்பவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்து கொண்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தற்போது சற்று பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய ஒரு நிலையும், அதன் மூலம் வீண் அலைச்சலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சர்பேஸ்வர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.

 

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8            நிறம் - வெண்மை, நீலம்,          கிழமை - வெள்ளி, சனி

கல்வைரம்              திசை - தென்கிழக்கு,                தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments: