Wednesday, January 25, 2012

தாமத திருமணம்

வசதி வாய்ப்புகள் குறைவால் திருமணம் தாமதமானால், அவர்கள் ஏழை அதனால் திருமணம் செய்து வைக்க முடிய வில்லை என்றொரு சமாதானம் ஏற்படும். ஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களுக்கே திருமணம் தள்ளிக் கொண்டே சென்றால், அவள் ராசியில்லாதவளாகி விடுவாள். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். சில பெற்றோர்கள் வரன் பார்த்தே சொத்துக்களை இழந்திருப்பார்கள். சிலர் தேடினோம் தேடினோம் தேடிக்கிட்டே இருக்கோம் என்பார்கள். முதலிலேயே நல்ல வரன் ஒன்று வந்தது அதையே முடித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் நல்ல வரனாக அமையட்டுமே என நினைத்தோம். அதுவே பெரிய தவறாகிப் போய்விட்டது. என ஆதங்கப் படுபவர்களும் உண்டு. ஏன் இந்த தாமதநிலை.

இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக கண்ணை மூடுவோம் என எமனிடத்தில் பெண்ணுக்கு வரன் கேட்பார்கள் சிலர். ஜாதக ரீதியாக இதைப் பற்றி ஆராயும்போது, கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரமே காரணமாகிறது. பருவத்தே பயிர் செய், என்பது போல எந்த வயதில் திருமணம் நடக்க வேண்டுமோ அந்த வயதில் திருமணம் நடைபெறுவதுதான் சிறப்பாகும். ஏனிந்த தாமதநிலை என்று ஜோதிட ரீதியாக ஆராயும்போது திருமண ஸ்தானத்திற்குரிய 7ம் அதிபதி மறைவு ஸ்தானமாகிய 6,8,12 ல் மறைந்து அமைந்திருந்தாலும், ஆண்களுக்கு களத்திர காரகனான  சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் மறைவு ஸ்தானங்களாகிய 6,8,12 ல் இருந்தாலும் திருமணம் தாமதமடையக்கூடிய நிலை உண்டாகும்.

நவக்கிரகங்களில் மந்த காரகன் என்று கூறக்கூடிய சனி பகவானின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் எந்தவொரு சுபகாரியம் நடைபெறுவதற்கும் தாமத நிலை உண்டாகும். நவகிரகங்களில் சனியின் பார்வையானது சற்று கெடுதலை உண்டாக்கக்கூடியது. சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10ம் வீடுகளை பார்வை செய்வார். இப்படி பார்வை செய்யும் சனி பகவானின் பார்வை 7ம் வீட்டிற்கோ, 7ம் வீட்டின் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ உண்டாகுமானால் திருமண வாழ்க்கை ஏற்பட தாமத நிலை உண்டாகும். சிறப்பான மணவாழ்க்கைக்கு 7ம் வீடு மட்டுமின்றி தாமதமின்றி திருமண அமைய குடும்ப ஸ்தானமான 2ம் வீடும் பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். சனியின் கொடிய பார்வை இந்த 2ம் வீட்டிற்கும் 2ம் வீட்டின் அதிபதிக்கோ இருக்குமேயானாலும் மணவாழ்க்கை என்பது தாமதமாகத்தான் அமையும்.

இது மட்டுமின்றி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும் 7ம் வீட்டதிபதி சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கையானது தாமதமாகவே உண்டாகும். பொது வாக , சனி எந்தவொரு காரியத்திலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றாலும் லக்னாதிபதியாகவோ, 7ம் அதிபதியாகவோ சனி ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்களை உண்டாக்குவதில்லை.

ஒருவர் ஜாதகத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரங்கள் கூட திருமணத்தை தாமதப்படுத்தும். ஒருவருக்கு 7ம் பாவம் 7ம் அதிபதி அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் இவருக்கு நடக்கக்கூடிய தசா புத்தியானது சாதகமின்றி இருந்தால், எடுத்துகாட்டாக சர்பகிரகங்களான ராகுகேதுவின் தசாபுக்தியோ, ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ திருமண வயதில் நடைபெறுமேயானால் திருமண வாழ்க்கை அமைய தாமத நிலை உண்டாகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

No comments: