Friday, January 27, 2012

படித்த மனைவி

கல்வி என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்றாகும். இதில் மணவாழ்க்கை ரீதியாக வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது நன்கு படித்திருந்தால் வாழ்க்கை தரமும் உயர்வாகவே இருக்கும். இன்றைய சூழலில் பெற்ற குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றாலும் முதலில் எழும் கேள்வி பெற்றோர் படித்தவர்களா? என்றுதான். ஏனென்றால் கணவனோ மனைவியோ படித்திருந்தால் நல்ல உத்தியோகத்தைப் பெறமுடியும். அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்ல கல்வியைத் தர முடியும் பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் நல்ல பழக்க வழக்கங்கள், பலகலைகளில் தேர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இவை அனைத்திற்கும் மூலதனமாக அமைவது கணவன் மனைவியின் கல்வி தகுதியே ஆகும். ஜோதிட ரீதியாக உஙகளுக்கு  வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது படித்தவராக இருக்குமா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் பெண்ணாவள் படித்தவளாக இருப்பாளா என்பதனை பற்றி பார்ப்போம்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டைக் கொண்டு அடிப்படைக் கல்வி, பேச்சுதிறன், எழுத்துத்திறன் பற்றியும், நான்காம் வீட்டைக் கொண்டு இளமைக் கல்வி, மற்றும் பொது அறிவைப் பற்றியும், 5ம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை பற்றியும், 10 ம் வீட்டைக் கொண்டு தொழில், உத்தியோக நிலை பற்றியும், இத்துடன் நவக்கிரகங்களில் குரு, புதனைக் கொண்டு ஒருவரது கல்வி ஆற்றலைப் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியானவள் படித்தவளாக இருப்பாளா என ஆராய்வதற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2,4,5 ம் அதிபதிகள் மற்றும் குரு,புதன் பலத்தைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 7ம் வீட்டிற்கு 4,5 க்கு  அதிபதிகள் (ஜென்மலக்னத்திற்கு 10,11 க்கு அதிபதி) சுபர் சேர்க்கைப் பெற்று  கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், ஆட்சி உச்சம் பெற்ற இப்படிப்பட்ட கிரகநிலை ஒரு பெண் ஜாதகத்தில் இருந்தால் நன்கு படித்த கணவணாக அமைவார். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் 7க்கும் 4 ம் அதிபதி பலமிழந்து 7க்கு, 5 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவியானவள் கல்வித் தகுதியில் சற்று குறைந்தவளாக இருந்தாலும், நல்ல அறிவாற்றலும் குடும்பத்தை நிர்வகிக்கும் ஆற்றலும், கணவருக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கும் பண்பும் உண்டாகும். 7க்கு 2ம் இடமான 8 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல், குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் போன்றவை  சிறப்பாகவும், மனைவி வழி உறவுகளிடையே ஒற்றுமையாகவும், மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டிற்கு 4,5 க்கு அதிபதிகள் புதன் போன்ற சுபகிரக சேர்க்கை பெற்று, ஆட்சி உச்சம் பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, சந்திரன் சுக்கிரனும் பலம் பெற்று, பரிவர்த்தனைப் பெற்றிருந்தால் நல்ல அழகான, படித்த, பண்புள்ள, நாகரீகமான பெண் மனைவியாக அமைவள்.

ஆக 7 க்கு 4,5 அதிபதிகள் பலம் பெற்றிருப்பது மூலமாக நல்ல படித்த வாழ்க்கைத் துணையானது அமையும். அதுமட்டுமின்றி 7க்கும் 10ம் அதிபதி 7ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ  அமைந்திருந்தால் நன்கு படித்த  மனைவி அமைவது மட்டுமின்றி, உயர்ந்த பதவிகளில் உத்தியோகம் வகிக்க கூடியவராகவும், கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கக்கூடியவராகவும் இருப்பார்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

No comments: