Saturday, December 24, 2022

மிதுனம் - புத்தாண்டு பலன் - 2023

 



மிதுனம் - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் ஒவ்வொரு செயலிலும் சூழ்நிலைக்கு தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவராகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டு மிகப் பெரிய ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாக இருக்கும். மிதுனத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடைந்து சகல விதத்திலும் ஏற்றங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த சிறு சிறு பாதிப்புகள் கூட தற்போது முழுமையாக விலகி பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை இருக்கும்.

சர்பகிரகமான ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான குரு ஆண்டின் தொடக்கத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கமான நிலையை நீங்கள் எதிர்கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம், உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் குறைய கூடிய சூழல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் மறைவது மட்டுமில்லாமல் எதிரிகள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவிற்கு நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும்.

தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் முழுமையாக விலகி அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக உங்களின் மன கவலைகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சுணக்கமான நிலை மாறி குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய யோகமும் உயர் பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் ஏற்படும். இவ்வாண்டில் கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

சனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் கடந்த கால உடம்பு பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி, பிள்ளைகளுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை 

உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும். சனி பாக்கிய ஸ்தானத்தில் திருக்கணிதப்படி 17-01-2023 முதல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சியில் ஏப்ரலுக்கு பிறகு முயற்சி செய்தால் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும், எதிர்பாராத பதவி உயர்வுகளையும், விரும்பிய இடமாற்றங்களையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் கடினமாக பணிகளையும் எளிதில் முடித்து விடலாம். உயரதிகாரிகளிடம் இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறைந்து பணியில் மன நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

தொழில், வியாபாரம்

உங்களுக்கு இருக்கும் மந்த நிலை முழுமையாக விலகி தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் நீங்கள் நினைத்தது நடக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது மூலம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் வரும் நாட்களில் லாபகரமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை படிப்படியாக குறையும் என்றாலும் ஏப்ரலுக்கு பிறகு மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து நல்ல நிலையை அடைவீர்கள். மாண்புமிகு பதவிகள் உங்களை தேடி வரும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருந்தாலும் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி படிப்படியாக முன்னேறும் நிலை உண்டாகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானம் தற்போது கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் குறைவதால் மன அமைதி ஏற்படும். இசை துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சக கலைஞர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் வரும் நாட்களில் அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்

பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். ஆரோக்கியத்துடன் இருக்க உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது உத்தமம். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் வெல்ல முடியும். கல்விக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். சிவபெருமானையும் முருகரையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 21-01-2023 பகல் 02.53 மணி முதல் 23-01-2023 பகல் 01.50 மணி வரை.

பிப்ரவரி.

செவ்வாய் 12-ல், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். ராகு 11-ல் இருப்பதால் பொருளாதார நிலையானது ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடக்கப் பழகிக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 18-02-2023 அதிகாலை 01.48 மணி முதல் 20-02-2023 அதிகாலை 01.15 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சூரியன், புதன், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், நினைத்தது நடக்கும் நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமானப் பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். முருகரையும், பைரவரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 17-03-2023 காலை 10.18 மணி முதல் 19-03-2023 பகல் 11.17 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக இருந்த தேக்க நிலை மாறி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பொறுப்புடன் கூடிய பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வரும் 22-தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும். விநாயகர், அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 13-04-2023 மாலை 04.22 மணி முதல் 15-04-2023 மாலை 06.44 மணி வரை.

மே.

ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, ராகு, புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் நடக்கும் வாய்ப்பு, தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புகள் அமையும். அஷ்டலட்சுமி, விநாயகர் வழிபாடு நன்மைகளை தரும்.

சந்திராஷ்டமம் - 10-05-2023 இரவு 09.50 மணி முதல் 12-05-2023 இரவு 12.19 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு குரு, ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த இடையூறுகள் விலகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் 2-ல், மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிவன், முருகன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 07-06-2023 அதிகாலை 04.40 மணி முதல் 09-06-2023 காலை 06.02 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் கடன் பிரச்சினைகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கூட கைகூடும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நினைவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் உயர்வுகளும், இடமாற்றங்களும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடந்து கொண்டால் லாபகரமான பலன்களை பெற முடியும். மகாவிஷ்ணுவையும், விநாயகரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 04-07-2023 பகல் 01.43 மணி முதல் 06-07-2023 பகல் 01.38 மணி வரை மற்றும் 31-07-2023 இரவு 12.15 மணி முதல் 02-08-2023 இரவு 11.25 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, ராகு, மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால்  உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை தரம் மேலோங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்ப்பு ஏற்படும். சிவ வழிபாடு, மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 28-08-2023 காலை 10.40 மணி முதல் 30-08-2023 காலை 10.18 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 11-ல் குரு, ராகு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் விலகும். விநாயகரை வழிபடுவது, செவ்வாய் கிழமை முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் - 24-09-2023 இரவு 07.18 மணி முதல் 26-09-2023 இரவு 08.28 மணி வரை.

அக்டோபர்.

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 4, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது, பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல்கள், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 22-10-2023 அதிகாலை 01.38 மணி முதல் 24-10-2023 அதிகாலை 04.22 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் கவனமாக செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம். துர்க்கை, பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 18-11-2023 காலை 07.00 மணி முதல் 20-11-2023 காலை 10.07 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அஷ்டலட்சுமி வழிபாடு, பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-12-2023 பகல் 01.45 மணி முதல் 17-12-2023 மாலை 03.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,      நிறம் - பச்சை, வெள்ளை,             கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்              திசை - வடக்கு                 தெய்வம் - விஷ்ணு

No comments: