Sunday, January 29, 2012

கிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய்களும்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது எவ்வளவு முக்கியமோ, அது போல கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல்  வாழ்வதும் முக்கியம். கஷ்டப்பட்டு சம் பாதித்த அனைத்து பணத்தையும் டாக்டருக்கு மொய் எழுதிக் கொண்டிருந்தால், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும். காலையில் தலைவலி அடுத்த நாள் உடல் வலி, உட்கார்ந்தார் எழுந்திருக்க முடியாத நிலை என ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு, இதனால் மன உளைச்சல், குடும்பத்தை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை, அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். ஒரு சிலருக்கோ நிரந்தரமாக உடல் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அபத்தம், இருதய பாதிப்பு என உடலோடு வியாதி ஒட்டிக்கொண்டேயிருக்கும.  மருத்துவருக்கு செலவு செய்து செய்து, பேசாமல் நாமே மருத்துவம் படித்திருக்கலாமே எனத் தோன்றும். இப்படி நோயுடனேயே போராட வேண்டிய காரணம் என்ன வென்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தோனால், ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், களத்திர காரகன் சுக்கிரனும் பலஹீனமடைந்தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு (பெண் என்றால் கணவருக்கும்) உண்டாகும்.

7ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றாலும் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும் பலஹீனமான அமைப்பாகும். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசா புக்திகள் நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மனைவிக்கு (கணவருக்கு) ஏற்படும்.

நவகிரகங்களில் ஆணுக்கு களத்திர காரகன் சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சுக்கிரன் செவ்வாய் பலவீனமடைவதும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருப்பதும் குடும்பத்தில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2ம் பாவமான 8ம் வீட்டிலும், 12ம் பாவமான 6ம் வீட்டிலும் பாவகிரகங்களான சனி  ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று அதாவது ஜென்ம லக்னத்திற்கு 6,8 ல் பாவகிரகங்கள் அமையப்பெற்று 7ம் பாவமானது பாவிகளால் சூழப்பட்டால் 7ம் வீடானது பலவீனப்பட்டு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

அதுபோல 7ம் வீட்டிற்கு 8ம் வீடான ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமைவது, 2ம் வீட்டதிபதி பலவீனப்படுவது போன்றவை சாதகமற்ற அமைப்பாகும். இது போன்ற கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு (கணவருக்கு) ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 2,6,7,8 போன்ற வீடுகளில் பாவ கிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு உடல்ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் மேற்கூறிய கிரக அமைப்புகள் இருக்கின்ற போது அதன் தசா புக்தி காலங்களில் கணவருக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், குறிப்பாக 8ம் பாவத்தை அதிமுக்கியத்துவம் கொடுத்து மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிட்டுவதால் 8ம் இடம் பலவீனப்பட்டோ, 8ல் பாவிகள் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கணவருக்கு கண்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை  உண்டாகும்.

சந்திரனுக்கு 2,6,7,8 போன்ற ஸ்தானங்களில் அதிக பாவகிரகங்கள் அமையப் பெற்று அமைந்திருந்தால் அதன் தசாபுக்தி காலங்களிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

No comments: