Monday, September 26, 2016

கோட்சாரத்தில் சுக்கிரன்

கோட்சாரத்தில்  சுக்கிரன்

அசுர குரு, வெள்ளி, களத்திரக்காரகன் எனப்படும் சுக்கிரன் களத்திரக் காரகனாகும். உடலில் உள்ள மர்ம உறுப்புகளுக்கும், காதலுக்கும், காமத்திற்கும் காரகனாவார். பஞ்ச பூதத்தில் நீர் கிரகமாகும். சிலேத்தும் நாடி, பிரம்ம குலம், உலோகம் வெள்ளி, ரத்தினம் வைரம், திசை தென்கிழக்கு, பெண் கிரகம், சம வடிவம், சமித்து அத்தி, தித்திப்பு சுவை, குளிர்ச்சியாக புசிப்பவர், கருட வாகனம், நவதுவாரத்தில் ஆண், பெண் குறி, தூபம் லவங்கம், தானியம் மொச்சைப் பயிறு, வெள்ளை வஸ்திரம்.  அதிதேவதை லட்சுமி, புஷ்பம் வெண் தாமரை மலர், கிழமை வெள்ளி, எண் கோண வடிவமானது. 

சுக்கிரன் தான் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்யும். பரணி, பூரம்,  பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி, ரிஷபம், துலாம் ராசி ஆட்சிவீடு. மீன ராசியில் உச்சமும் கன்னி ராசியில் நீசமும் பெறும். புதன், சனி, ராகு, கேது நட்பு. செவ்வாய், குரு சமம். சூரியன், சந்திரன் பகை. சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் கோட்சார ரீதியாக 1மாதம் தங்கும். சூரியனுக்கு 17 பாகைக்குள் சஞ்சரிக்கும் போது அஸ்தங்கம் பெறும். கோட்சார ரீதியாக சுக்கிர 1,2,3,4,5,8,9,11,12ம் இடங்களில் வரும் போது சிறப்பான நற்பலன்களை ஏற்படுத்தும். 6,7,10ம் வீடுகளில் சஞ்சரிக்கும் போது அசுபப் பலனை உண்டாக்கும். இவ்விடங்கள் ஆட்சி, உச்ச நட்பு வீடாக இருந்தால் நற்பலன்களை தரும். 

ஜென்ம ராசி முதல் 12 ராசிகளில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள்

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது 7ம் வீட்டை பார்வை செய்வார். எனவே குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் சந்தோஷம், வாசனை திரவியங்களால் லாபம், திருமண சுப காரிய முயற்சிகள் நடைபெறும் அமைப்பு, பெண்களால் அனுகூலம், ஆடை ஆபரண, பொன் பொருள் சேர்க்கை யாவும் உண்டாகும்.

2ல் சஞ்சரிக்கும் போது எதிலும் திறமையுடன் செயல்படும் அமைப்பு, நல்ல அறிவாற்றல், சிறப்பான லட்சுமி கடாட்சம், பேச்சால் வாக்கால் முன்னேற்றம், அரசாங்கத்தில் மதிப்பு, தாராள தனச் சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

      3ல் சஞ்சரிக்கும் போது புதிய இடம் வாங்கும் யோகம், மதிப்பு, மரியாதை உயர்வு, நல்ல ஆரோக்கியம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, வாசனை திரவியங்களால் லாபம், சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும்.

      4ல் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் தாராள தனவரவு, குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அமைப்பு, விருந்தினர்களுடன் நல்ல சாப்பாடு, சுகமான வாழ்க்கை ஏற்படும்.

      5ல் சஞ்சரிக்கும் காலத்தில் அழகிய குழந்தை பாக்கியம், நல்ல பெயர் புகழ், பூர்வீக வழியில் அனுகூலம் பொருளாதார மேன்மை உண்டாகும்.

      6ல் சஞ்சாரம் செய்கின்ற போது பெண்களால் அவமானம், மனைவிக்கு பாதிப்பு, வியாதி, மர்ம உறுப்புகளில் நோய் யாவும் உண்டாகும்.

      7ல் சஞ்சரிக்கும் காலத்தில் அலைச்சல், மனைவிக்கு பாதிப்பு, தீயவர்களுடன் சேர்க்கை உண்டாகும்.

      8ல் சஞ்சரிக்கின்ற போது பெண்களால் சுகம், அனுகூலம், உற்றார், உறவினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி, திருமணம் போன்ற சுபகாரியகளை சிறப்பாக செய்து முடிக்கும் அமைப்பு, மனை மூலம் லாபம் உண்டாகும்.

      9ல் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, அதிக லாபம், வித்தைகளை சகற்கும் வாய்ப்பு, தர்மங்கள் செய்யும் அமைப்பு, தந்தையால் உதவிகள் உண்டாகும்.

10ல் சஞ்சரிக்கும் காலத்தில் சொந்த பந்தங்களால் அனுகூலம், எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல், மதிப்பு, மரியாதை உயர்வு, உத்தியோகத்தில் பாராட்டு உண்டாகும்.

11ல் சஞ்சரிக்கும் போது நல்ல ஆடை, ஆபரணச் சேர்க்கை, பணவரவு, மனைவியால் அனுகூலம் ஏற்படும்.
12ல் சஞ்சரிக்கும் போது நல்ல தூக்கம், சிறப்பான கட்டில் சுகம், தாராள தனவரவு, நல்ல சாப்பாடு சாப்பிடும் அமைப்பு உண்டாகும்.

சுக்கிரனின் அஸ்தங்கமும் மகிழ்ச்சியற்ற மணவாழ்வும்

நவகிரகங்களில் நாயகன் எனப்படும் சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த நெருப்பு கிரகம் ஆகும். சூரியன் பல கோடி மைல்களுக்கு தூரத்தில் உள்ள போதே அவற்றின் கதிர்கள் ஏற்படுத்தும் உஷ்ணத்தினை தாங்க முடிவதில்லை. அதன் அருகில் சென்றால் என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது. சூரியனுக்கு மிக அருகில் சென்று சஞ்சரிக்கும் கிரகம் தனது முழு பலத்தையும் இழக்கின்றது. ஒரு ராசியில் 1மாதம் என சஞ்சரிக்கும் சூரியன் ராசி மண்டலத்தை சுற்றி வர ஒரு வருடத்தினை எடுத்துக் கொள்ளும். தனக்கு அருகில் சஞ்சரித்து வரும் கிரகங்களின் பலத்தை குறைத்து விடும். இதற்கு அஸ்தங்கம் என்று பெயர். பொதுவாகவே புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள்  சூரியனுக்கு அருகிலேயே சஞ்சரிக்கும். புதன் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால் பிரதான காலம் அஸ்தமானம் பெற்றே இருக்கும். புதன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் பிறந்தால் கல்வியில் தடை, தாய் மாமனுக்கு தோஷம், கணிதம், கம்ப்யூட்டர் துறையில் ஈடுபாடற்ற நிலை உண்டாகிறது.

      சுக்கிரனும் சூரியனுக்கு ஒட்டியே சஞ்சாரம் செய்யும். சூரியன் இருந்த ராசிக்கு முன்போ பின்போ, அல்லது சூரியன் இருக்கும் ராசியிலோ தான் சஞ்சரிக்கும். சுக்கிரன் சூரியனுக்கு 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கமடையும். சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தால் மர்ம உறுப்புகளில் ரகசிய நோய்கள், சர்க்கரை வியாதி, திருமணம் அமைய தாமதம், இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை போன்ற கெடுபலன்கள் உண்டாகும்.

அஸ்தங்கம் பெற்ற கிரகம் தங்கள் காரகத்துவமாக கெடுபலன்களை உண்டாக்கினாலும் அஸ்தங்கம் பெற்ற கிரகம் ஜெனன ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்று இருந்தால் அஸ்தங்க தோஷம் விலகி நல்ல பலனை உண்டாக்கும். கோட்சாரத்திலும் சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் காலங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்வது நல்லதல்ல. அப்படியே செய்ய நேரிட்டாலும் தம்பதிகளின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லாத நிலை உண்டாகிறது. சுக்கிரன் களத்திரக்காரகன் என்பதால் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமணம் செய்வது இல்லற வாழ்வில் ஈடுபடுவது கண்டிப்பாக சந்தோஷக் குறைவையே உண்டாக்கும். எனவே இதனை தவிர்ப்பது உத்தமம்.

No comments: