Saturday, November 26, 2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016




உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016

 இந்த வார ஜோதிடம் 
இதழின் இலவச கேள்வி பதில் 27.11.2016



எனக்கு பொருளாதார முன்னேற்றம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்.

அருணாச்சலம், திருவண்ணாமலை.

பொதுவாக ஒருவரது பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைய தன ஸ்தானமான 2ம் இடமும், தனக்காரகன் குரு பகவானும் பலமாக இருக்க வேண்டும். குரு வக்ரம் பெற்றால் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை உண்டாகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 2ம் அதிபதி சனி 12ல் மறைந்து, தனக்காரகன் குரு பாதக ஸ்தானத்தில் வக்ரம் பெற்று அமைந்து அஷ்டம ஸ்தானாதிபதியான சூரியனின் திசையில் குரு புக்தி நடைபெற்றதால் அனுகூலமான அமைப்பு இல்லை என்பதால் பண வரவுகளில் நெருக்கடியான நிலையே இருந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் நற்பலனை அடைய முடியவில்லை. பாதகஸ்தானத்தில் உள்ள குரு புக்தி முடிந்து லக்கினாதிபதி சனியின் புக்தி 16.11.2016 முதல் நடைபெறுவதால் முன்னேற்றபலன் உண்டாகும். அடுத்து 11.1.2020 முதல் நடைபெறவுள்ள சந்திர திசை காலங்களில் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

எனது அக்காள் மகள் கல்வி அறிவு எப்படி இருக்கும்.
கற்பக நாயகி, கொன்றைகாடு

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 4, 5ம் பாவங்கள் கல்வியை பற்றி உணர்துவதாக அமைகின்றன. ஜாதகியின் ஜாதகத்தில் 4ம் அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் புதனுடன் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால் நீச பங்கம் உண்டாகி உள்ளது. இதனால் ஜாதகியின் கல்வியில் சில தடைக்கு பின் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவாள். கல்விக்காக இருக்கும் இடத்தை விட்டு வெளி இடங்களுக்கு செல்லும் வாய்ப்பும் அமையும். ஜாதகிக்கு 13 வயது முதல் 8ல் உள்ள ராகுவின் திசை தொடங்க உள்ளதால் உடல் ஆரோக்கிய விஷயத்திலும் கல்வியிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
 
என் மகன் இந்த வருடம் +2 தேர்வு எழுத உள்ளான். அடுத்து கல்லூரி படிப்பு எந்த துறையில் அமையும்.
 செல்வராஜ், புது கோட்டை

பொதுவாக ஒருவரது கல்வி, உயர்கல்வியைப் பற்றி அறிய 4,5ம் பாவம் உறுதுணையாக இருக்கின்றது.
அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 4ம் அதிபதி சனி, 5ம் அதிபதி குரு கேந்திர ஸ்தானமான 7ல் அமைந்து இருப்பதும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் ஜாதகருக்கு சிறப்பான கல்வி யோகம் உண்டு. 4ம் அதிபதி சனி திக்பலம் பெற்று அமைந்திருப்பதால் தொழில் நுட்ப கல்வி யோகம், டெக்னிக்கல், விவசாயம் சார்ந்த கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். 10ல் சூரியன், செவ்வாய் பலம் பெற்று இருப்பதால் அரசு சார்ந்த துறைகளில் பணி புரியும் வாய்ப்பு அமையும். அதற்கான கல்வியையும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.


என் தங்கை மகள் அவள் காதலிக்கும் பையனையே திருமணம் செய்து கொள்வேன் என்கிறாள். இதை தடுக்க வழி உள்ளதா,
விச்வேச்வரன் சிதம்பரம்.

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் மன ஈர்ப்பு, காதல் பற்றி குறிப்பிடுவது 5ம் பாவமாகும். 7ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். 5,7க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் காதல் வரும்.
மக நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள ஜாதகிக்கு மனோகாரகன் சந்திரன் கேது சாரம் பெற்று அமைந்து, 5ம் அதிபதி குரு 7ல் அமைந்து வக்ரம் பெற்று, 7ம் அதிபதி சனியும் கேது சாரம் பெற்று வக்ரகதியில் இருப்பதால் ஜாதகிக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதில் பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும். பெற்றோர் சொற்படி நடக்க மாட்டாள். திருமணம் நடந்தாலும் பிரிவு பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் ஒரு வாழ்க்கை அமையும். ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருப்பதால் தொடர்ந்து குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது உத்தமம்.


அடுத்து வரும் சுக்கிர திசை எனக்கு எப்படி இருக்கும்.
சுதர்சன் திருச்சி.
ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று பலமாக இருந்து ஜாதகரின் வாழ் நாளின் அந்த கிரகத்தின் திசையோ புக்தியோ நடைபெறுமானால் அவர் வாழ்வில் எல்லையில்லா உயர்வுகளைப் பெறுவார்.
பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7, 12க்கு அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து 12ல் இருப்பதால் சுக்கிர திசை காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். கேது நின்ற வீட்டதிபதி சாதகமாக இருந்தால் நற்பலன் ஏற்படும் கேது செவ்வாய் வீட்டில் இருந்து செவ்வாய் வக்ரம் பெற்று அமைந்து தற்போது கேது திசை நடைபெறுவதால் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியவில்லை என்றாலும் அடுத்து 12ல் உள்ள சுக்கிர திசை வரவிருப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். தினமும் விநாயரை வழிபடுவது நல்லது.


எனக்கு எப்போது தகுதியான வேலை அமையும்.
சரவணன், சென்னை.
ஒருவரது உத்தியோக நிலையை பற்றி அறிய ஜீவன ஸ்தானமான 10ம் இடம் பலமாக இருக்க வேண்டும்சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாய் திரிகோண ஸ்தானமான 5ல் ஆட்சி பெற்று அமைந்துள்ளார். இது நல்ல அமைப்பாகும். தற்போது அட்டம ஸ்தானத்தில் அமைந்துள்ள சந்திரனின் புக்தி நடைபெறுவதால் தேவையற்ற மனக்குழப்பங்கள், பணிபுரியும் இடத்தில் உயரதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்மார்ச் 2018க்கு பிறகு பணியில் நல்ல முன்னேற்றம் வரும். விரும்பிய வாய்ப்புகள் கிட்டும். வெங்கடாசலபதியை வழிபாடு செய்வது திருப்பதி சென்று வருவது உத்தமம்.


என்னுடைய மகளுக்கு 2017ல் மருத்துவ படிப்பிற்கான நுழைவு சீட்டு கிடைக்குமா.
ஸ்ரீனிவாசன், சென்னை.
பொதுவாக லக்ன, ராசிக்கு கல்வி ஸ்தானமான 4ல் சூரியன் செவ்வாய் பலமாக இருந்தால் மருத்துவ கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள ஜாதகிக்கு 4ம் அதிபதி புதன் சுக்கிர சேர்க்கை பெற்று இருப்பதால் கணக்கு, கம்பியூட்டர், பி. . ஆர்க் போன்ற கல்வி சாதகமாக இருக்கும் என்றாலும் ராசிக்கு 4ல் செவ்வாய் உச்சம் பெற்று அமைந்து, செவ்வாய் வீட்டில் சூரியன் இருப்பதால் மருத்துவ சம்மந்தப்பட்ட கல்வியில் முயற்சி செய்தால் நற்பலனை அடையலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

                கடந்த 3 வருடங்களாக நல்ல வேளை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எப்பொழுது நல்ல பணி அமையும்.
அரவிந்த், தஞ்சாவூர்.
 
ஒருவருக்கு நிரந்தரமாக நல்ல பணி அமைய 10ம் அதிபதி பலமாக இருக்க வேண்டும்.
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி குரு வக்ரம் பெற்று அமைந்திருப்பது சற்று அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் நிரந்தரமாக வேலை கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகின்றன. கோட்சாரரீதியாக ஏழரை சனி நடைபெறுவதும் வாழ்வில் முன்னேற்ற தடைகளை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி 6ல் உள்ள சுக்கிர திசையில் கடந்த காலங்களில் நீசம் பெற்ற சந்திர புக்தி நடைபெற்றதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது செவ்வாய் புக்தி தொடங்கி உள்ளதுஇக்காலங்களில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொடர்ந்து சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது உத்தமம்.




எனக்கு எப்போது அரசு துறையில் வேலை அமையும்.
ஜெய சுதா, சேலம்.

பொதுவாக ஒருவருக்கு அரசு துறைகளில் வேலை அமைய சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்கள் பலம் பெற வேண்டும்.
திருவோண நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சூரியன் ராகு சாரம் பெற்று, செவ்வாய் நீசம் பெற்றிருப்பதால் நேரடியாக அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. 10ல் குரு தனித்து இருப்பதாலும், 10ம் அதிபதி சனி ராகு சாரம் பெற்றிருப்பதாலும் தனியார் துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் உத்தியோகம் கிட்டும். அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது. வெங்கடாசலபதியை வழிபாடு செய்வது உத்தமம்.

எனக்கு திருமணம் நடக்க பரிகாரம் கூறுங்கள்.
 தாயுமான சாமி, உத்தம பாளையம்.

ஒருவருக்கு எளிதில் திருமணம் நடைபெற 2,7ம் பாவங்கள் பலமாக இருத்தல் அவசியம்.
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் 2,7க்கு அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று அமைந்திருப்பதும், 2ல் கேது, 8ல் ராகு அமைந்திருப்பதும், களத்திர காரகன் சுக்கிரன் சூரியன், ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதும்  கடுமையான களத்திர தோஷம் ஆகும். இது மட்டுமின்றி ஆண்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் வீட்டின் அதிபதி குரு வக்ரம் பெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும்திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே நடைபெற்றாலும் வாழ்வில் நிம்மதி குறைவுகளே இருக்கும். மிகவும் விட்டு கொடுத்து செல்ல நேரிடும். புத்திர, பூர்வ பண்ணிய ஸ்தானாதிபதியான சனியும் வக்ரம் பெற்றிருப்பதால் முடிந்தவரை குல தெய்வ வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

நான் காவல் துறையில் பணிபுரிய ஆசை படுகிறேன். முயற்சி செய்தால் கிடைக்குமா.
நவீன் ராஜ், சென்னை.
ஒருவர் ஜாதகத்தில் 10ல் செவ்வாய் அமைந்து, சூரியன், குரு போன்ற கிரகங்கள் பலமாக இருந்தால் போலீஸ் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும்.
அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் குருவும், சூரியனும் உச்சம் பெற்று, 10ம் அதிபதி செவ்வாய் குரு சாரம் பெற்று திரிகோண ஸ்தானமான 5ல் அமைந்து இருப்பதால் நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக போலீஸ் மற்றும் அரசு துறையில் பணி கிட்டும். தற்போது நீசம் பெற்ற புதனின் திசை நடைபெறுவதால் விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.


                

No comments: