ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன. நாம் பூமியின் வகைகளைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான கத்தான் பிரித்துள்ளோம். வீட்டில் ஏற்றக்கூடிய குத்து விளக்கில் கூட இந்து முகங்கள் உள்ளதை நாம் அறிவோம். எனவே ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள். ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும்.
குண அமைப்பு
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். பிடிக்காதவர்களின் தொடர்பை உடனே அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது. சமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல் நழுவி விடுவார்கள். அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.
உடலமைப்பும், ஆரோக்கியமும்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும். இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும். வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
குடும்ப வாழ்க்கை
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார். நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக இருப்பார். சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையும். கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வர்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் திருப்தியளிப்பதாக இருக்கும். உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.
பொருளாதாரம்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும். ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். சேமிப்பும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.
தொழில்
ஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும். ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில், எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.
நண்பர்கள், பகைவர்கள்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் சிரிக்க சிரிக்க பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பத£ல், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர். 1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.
புதனுக்குரிய காலம்
ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. புதன் கிழமை புதனுக்குரியது.
புதனுக்குரிய திசை
வடக்கு திசை புதனுக்குரியது. மலைகள், கல்வி நிலையங்கள், விளையாடும் இடங்கள், வாசக சாலைகள் யாவும் புதனுக்குரியவை. ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் வடக்கு முகமாக எந்த காரியங்களைத் தொடங்கினாலும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட கல்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் என்பதால் மரகதப் பச்சை என்ற கல்லை அணிய வேண்டும். இதனால் நோய்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நரம்பு பலவீனப்பட்டவர்களுக்கு நலம் கிட்டும்.
பரிகாரம்
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும் உத்தமம்.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி-5,14,23,6,15,24
அதிர்ஷ்ட நிறம்- சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட திசை -வடக்கு
அதிர்ஷ்ட கல் -வைரம், மரகதப் பச்சை
அதிர்ஷ்ட தெய்வம் -ஸ்ரீவிஷ்ணு
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001