Monday, January 23, 2017

அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 26.01.2017 முதல் 20.06.2017 வரை

அதிசார சனி பெயர்ச்சி பலன்கள்       26.01.2017 முதல் 20.06.2017 வரை



கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10, 11க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு நடைபெற்று கொண்டிருந்த அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைந்து ஓரளவுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சற்று குறைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்வர்களும் நலமாக அமைவார்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகபலன் அமையும்குரு 6ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய முடியும்.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும் என்றாலும் குரு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் தகுதியான ஆட்களாக தேர்தெடுத்து பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் மேம்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைய முடியும்.


மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8,9க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ஜென்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சாரம் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கை கால் அசதி, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். குருவும் சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும்.  பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும்மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7,8க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ருணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தற்போது நிலவி வரும் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். 2ல் ராகு, 8ல் கேது சஞ்சரிப்பதால் கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குரு 3ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமான இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால் அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவர்களின் நோக்கங்கள் சற்று தாமதமாக நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள்.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6,7க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. குரு 2ல் சஞ்சரிப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் அனுகூலமான பலனை அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
மென்மையான சுபாவமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5,6 க்கு அதிபதியாகி ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு  அர்த்தாஷ்டம  சனி தொடங்குகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். 6ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய தடைகள் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
மற்றவர்களின் குணாதிசயங்களை துல்லியமாக எடை போடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு கேந்திர கோணாதிபதியாகி யோக காரகனான சனிபகவான் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்கு ஏழரைசனியின் பாதிப்பு குறையும். இதனால் கடந்த காலங்களிலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குரு விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். ராகு 11ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
முன் கோபம் இருந்தாலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3,4க்கு அதிபதி சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஏழரைச்சனியில் பாதச்சனி தொடங்க உள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் குரு லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு கூடுதலாகவே இருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடன்பணிபரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கவும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவார்கள்.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்ய கூடிய மன பக்குவம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2,3க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்க உள்ளது. இது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விட கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால்  வீண் விரயம் ஏற்படும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. உங்கள் ராசியாதிபதி குரு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி வீண் அலைச்சல்கள் ஏற்படும். பிறர் பணிகளைகளையும் சேர்த்து செய்ய நேரிடும். மாணவர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே கல்வியில் முன்னேற முடியும்.


மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எந்தவித கஷ்டங்களையும் எளிதில் தாங்கி கொள்ள கூடிய குணம் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக சனி ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஏழரைசனியில் விரய சனி தொடங்க உள்ளது. இதனால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். வண்டி வாகனங்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை கை கால் அசதி போன்றவை உண்டாகும். குரு பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபார  ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லதுதிருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை நிலவினாலும் தடைபட்ட உயர்வுகள் கிட்டும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தன்மானமும் வரட்டு கௌரவமும் அதிகம் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். 8ல் குரு இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். ஜென்ம ராசியில் கேது 7ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைவதால் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அனைவரிடமும் அளந்து பேசும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 11,12க்கு அதிபதியான சனிபகவான் வரும் 26.01.2017 முதல் 20.06.2017 வரை அதிசாரமாக ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவிப்போகும். ராகு 6ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை சில தடை தாமங்களுக்குப்பின் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்களை சந்திப்பீர்கள். உங்கள் ராசியாதிபதி குரு சமசப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.


No comments: