Monday, December 12, 2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 12.12.2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 12.12.2016



கேள்வி           சொந்த வீடு யோகம் எப்போது கிடைக்கும்.
பாலா பரமக்குடி

பதில் ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் வீடு யோகமும், சொத்து யோகமும் சிறப்பாக அமையும். 4ம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10ம் இடத்து அதிபதிகளுடன் இணைந்தோ, திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ, 5,9ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ சுபஸ்தானமான 2,11க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.
                சிம்ம லக்கினம், திருவோண நட்சத்திரம், மகர ராசியில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் 4ம் அதிபதி செவ்வாய் 3ல் அமைந்தாலும் நட்பு கிரகமான குரு சாரம் பெற்று, வீடு யோகத்திற்கு காரகனான சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று இருப்பது சிறப்பு. தற்போது 3வது திசையாக நடைபெறும் ராகு திசை முடிவடைந்து 2018 இறுதியில் தொடங்க இருக்கும் குரு திசை காலங்களில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குரு லக்கினாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் குருதிசை தொடங்கும் போதே சொந்த வீடு, அசையா சொத்து வாங்கும் யோகம் அமையும்.

கேள்வி           எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும்,
ரமேஷ் சென்னை

பதில் மகர லக்கினம், பூச நட்சத்திரம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சுக்கிரன் 5,10க்கு அதிபதியாகி யோககாரகன் என்பது சிறப்பு என்றாலும் சுக்கிரன் 8ல் கேது சாரம் பெற்று அமைந்திருப்பதால் சிறுசிறு தடங்கலுடன் அனுகூலபலன்களை அடைய முடியும்.
                பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 4வது திசையாக சுக்கிர திசை நடைபெற இருப்பது நல்ல அமைப்பே ஆகும். சுக்கிரன் லக்னத்திற்கு 8ல் இருப்பதால் பெரிய முதலீடு ஈடுபடுத்தி எந்தவொரு செயல்களையும் செய்யாதிருப்பது நல்லது. அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால் எதிலும் தனித்து செயல்படாமல் மனைவி அல்லது பெண்களை கூட்டாக சேர்த்து கொண்டு செயல்படுத்துவது உத்தமம்.

கேள்வி எனக்கு வேலையில் உயர்வு எப்போது கிடைக்கும்.
சிவசக்தி ஈரோடு.
பதில் பொதுவாக ஒருவருக்கு ஜென்ம லக்கினத்திற்கு நட்பு கிரகங்களின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள், பதவி உயர்வுகள் கிடைக்கும்.
                சிம்ம லக்கினம், பூர நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது 12ல் உள்ள ராகுவின் திசையில் 2ல் உள்ள சனியின் புத்தி 17.7.2018 முடிய நடைபெறவுள்ளது. ராகு, சனி இருவரும் லக்கினாதிபதியான சூரியனுக்கு பகை கிரகம் என்பதால் வேலையில் முன்னேற்ற தடை உண்டாகிறது. 12ல் உள்ள ராகு திசை என்பதால் வெளியூர், வெளிநாடு மூலம் சாதகப்பலன்களை அடைய முடியும். 2ல் உள்ள சனியின் புக்தி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, மேலதிகாரிகளிடம் கவனமாக இருப்பது உத்தமம். அடுத்து வரவிருக்கும் புதன் புக்தி காலத்தில் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

கேள்வி நான் பி படித்துள்ளேன், எனக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும், திருமணம் எப்போது.
ஆறுமுகச்சாமி ,இராஜப்பாளையம்
பதில்
மீன லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது லக்கின ராசிக்கு 8ல் அமைந்துள்ள கேது திசை 29.07.2018 முடிய நடைபெறுகிறது. சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் பிறந்துள்ள உங்களுக்கு 3வது திசையாக கேது திசை நடப்பது நல்லது அல்ல, பொதுவாக 3வது திசை நடைபெறும் போது உழைப்பிற்கான பலனை அடைய தடை உண்டாகும். அதுவும் உங்களுக்கு 8ல் அமைந்த கேது திசை என்பதால் கடுமையான நெருக்கடிகளை தருகிறது.     
அடுத்து வரும் 29.07.2018 முதல் லக்கின திரிகோணத்தில் அமைந்துள்ள சுக்கிர திசை தொடங்க உள்ளது, மீன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் 3,8க்கு அதிபதி என்றாலும் திரிகோண ஸ்தானங்களில் அமையும் கிரகங்கள் நற்பலன் தரும் என்பதால் சுக்கிர திசை தொடங்கும் போது நல்ல வேலை, திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். அதுவரை வேலை விஷயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும்

கேள்வி  என் மனைவி இறந்து 5வருடம் ஆகிறது மறுமணம் உண்டா
                                                நடராஜன் சிதம்பரம்
பதில் பொதுவாக லக்கின ராசிக்கு 2,7ல் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் அமைந்து அக்கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றால் மணவாழ்வில் பிரச்சனை ஓற்றுமை குறைவு, இழப்பு உண்டாகிறது,
                கடக லக்கினம், சதய நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு 7ம் அதிபதி சனி சூரியனின் வீடான 2ம் வீட்டில் பகை பெற்று கேதுவீன் நடசத்திரமாக மகத்தில் அமைந்து தற்போது சனி திசை (19.03.2023 முடிய) நடைபெறுகிறது. சனி ராசிக்கு 7ல் அமைந்ததும் சாதகமற்ற அமைப்பு என்பதால் மண வாழ்வில் இழப்பை உண்டாகியது,
                சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதால் மறுமண யோகம் உண்டு எனறாலும் சாதகமற்ற சனி திசை நடப்பதால் மறுமணம் செய்தாலும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிந்தித்து செயல்படுவது நல்லது,


கேள்வி           எனக்கு அரசு உத்தியோகம் எப்போது கிடைக்கும்.
அருண், சென்னை
பதில்&
                                ரிஷப லக்கினம், கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசியல் பிறந்துள்ள உங்களுக்கு அரசாங்க உத்தியோகத்திற்கு காரகனாக விளங்கக்கூடிய சூரியன் 10ம் வீட்டில் இருந்தாலும் பகை கிரகமான ராகுவீன் நட்சத்திரமான சதயத்தில் அமைந்துள்ளதால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் அமைப்பு கிரக அமைப்பு ரீதியாக குறைவு.
                உங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி சனி 8ம் வீட்டில் 12ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்று கால புருஷப்படி 9ம் வீடான தனுசு ராசியில் உள்ளது. லக்கின ராசிக்கு 9,12க்கு அதிபதிகள் சேர்க்கை ஏற்பட்டு உள்ளதாலும், தற்போது கால புருஷப்படி 12ம் வீடான மீன ராசியில் உள்ள ராகு திசை நடப்பதாலும் ஜாதக ரீதியாக அரசு உத்தியோகத்தை விட பன்நாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அமைப்பு, வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் வலுவாக உள்ளது.  
                தறபோது ராகு திசையில் கேது புத்தி 01.08.2017 முடிய நடைபெறுவதால் அடுத்து வரும் சுக்கிர புத்தி முதல் நல்ல வேலை கிடைக்கும்.

கேள்வி எனக்கு அரசு உத்தியோகம் எப்போது கிடைக்கும்.
இராஜேஸ்வரி,
பதில்&             மிதுன லக்கினம், பூச நட்சத்திரம், கடக ராசியல் பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி குரு லக்கினாதிபதி புதன் நடசத்திரமான ஆயில்யத்தில் கடக ராசியில் உச்சம் பெற்று உள்ளார், குரு நட்பு கிரகமான சந்திரன் சேர்க்கை பெற்று சந்திரன் வீட்டில் உள்ளார். சந்திரனும் ஆட்சி பெற்று உள்ளது.
                அரசாங்க உத்தியோகத்திற்கு காரகனாக விளங்கக்கூடிய சூரியன் லக்கின திரிகோணத்தில் 10ம் அதிபதி குருவீன் நட்சத்திரமான புனர்பூசத்தில் அமைந்து இருப்பதும் சிறப்பு என்பதால் கண்டிப்பாக அரசு உத்தியோகம் கிடைக்கும், 8ல் அமைந்த சனி புத்தி முடிந்து தற்போது சுக்கிர திசையில் புதன் புத்தி 27.06.2019 முடிய நடைபெறுவதால் விரைவில் அரசு, அரசு சார்ந்த துறையில் வேலை கிடைக்கும்   

கேள்வி           என் மகன் படிப்பு எப்படி இருக்கும்
சோனிராஜ்  சென்னை

பதில்                
                                கன்னி லக்கினம், அவிட்ட நட்சத்திரம், மகர ராசியில் பிறந்த உங்கள் மகன் ஜாதகத்தில் 4ம் அதிபதி குரு லக்கின திரிகோணத்தில் அமைந்து இருப்பதும் சூரியன் புதன் இனைந்து உச்ச திரிகோண ஸ்தானமான 9ல் அமைந்து இருப்பதும் அற்புதமான அமைப்பாகும் என்பதால் கல்வியில் சாதிக்கும் யோகம் உண்டு.
                தற்போது ராகு திசை 08.05.2027 முடிய நடைபெறுகிறது, படிக்கும் வயதில் ராகு திசை நடப்பதால் விளையாட்டு தன, பிடிவாதம் இருக்கும் என்றாலும் ராகு குரு வீட்டில் உள்ளதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவார். உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

கேள்வி  என் மகனுக்கு திருமணம் நடைபெறவில்லை  எப்போது நடக்கும் .
சம்பத் ஆரணி
பதில்&
லக்கின ராசிக்கு 2,7ல் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் அமைந்தால் திருமணம் நடைபெற தடை, மணவாழ்வில் பிரச்சனை, ஓற்றுமை குறைவு உண்டாகிறது,
                சிம்ம லக்கினம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி சனி 2ல் அமைந்து உள்ளது. லக்கின ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு பகை கிரகமான சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் நடைபெற தடை தாமதம் உண்டாகியதுஅது மட்டும் இல்லாமல் கேது நட்சத்திரத்தில் பிறந்து தற்போது சந்திர திசை நடைபெறுவதால் திருமண தடை உண்டாகிறது, தற்போது சந்திர திசையில் குடும்ப ஸ்தானமான 2ம் அதிபதி புதன் புத்தி 24.08.2017 முடிய நடப்பதாலும், ராசிக்கு 2ல் கோட்சார ரீதியாக குரு சஞசரிப்பதாலும் திருமண முயற்சி மேற்கொண்டால் 2017 தொடக்கத்தில் நல்ல வரன் அமையும் யோகம் உள்ளது, கேது நட்சத்திரத்தில் பிறந்து உள்ளதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.







No comments: