Saturday, December 24, 2022

துலாம் - புத்தாண்டு பலன் - 2023



 துலாம் - புத்தாண்டு பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

வாழ்வில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சமமாக பாதிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே, பிறர் செய்யும் தவறுகளை உரிமையோடு தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட உங்களுக்கு இதுநாள் வரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரித்த சனி பல்வேறு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தினார். வரும் 17-01-2023 முதல் சனிபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை பெறுவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதத்திலும் ஏற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் இருந்து வந்த உடல் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக அனுகூலமான பலன்களை பெற முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். தொழில் ரீதியாக கடந்த காலங்களில் இருந்து வந்த பொருட் தேக்கங்கள் விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவும், போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய பலமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து சுமூகமாக பணிபுரியக்கூடிய அமைப்பு, உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலை வரும் நாட்களில் ஏற்படும்.

ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் 22-04-2023 முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள், மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதியான நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒரு சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பொதுவாக உடனிருப்பவர்களிடம் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆக வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு பொருளாதார மேன்மை, நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

கடந்த கால அலைச்சல்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் மிகவும் சாதகமான பலனை பெற முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏப்ரலுக்கு பிறகு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் குறையும். கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும். ஏப்ரலுக்கு பிறகு உங்கள்  பொருளாதார நிலை மேலும் சிறப்பாகி உங்கள் வாழ்க்கை தரம் உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும்பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிரபாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிக்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. துர்க்கை வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-01-2023 இரவு 08.50 மணி முதல் 05-01-2023 காலை 08.05 மணி வரை மற்றும் 30-01-2023 அதிகாலை 02.45 மணி முதல் 01-02-2023 பகல் 02.00 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 26-02-2023 காலை 10.15 மணி முதல் 28-02-2023 இரவு 08.32 மணி வரை.

மார்ச்.

குரு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். 7-ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். துர்கையம்மனையும், முருகரையும் வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம் - 25-03-2023 இரவு 07.25 மணி முதல் 28-03-2023 அதிகாலை 04.25 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 5-ல் சனி, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வரும் 22-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 22-04-2023 அதிகாலை 05.00 மணி முதல் 24-04-2023 பகல் 01.13 மணி வரை.

மே.

ஜென்ம ராசிக்கு 5-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இம்மாதத்தில் ராகு 7-ல், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். சிவ வழிபாடு, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 19-05-2023 பகல் 01.35 மணி முதல் 21-05-2023 இரவு 09.46 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்களையும், பொருளாதார ரீதியாக உயர்வுகளையும் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ராகு 7-ல், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சூரிய நமஸ்காரம் செய்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவதும் உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-06-2023 இரவு 08.23 மணி முதல் 18-06-2023 அதிகாலை 05.12 மணி வரை.

ஜுலை.

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெருமாள் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 13-07-2023 அதிகாலை 01.58 மணி முதல் 15-07-2023 பகல் 11.23 மணி வரை.

ஆகஸ்ட்.

மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கடன்கள் குறைந்து வீடு, மனை வாங்க கூடிய யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில், வியாபார ரீதியாக உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சர்பேஸ்வரர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 09-08-2023 காலை 07.42 மணி முதல் 11-08-2023 மாலை 04.58 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு குரு 7-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபார விருத்திக்காக எதிர்பார்த்த பண உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். அரசு அதிகாரிகள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 05-09-2023 மாலை 03.00 மணி முதல் 07-09-2023 இரவு 11.13 மணி வரை.

அக்டோபர்.

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிக்கனமாகவும், நிதானத்துடனும் இருப்பது நல்லது. ஒரு புறம் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். உடனிருப்பவர்களின் ஆதரவுடன் எதையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-10-2023 இரவு 12.15 மணி முதல் 05-10-2023 காலை 06.58 மணி வரை மற்றும் 30-10-2023 காலை 10.28 மணி முதல் 01-11-2023 மாலை 04.10 மணி வரை.

நவம்பர்.

மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வர வேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் ராகு 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். சிவனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 26-11-2023 இரவு 07.55 மணி முதல் 29-11-2023 அதிகாலை 01.40 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சியும், மனநிம்மதியும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி வலமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மகாலட்சுமி, விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 24-12-2023 அதிகாலை 03.17 மணி முதல் 26-12-2023 காலை 09.57 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8                               நிறம் - வெள்ளை, பச்சை               கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு         தெய்வம் - லக்ஷ்மி

No comments: