Wednesday, September 14, 2016

கோட்சாரத்தில் குரு

கோட்சாரத்தில் குரு
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


நவகிரகங்களில் வருடக்கோள் பொன்னவன், வித்யாகாரகன், ஆசான், பிராமணன், அந்தணன், ஆச்சாரியன், தனக்காரகன், புத்திரக்காரகன் என்றெல்லாம் போற்றப்படும் குரு முழுமையான சுபகிரகமும், ஆண் கிரகமும் ஆகும். நிறத்தில் மஞ்சளையும், நெடிய வடிவமும், பஞ்ச பூதத்தில் தேயு கிரகமும், வாத நாடியையும் உடையது. பிரம்ம குலம், திசை ஈசான்யம், தானியம் கடலை, புஷ்பம் முல்லை மலர் சுவை தித்திப்பு, சமித்து அரசு, பொன்னிற வஸ்திரம் உடையது. உறுப்பு வலது காது நவதுவாரம், வயிறு பகுதியை ஆளும். ரத்தினம் புஷ்பராகம். வாகனம் யானை உரிய தூபம் ஆம்பல், அதிதேவதை பிரம்மன் தட்சிணா மூர்த்தி. கிழமை வியாழன். 
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள் குரு நின்ற வீட்டை விட பார்வை செய்யும் இடத்திற்கு பலம் அதிகம். எந்த தோஷம், குற்றம் இருந்தாலும் குரு பார்வை அதனை போக்கி விடும். தான் இருக்கும் வீட்டிலிருந்து 5,7,9ம் வீட்டை பார்வை செய்யும். ஆட்சி வீடுகள் தனுசு, மீனம் உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம் ஆகும். இவருக்கு சந்திரன், சூரியன், செவ்வாய், நட்பு கிரகமாகும். சனி, ராகு, கேது சமமானவர். புதன், சுக்கிரன் பகை. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குருவின் நட்சத்திரங்களாகும். குரு திசை 16 வருடங்கள் நடைபெறும். ராசிக் கட்டத்தில் குரு தனியாக அமைவதை விட கிரக சேர்க்கையுடன் அமைவது சிறப்பாகும். குரு ஆட்சி உச்சம் பெற்றால் மிகவும் அற்புதமான பலன்களை உண்டாக்கும். 

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் வீதமாக ராசி மண்டலத்தை சுற்றி வர 12 வருடங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி சுற்றி வரும் போது சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் மகாமகம், மாசி மகம் எனப்படும். 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்ப கோணத்தில் இதனை மிகப்பெரிய ஸ்தல ஸ்நானமாக கொண்டாடி வருகின்றனர். குரு சாதகமாக அமைகின்ற போது மிகவும் அற்புதமான பலன்களையும், சாதகமற்று அமையும் போது அதிகமான கெடுபலன்களையும் ஏற்படுத்தி விடும். கோட்சார ரீதியாக 2,5,7,9,11ம் பாவங்களில் சஞ்சரிக்கின்ற காலங்களில் மிகவும் சிறப்பான பலன்களை உண்டாக்கும். 1,3,4,6,8,10,12ம் பாவங்களில் சஞ்சரிக்கும் சுமாரான நற்பலன்களே உண்டாகும்.  


குரு 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள்

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது அலைச்சல், டென்ஷன், இடமாற்றம், அவமானப்படும் நிலை, தேவையற்ற விரோதம், பொருளாதார நிலையில் தடைகள், கடன்படும் நிலை, சிறை செல்லும் நிலை உண்டாகும்.

2ல் சஞ்சரிக்கின்ற காலத்தில் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி, தொழில் வியாபார நிலையில் பிரமாதமான முன்னேற்றம், லாபம் உண்டாகும். சிறப்பான பொருளாதார நிலை, தாராள தன வரவுகள் போன்றவற்றால் சேமிப்புகள் கூடும். வீடு மனை வண்டி வாகன சேரும். திருமணம் போன்ற சுபகாரியம் நடைபெறும். புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலம், பெரியவர்களின் ஆசிர்வாதம் கிட்டும். கல்வியில் உயர்வு, உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.

3ல் சஞ்சரிக்கும் காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகள், இருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய நிலை, ஊர் விட்டு ஊர் போகும் நிலை, உத்தியோகத்தில் மாறுதல், சகோதரர்களிடையே வீண் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

4ல் சஞ்சரிக்கும் காலத்தில் அலைச்சல், டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு, குடும்பத்தில் பிரிவு, பிரச்சனை, தாய்க்கு பாதிப்பு, அவமானப்படும் நிலை, தொழில் பண வரவில் தடை, கவலை, கஷ்டங்கள், உற்றார், உறவினர்களுடன் பகை, வீண் பழிகளை சுமக்க நேரிடும் அமைப்பு போன்ற அசுபப் பலன்கள் உண்டாகும்.

5ல் சஞ்சரிக்கும் போது ஆண் புத்திர பாக்கியம், பூர்வீக வழியில் சொத்து சேர்க்கை, புத்திர வழியில் பூரிப்பு, எதிர்பாராத பண வரவு, கடன் இல்லாத நிலை, திருமண -சுப காரியத்தை முடித்து மனமகிழ்ச்சி அடையும் அமைப்பு, ஆலய தரிசனங்களும் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனம், உயர் பதவி அமைப்பு, மாணவர்களுக்கு உயர் கல்வி சிறப்படையும் அமைப்பு உண்டாகும்.

6ல் சஞ்சரிக்கும் காலத்தில் தேவையற்ற விரோதம், எதிர்ப்புகள், உடல் நிலையில் பாதிப்புகள், பணக்கஷ்டம், இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு, பகைவர் மற்றும் கடன்காரர்களால் அதிக தொல்லைகள் எதிர்பார்த்த பணவரவுகள் தடைபடும் நிலை, வம்பு வழக்குகளல் ஈடுபட வேண்டிய நிலை போன்ற அசுபப் பலன்கள் நடைபெறும்.

    7ல் சஞ்சரிக்கும் காலத்தில் சுபகாரியங்கள் கை கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். அழகான புத்திர பாக்கியம் அமையும். எதிர்பாராத பண வரவுகளால், வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனைவி வழியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம், கூட்டாளிகளால் லாபம், சாஸ்திர கலைகளை கற்றறியும் வாய்ப்பு, போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

8ல் குரு சஞ்சரிக்கும் காலத்தில் உடல் நிலை பாதிப்பு, பயணங்களில் எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை, எடுக்கும் முயற்சிகளில் தடை, நஷ்டம், தேவையற்ற விரோதம், திருமண சுபகாரியங்கள் நடைபெற தடை, அரசாங்கத்தால் வீண் பிரச்சனை, தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.

    9ல் சஞ்சரிக்கும் காலத்தில் தந்தை வழியில் சிறப்பான பலன்கள் உண்டாக கூடிய அமைப்பு, அசையும் அசையா சொத்துக்கள் சேர்க்கை,  உத்தியோகத்தில் அதிகாரம் உயர்பதவிகளை அடையும் வாய்ப்பு, திருமணம் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, அழகான புத்திர பாக்கியம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். 

10ல் சஞ்சரிக்கும் காலத்தில் புத்திரர்களால் மனசஞ்சலம், பிரிவு, பிரச்சனை, அலைச்சல், டென்ஷன், கண்களில் பாதிப்பு, உடல் சோர்வு, செய்கின்ற தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், மறைமுக போட்டி பொறாமைகளால் மன சஞ்சலம், கூட்டுத் தொழிலில் பிரச்சனை, உடன் இருப்பவர்களே துரோகம் செய்யும் சூழ்நிலை, அரசாங்கம் மூலம் சோதனைகள் உண்டாகும்.

11ல் சஞ்சரிக்கும் காலத்தில் இழந்த செல்வங்களை மீட்கும் அமைப்பு, உத்தியோகத்தில் உயர் பதவிகளை அடையும் வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, சிறப்பான ஆரோக்கியம், சகோதரர்களால் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகளால் செல்வச் செல்வாக்கு, வண்டி வாகனம், ஆடை ஆபரணச் சேர்க்கை, பூமி மனை வாங்கும் அமைப்பு, குழந்தை பிறக்கும் யோகம் யாவும் அமையும்.

12ல் சஞ்சரிக்கும் காலத்தில் தான தர்ம காரியதிற்காக செலவுகள் செய்யும் அமைப்பு, தூரப் பயணங்களால் அலைச்சல், டென்ஷன், பயணங்களில் விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலை, கஷ்டம், தூக்கமின்மை, தேவையற்ற வீண் விரயங்கள் போன்ற அனுகூலமற்ற அமைப்பு உண்டாகும்.

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது ராமர் காட்டிற்கு போனதும், சீதை சிறைப் பட்டதும்.

      3ல் குரு சஞ்சரித்த போது துரியோதனன் படை அழந்ததும்
4ல் குரு சஞ்சரித்த போது தர்ம புத்திரர் வன வாசம் போனதும்
சத்திய மாமுனிக்கு 6ல் குரு சஞ்சரித்த காலத்தில் காலில் விலங்கிடப்பட்டதும்
      வாலிக்கு 8ல் குரு சஞ்சரித்த போது பட்டம் இழந்து மரணமானதும்.
  ஈசனுக்கு 10ல் குரு வந்த போது மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்டதும்.
  ராவணனுக்கு 12ல் குரு சஞ்சரித்த போது முடி வீழ்ந்ததும், 
குரு 10ல் இருந்தால் பதவி பாழ் 
என குருவால் ஏற்பட்ட துன்பங்களாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.
       
குரு பகவானின் [வேதை ஸ்தானத்து கிரக சஞ்சாரம்] கோட்சார பலன் எப்போது எதிர் மறையாக பலன் தருகிறது.

குரு பகவானின் சகடை காலத்தில் எப்போது நற்பலன் உண்டாகும்.
      ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது அதனுடன் வேறு கிரகம் இருந்தால் அக்காலம் வரை குரு பகவான் அசுபப் பலனை தர மாட்டார்.

      குரு பகவான் 3ல் சஞ்சரிக்கும் போது ஜென்ம ராசிக்கு 2ல் வேறு ஒரு கிரகம் சஞ்சரிக்கும் வரையில் குரு தீய பலனை தர மாட்டார்.

      குரு பகவான் 4ல் சஞ்சரிக்கும் போது ஜென்ம ராசிக்கு 5ல் வேறு ஒரு கிரகம் சஞ்சரிக்கும் வரை கெடுபலனை தர மாட்டார்.

      குரு பகவான் 6ல் சஞ்சரிக்கும் போது அக்குருவுடன் வேறு கிரகம் ஒன்று கூடி சஞ்சரிக்கும் காலம் வரை குரு அசுபப் பலனை தர மாட்டார்.

குரு பகவான் 8ல் சஞ்சரிக்கும் காலத்தில் ஜெனன ராசிக்கு 7ல் வேறு ஒரு கிரகம் சஞ்சரிக்கும் வரை குரு கெடு பலனை தர மாட்டார்.

  குரு பகவான் 10ல் சஞ்சரிக்கும் போது ஜெனன ராசிக்கு 9ல் வேறு ஒரு கிரகம் சஞ்சரிக்கும் வரை குரு கெடுபலனை தர மாட்டார்.

குரு 12ல் சஞ்சரிக்கும் போது ஜெனன ராசிக்கு 11ல் வேறு கிரகம் சஞ்சரிக்கும் வரையில் குரு கெடுபலனை தர மாட்டார்.

      பொதுவாகவே ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போதும் ராசிக்கு 6லும் சஞ்சரிக்கும் போது அதனுடன் வேறு கிரகம் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கும் வரை கெடுபலனை ஏற்படுத்த மாட்டார்.

      ஜெனன ராசிக்கு 3,8,10,12 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் போது குருவுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் அதாவது முறையே 2,7,9,11ம் வீட்டில் வேறு ஒரு கிரகம் சஞ்சரிக்கும் காலம் வரை குருபகவான் கெடுபலன்களை ஏற்படுத்த மாட்டார்.

      ஜென்ம ராசிக்கு 4ல் குரு சஞ்சரிக்கும் போது ஜெனன ராசிக்கு 5ம் வீட்டில் குருவுக்கு அடுத்த வீட்டில் வேறு ஏதாவது ஒரு கிரகம் சஞ்சரிக்கும் காலம் வரை குரு பகவான் கெடுதலை தர மாட்டார்.

குருபகவான் சாதகமான சஞ்சாரத்தில் பாதகமான பலனை எப்போது செய்வார்?

      குரு ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் போது வேறு ஏதாவது ஒரு கிரகம் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் போது வேறு ஏதாவது ஒரு கிரகம் ராசிக்கு 12ல் சஞ்கரித்தால் குரு நற்பலனை தராமல் கெடு பலனையே தருவார்.
      குரு ஜென்ம ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் போது மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று ராசிக்கு 4ல் சஞ்சரித்தால் குருவால் ஏற்படும் சுப பலன்கள் பாதிக்கும்.
    குரு ஜென்ம ராசிக்கு 7ல் சஞ்சரிக்கின்ற போது மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று ராசிக்கு 3ல் சஞ்சரித்தால் குரு சுபப் பலனை ஏற்படுத்த மாட்டார்.
    குரு ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் போது மற்ற கிரகங்களில் ஒன்று 10ம் வீட்டில் சஞ்சரித்தால் குரு தரும் பலன் பாதிக்கும்.
      குரு ஜென்ம ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் போது பிற கிரகங்களில் ஏதேனும் ஒன்று 8ல் சஞ்சரித்தால் குரு சுபப் பலனை தராது.
     
குரு சாதகமற்று சஞ்சரிக்கும் காலங்களில் மர்ம உறுப்புகளில் நோய், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, உதிரப் போக்கு, வயிற்று வலி, பித்தநீர் கல், ரண காயம், சிராய்ப்பு, சிறு நீரகக் கோளாறுகள், மயக்கம் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
     
குருவுக்குரிய பரிகாரங்களை மேற்கொண்டால் நோய் குணமாகி நிம்மதி உண்டாகும். குரு தட்சிணா மூர்த்திக்கு வியாழக் கிழமை விரதம் மேற்கொண்டு கொண்டை கடலை மாலை சாற்றுவது, கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து தானமாக வழங்க வேண்டும். முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கேற்றி மஞ்சள் பொன்நிற வஸ்திரம் சாற்றுவதும், குரு காயத்ரி, குரு மந்திரம் சொல்வது உத்தமம். ஏழை பிராமணர்களுக்கு முடிந்த உதவியை செய்வதும், பசுவுக்கு அகத்திக் கீரை தருவதும் உத்தமம். குருவின் ஆலயமான ஆலங்குடி சென்று வணங்கலாம்.

குருவின் வக்ர கதி

      நவ கிரகங்களில் முழுச் சுபர் எனப்படும் குரு கோட்சார ரீதியாக ஒரு ராசியில் ஒரு வருடம் தங்கும். சில காலம் பின்னோக்கி செல்லும் போது தர வேண்டிய பலனை தராமல் எதிர்மறையான பலனை உண்டாக்கும். கோட்சார ரீதியாக 2,5,7,9,11ல் குரு சஞ்சரிக்கும் காலம் குருபலம் உள்ள காலமாகும். குரு பலம் உள்ள காலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். குருபலம் இல்லாத ஸ்தானங்களில் குரு சஞ்சரிக்கும் போது கூட அந்த ஸ்தானத்தில் குரு வக்ரம் பெற்றால் வக்ர காலத்தில் குருபலம் உள்ளது போல் நற்பலன்களை ஏற்படுத்தி விடும். 
குரு சூரியனுக்கு 9ம் வீட்டிற்கு வரும் போது வக்ரம் பெறும். சூரியனுக்கு 5ம் வீட்டிற்கு வரும் போது வக்ர நிவர்த்தியாகும். வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கும் குரு கோட்சார ரீதியாக 2,5,7,9,11ல் சஞ்சரிக்கின்ற போது ஏற்றமிகு பலன் தரும் என்றாலும் குரு வக்ரம் பெற்று சஞ்சரித்தால் நற்பலன்கள் குறையும். அது போல 1,3,4,6,8,10,12 ஆகிய ஸ்தானங்களில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலத்தில் கெடுபலனை தரும் என்றாலும் குரு வக்ரம் பெற்று இருந்தால் கெடுபலன்கள் குறைந்து விடும்.

குருபலமும் திருமணமும்

ஒருவருக்கு திருமணம் செய்ய வேண்டிய வயதில் குருபலம் வந்தால் திருமணம் கை கூடி நடைபெற்று விடுகிறது. குருபலம் என்றால் என்ன என்று பார்க்கும் போது குரு முழுச் சுபர் என்பதால் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு 2,5,7,9,11ல் சஞ்சரிப்பது குருபலமுள்ள காலங்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. குருபலம் உள்ள காலத்தில் திருமணம் செய்யும் போது தம்பதிகளது வாழ்வு மிகவும் சிறப்பாக அமைகின்றது. குரு புத்திரக்காரகன் என்பதால் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு 2,5,7,9,11ல் குரு சஞ்சரிக்கும் காலம் குருபலம் உள்ள சிறப்பான காலமாகும். இக்காலத்தில் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.

No comments: