Monday, November 14, 2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி

இந்த வார ஜோதிடம் 
இதழின் இலவச கேள்வி பதில் (14.11.2016)





கேள்விநான் தற்போது தனியார் துறையில் பணி புரிகிறேன். வங்கி பணிக்கான முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எப்பொழுது கிடைக்கும்? நித்ய குமார், ஈரோடு

பதில்.  பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமையவும், வங்கி பணி, கொடுக்கல் வாங்கல் தொழில் போன்றவை சிறப்பாக இருக்கவும் தனக்காரகனான குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். மிதுன லக்னம், மிருக சீரிஷ நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்துள்ள தங்களுக்கு ராசி, லக்னத்திற்கு கேந்திராதிபதியான குரு 3ல் அமைந்து தற்போது குரு திசை  நடைபெறுகிறது. இதனால் தங்களுக்கு வங்கி பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வரும் 25.04.2018ல் சனிபுக்தி முடிவடைந்து லக்ன ராசியாதிபதியான புதனின் புக்தி வரவுள்ளது. இக்காலங்களில் வங்கி பணி கிடைக்கும். 3ல் அமைந்துள்ள குருவின் திசை என்பதால் பிறந்த ஊரை விட வெளியூர், வெளி மாநிலங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளே அதிகம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.


 கேள்வி. எனக்கு வெளிநாட்டில் பணி புரியும் வாய்ப்பு உள்ளதா-?  ராம் பிரசாத். உத்தம பாளையம்.

பதில். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 9, 12க்கு அதிபதிகள் பலம் பெற்று அதன் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் காணப்படும். கடக ராசி மீன லக்னத்தில் பூச நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 3ம் அதிபதி சுக்கிரன்  ஆட்சி பெற்று அமைந்து தற்போது சுக்கிர திசை நடைபெறுவதால் வெளியூர், வெளிமாநிலங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு  குறைவாக உள்ளது. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்வது சிறப்பு. அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.


கேள்வி. என் மகளுக்கு  காதல் திருமணம் நடைபெறுமா அல்லது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் நடைபெறுமா? Êசம்பத் குமார். விழுப்புரம்  

பதில். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5,7க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நடைபெறும். தனுசு ராசி கும்ப லக்னம், மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ள ஜாதகிக்கு களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராகு சாரம், பெற்று சனி சேர்க்கையுடன் இருப்பதால் புது இடத்தில் அந்நியத்தில் திருமணம் நடைபெறும். ராசிக்கு 5ம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதாலும், ராசிக்கு  5ல் கேது அமைந்திருப்பதாலும் ஜாதகிக்கு யாரையாவது விரும்ப கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் அதில் தடை ஏற்படும். 2017 செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் புதன் புக்தி காலத்தில் திருமணத்திற்கான முயற்சிகளை செய்வது நல்லது. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நடைபெறும். தற்போது சனி புக்தி நடைபெறுவதால் ஜாதகி பெரியவர்களின் பேச்சை கேட்க மாட்டாள். குடும்பத்தாருடன் நிறை கருத்தவேறுபாடுகள் இருக்கும். சூரியன் ராகு சேர்க்கை பெற்றிருப்பதால் ஜாதகி தந்தையிடம் ஒத்து போக மாட்டாள். ஜாதகியின் தந்தை அவளின் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.


கேள்வி.  எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? மகாலட்சுமி, சிதம்பரம்.

பதில். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் 10ல் பலமாக இருந்தால் அரசு, அரசு சம்மந்தப்பட்டவற்றில் அனுகூலப்பலன்களை அடைய முடியும். மகர ராசி திருவோண நட்சத்திரம், மீன லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு சூரியன் உச்சம் பெற்று, செவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பது சிறப்பு என்றாலும் 10ம் அதிபதியான குரு பாதக ஸ்தானமான 7ல் அமைந்து வக்ரம் பெற்றிருப்பதால் அரசு பணி கிடைப்பதற்காள வாய்ப்புகள் குறைவு. அப்படி கிடைக்கப் பெற்றாலும், நிரந்தரமற்ற தற்காலிக பணியே கிடைக்கும். தங்கள் உழைப்பிற்கான முழு அந்தஸ்தினைப் பெற முடியாமல் போகும். குரு வக்ரம் பெற்றிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் கவனமுடன் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்து வருவது நல்லது.



கேள்வி. எனக்கு தொழில் எவ்வாறு அமையும்.? பாஸ்கர் செல்வம் ஹரூர்.

பதில். பொதுவாக ஒருவருக்கு தொழில் நன்றாக அமைய 10ம் இடங்கள் பலமாக அமைய வேண்டும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி சூரியன் 2ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனைப் பெற்றுள்ளார். இது நல்ல அமைப்பு என்பதால் அரசு, அரசு சார்ந்த துறைகள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தற்போது 7ம் அதியான சுக்கிரனின் திசை நடைபெறுவதால் வண்டி வாகனங்கள்ஆடை ஆபரணங்கள் மூலம் சாதகப்பலன் அடையும் யோகம் உண்டு. தற்போது 3வது திசையாக சுக்கிர திசை நடைபெறுவதால் எதிலும் தனித்து செயல்படாமல் யாரையாவது கூட்டாக சேர்த்து கொண்டு தொழில் செய்வது நல்ல லாபத்தை தரும். அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது உத்தமம்.

கேள்வி. எனக்கு திருமணம் நடக்க பரிகாரம் கூறவும்? தாயுமான சாமி, உத்தம பாளையம்.

பதில். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு குடும்ப, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதும், 3ம் அதிபதி குரு, 5ம் அதிபதி சனி வக்ரம் பெற்றிருப்பதும், சூரியன் ராகுவுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்க தோஷம் உண்டாகி இருப்பதும் கடுமையான தோஷம் ஆகும். திருமண வாழ்க்கைக்கு தகுதி குறைவான ஜாதக அமைப்பு என்ற சொல்லலாம். திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே நடந்தாலும் வாழ்க்கையில் நிறைய விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். திருமண விஷயத்தில் மிகவும் நிதானமாக முடிவு எடுப்பதே சிறந்தது. தொடர்ந்து குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

கேள்வி. நான் மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளேன். இப்பிரச்சனை எப்போது தீரும்? தவராஜ், சென்னை.

பதில்  பொதுவாக கடன்கள் இன்றி வாழ தனக்காரகன் குருவும், கடன்களுக்கு காரகனாகிய சனியும் பலமாக இருத்தல் வேண்டும். ரேவதி நட்சத்திரம் மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தனக்காரகன் குருவும், கடன்களுக்கு காரகனாகிய சனியும் வக்ரம் பெற்று தன ஸ்தானமான 2ம் வீட்டிலேயே அமைந்திருப்பதால் கடன் பிரச்சனைகள் தொடர்ந்து உள்ளது. பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3வது திசை நடைபெற்றால் வாழ்வில் முன்னேற்றமடைய தடைகள் உண்டாகும். 15.02.2017 முதல் லக்னாதிபதியாகிய  சூரியனின் திசை தொடங்கும் போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகி கடன்கள் படிப்படியாக குறையும். என்றாலும் குரு வக்ரம் பெற்றிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபாடு செய்வது நல்லது.


கேள்வி. எனக்கு வெளி நாட்டில் பணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தடை ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன--? Êசக்திபால், ஈரோடு

பதில். ஜாதக ரீதியாக 9,12க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிம்ம லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 9, 12க்கு அதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது சிறப்பு. கால புருஷ தத்துவப்படி 9ம் வீடான தனுசுவில் ராகு அமைந்து தற்போது ராகுவின் திசை நடைபெறுவதால் கண்டிப்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. சிம்ம லக்னத்தின் அதிபதி சூரியனுக்கு ராகு பகை என்பதால் சில தடைகள் நிலவி வருகிறது. என்றாலும் கூடிய விரைவில் வெளிநாடு செல்வீர்கள். தொடர்ந்து துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்


கேள்வி.  எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? பொன்னுசாமி, கொடுமுடி.



பதில். துலா லக்னம் பூராட நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி சந்திரன் 3ல் அமைந்து உள்ளார். இதனால் பிறந்த ஊரை விட வெளியூர், வெளி மாநிலங்களில் பணி புரியும் வாய்ப்பு உள்ளது. சந்திரன் குரு வீட்டில் அமைந்திருப்பதால் மக்களுக்கு சேவை செய்யும் விஷயங்களில் ஈடுபாடு, உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட துறை, நீர்சம்மந்தப்பட்ட துறைகளில் பணி புரிய கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது லக்னத்திற்கு 6ல் அமைந்துள்ள செவ்வாயின் திசை 2022 ஜனவரி வரை நடைபெறவுள்ளது. இதனால் அரசு பணி கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறது. அடுத்து ராகுவின் திசை வரும். அரசு சம்மந்தபட்டவற்றிற்கு காரகனான சூரியனுக்கும், துலா லக்னத்திற்கும் ராகு பகை என்பதால் அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தனியார் துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்பு, பிறந்த ஊரை விட வெளியூர், வெளி மாநிலங்களில் வாய்ப்பே அதிகம் உள்ளது.

No comments: