Wednesday, August 31, 2016

கோட்சாரத்தில் புதன்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.


புந்தி, அலி என அழைக்கப்படுகின்ற புதன் கல்விக்குரிய காரகனாகவும், தாய் வழி மாமனுக்குரிய காரகனாகவும் விளங்குகிறது. புதன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்கும். எப்போதும் சூரியனை ஒட்டியே காணப்படும். புதனுக்கு மிதுனம், கன்னி ஆகியவை ஆட்சி வீடாகும். கன்னியில் ஆட்சி, உச்சமும், மீனத்தில் நீசமும் அடையும். வடிவம் அறுகோணம். கழுத்து, நரம்புகளை ஆளமை செய்யும். புதன் வைசிய குலமும், பச்சை நிறமும், உலோகத்தில் பித்தளையையும், ரத்தினத்தில் மரகதப் பச்சையையும், திசையில் வடக்கையும் பெற்ற ஒரு அலி கிரகமாகும். நெடிய உருவம். சமித்து நாயுருவி. சீதோஷ்ணமாக புசிப்பவர். சுவை உவர்ப்பு. வாகனம் குதிரை. துவாரம் இடது காது, தூபம் கற்பூரம். வஸ்திரம் நல்ல பசுமை வண்ணம். அதி தேவதை விஷ்ணு. வாயு கிரகம். வாத நாடி. புஷ்பம் வெண் காந்த மலர்கள். நவதானியம் பச்சை பயிறு. வித்யா காரகன் புதன் பாவகிரக சேர்க்கையானால் பாவியாகவும், சுப கிரக சேர்க்கையானால் சுபராகவும் செயல்படும். தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்யும். சூரியனும், சுக்கிரனும் நட்பு கிரகமாகும். குரு செவ்வாய், சனி, ராகு, கேது சமம். சந்திரன் பகை. புதனின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி. 
சூரியனுக்கு 12 டிகிரிக்குள் புதன் அமையப் பெற்றால் அஸ்தங்கம் அடையும். சூரியனை ஒட்டியே செல்வதால் பிரதான காலம் அஸ்தங்கமாகவே இருக்கும். புதன் சூரியனுக்கு மிக அருகில் சஞ்சரிக்கும் போது பிறந்தவர்களுக்கு கல்வியில் தடை, மாமனுக்கு தோஷம் போன்ற கெடுபலன் உண்டாகிறது. புதன் அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கணிதம், கம்ப்யூட்டர்களில் விருப்பம் இருக்காது. புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நல்ல கல்வி, அறிவு கூர்மை உண்டாகும். நட்பு வீட்டில் இருந்தால் நகைச் சுவையுணர்வு இருக்கும். 3மாதங்களுக்கு ஒரு முறை 3 வாரம் வக்ரம் பெறும். புதனால் உண்டாகும் நோய்கள் மனநோய், சோகை, புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, தலைவலி, ஞாபக சக்தி குறையும் அமைப்பு, காக்காய் வலிப்பு, வாதநோய், வெண்குஷ்டம், ஆண்மை குறைவு, சீதள நோய்கள். புதன் 2,4,6,8,10,11 இந்த இடங்களில் வந்தால் மட்டுமே சுப பலனை உண்டாக்கும். மற்ற இடங்களில் சுமாரான பலன்களே உண்டாகும். 

கோட்சார ரீதியாக புதன் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள்
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிக்கும் காலத்தில் பண விரயம், மதிப்பு குறையும் அமைப்பு, அதிகமான அலைச்சல், தலைவலி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் ஏற்படும்.
2ல் சஞ்சரிக்கும் போது தேவையற்ற பேச்சுக்களால் அவமானம், கோபமாக வார்த்தைகளை பேசும் சூழ்நிலை உண்டாகும்.
3ல் சஞ்சரிக்கும் போது உற்றார் உறவினர்களுடன் விரோதம், பகைவரால் தொல்லை ஏற்படும்.
4ல் சஞ்சரிக்கும் போது தாராள தன வரவுகள், திருமணம் நடைபெறும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, உயர்வு உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
5ல் சஞ்சரிக்கும் போது பயம், பயணங்களால் அலைச்சல், குழந்தைகளால் மனசஞ்சலம், விரோதம் உண்டாகும்.
6ல் சஞ்சரிக்கும் போது சிறப்பான தேக நிலை, எடுக்கும் காரியங்களில் வெற்றி, எதிலும் மேன்மையான நிலை ஏற்படும்.
7ல் சஞ்சரிக்கும் போது கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு, குடும்பத்தில் பிரச்சனை, தேவையற்ற அவமானங்கள், பணகஷ்டம் உண்டாகும்.
8ல் சஞ்சரிக்கும் போது புத்திரர்களால் அனுகூலம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வித்தைகளில் தேர்ச்சி, நல்ல கல்வி முன்னேற்றம், புத்தியில் தெளிவு, மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற சிறப்பான நற்பலன்கள் ஏற்படும்.
  9ல் சஞ்சரிக்கும் போது தேவையற்ற வீண்பழிகளை சுமக்கும் நிலை, அலைச்சல், டென்ஷன், விரோதம், எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகள் உண்டாகும்.
      10ல் சஞ்சரிக்கும் காலம் செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம், உயர்வு, நல்ல தனவரவு, போட்டி பொறாமை எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், சிறப்பான ஆரோக்கியம் ஏற்படும்.
      11ல் புதன் சஞ்சரிக்கும் போது தனலாபம், எல்லோரும் பாராட்டும் படியாக நடக்கும் அமைப்பு, வண்டி வாகனம் மூலம் அனுகூலம் போன்ற சுபபலன்கள் நடைபெறும்.
      12ல் சஞ்சரிக்கும் காலத்தில் பகைவர்களால் தொல்லை, தூக்கம் சரியாக அமையாத நிலை, கண்களில் பாதிப்பு, வியாதி, அவமானம், மனக்கலக்கம், போன்ற அசுப பலன்கள் உண்டாகும்.
     
புதன் பகவான் கோட்சார ரீதியாக சுபகிரக சேர்க்கை பெற்றிருந்தால் கெடுபலன்கள் இருக்காது. பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் கெடுபலன்களையே ஏற்படுத்துவார். குரு சுக்கிரன் வளர்பிறைச் சந்திரனால் பார்க்கப்பட்டால் நன்மைகள் ஏற்படும்.
      புதனின் சஞ்சாரம் சாதகமற்று இருக்கும் காலத்தில் புதனின் அம்சமான விஷ்ணு பகவான் பூஜிப்பது, பச்சை பயிறு தானம், பச்சை பயிறு சுண்டலை புதன் பகவானுக்கு நைவேத்தியம் செய்து தானமாக வழங்குவதும்,பச்சை வஸ்திரம் சாற்றுவதும், விஷ்ணு சகஸ்ர நாமத்தை உச்சரிப்பதும் உங்களது கெடுபலன்களை குறைக்கும். வசதி படைத்தவர்கள் விட்டில் சுதர்சன ஹோமம் செய்யலாம். மதுரை மீனாட்சி ஆலயம் சென்று வணங்கி வரலாம். மரகத பச்சை இரத்தினத்தை அணியலாம்.
      

No comments: