Saturday, December 24, 2022

சிம்மம் - புத்தாண்டு பலன் - 2023

 



சிம்மம் - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

நவகிரங்களில் ராஜா என வர்ணிக்கப்படும் சூரியனின் ராசியில் பிறந்த சிம்ம ராசி நேயர்களே, இயற்கையிலே பிறரை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க கூடிய உங்களுக்கு வருகின்ற 2023-ஆம் ஆண்டில் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும் உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலையும் சிறிதளவு நெருக்கடிகள் இருந்தாலும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தன வரவு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும்.

திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வருகின்ற நாட்களில் உங்களுக்கு உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களையும் நீங்கள் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் பார்க்கக் கூடிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவதற்கான யோகங்கள் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் இவ்வாண்டு முடிவுக்கு வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் யோகம் உண்டாகும். உங்களின் நீண்ட நாளைய திட்டங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் அதில் முழுமையான வெற்றியினை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இவ்வாண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 17-01-2023 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருந்தால் வரும் ஆண்டில் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்கள் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்களால் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதிகாரிகளின் அதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வது, பெறுப்புகளை குறைத்து கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபங்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி ஏப்ரலுக்கு பிறகு பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நற்பலன் உண்டாகும். காண்டிராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். 

அரசியல்

எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். மக்களின் ஆதரவைப் பெற புது புது முயற்சிகளை கையாள்வீர்கள்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் அசதிகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து லாபகரமான பலனை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிட்டும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, ஏழைகளுக்கு உதவி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-01-2023 பகல் 02.30 மணி முதல் 27-01-2023 மாலை 06.35 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புடன் கூடிய பதவி உயர்வுகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 22-02-2023 அதிகாலை 01.10 மணி முதல் 24-02-2023 அதிகாலை 03.43 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 7-ல் சனி, 8-ல் குரு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்கு பின் தான் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். சிவ வழிபாட்டையும், அஷ்டலட்சுமி வழிபாட்டையும் செய்யவும்.

சந்திராஷ்டமம் - 21-03-2023 பகல் 11.57 மணி முதல் 23-03-2023 பகல் 02.08 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசிக்கு 9-ல் புதன், 11-ல் செவ்வாய், 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது நல்லது. சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 17-04-2023 இரவு 08.52 மணி முதல் 19-04-2023 இரவு 11.53 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். அஷ்டலட்சுமியை வழிபடுவது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-05-2023 அதிகாலை 03.24 மணி முதல் 17-05-2023 காலை 07.38 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு, 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 11-06-2023 காலை 08.46 மணி முதல் 13-06-2023 பகல் 01.32 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய பலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை நல்லபடியாக பெருக்க உதவும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். துர்கையம்மனையும், விஷ்ணுவையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 08-07-2023 பகல் 02.57 மணி முதல் 10-07-2023 மாலை 06.59 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற நெருக்கடி உண்டாகும். நீங்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது, கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் உதவி உங்களுக்கு கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகப் பலனைப் பெற முடியும். தேவையின்றி தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவனையும், முருகப் பெருமானையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 04-08-2023 இரவு 11.17 மணி முதல் 07-08-2023 அதிகாலை 01.43 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், வீண் அலைச்சல்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் சிக்கல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பதன் மூலம் ஒருசில அனுகூலங்களை பெறமுடியும். சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 01-09-2023 காலை 09.35 மணி முதல் 03-09-2023 காலை 10.38 மணி வரை மற்றும் 28-09-2023 இரவு 08.28 மணி முதல் 30-09-2023 இரவு 09.10 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 26-10-2023 அதிகாலை 05.57 மணி முதல் 28-10-2023 காலை 07.30 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். சனி 7-ல் இருப்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு, துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 22-11-2023 பகல் 12.57 மணி முதல் 24-11-2023 மாலை 04.00 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வீண் செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வீண் பழிகளைச் சுமக்க நேரிடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிவன், துர்க்கை வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் -19-12-2023 மாலை 06.20 மணி முதல் 21-12-2023 இரவு 10.08 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                      நிறம் - வெள்ளை, சிவப்பு               கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் -  மாணிக்கம்                   திசை - கிழக்கு                         தெய்வம் - சிவன்

No comments: