Monday, January 20, 2020

திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023


ஓம்சரவண பவா

திருக்கணித  சனி பெயர்ச்சி பலன்கள் 2020  -2023
24-01-2020 முதல் 17-01-2023 வரை
பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

என்னுரை:
                அன்புள்ள வாசகர்களே!
                எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், ஆயுள் காரகன் என அழைக்கப்படும் சனிபகவானின் அருளோடும், எனது தந்தையும் பிரபல ஜோதிடர், ஜோதிட சக்கரவர்த்தி தெய்வத்திரு முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதியுள்ளேன்.
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10 ஆம் தேதி 24-01-2020 வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுதலாகிறார்.
மகர இராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 29-04-2022-ல் அதிசாரமாக கும்ப இராசிக்குச் சென்று 12-07-2022-ல் மகர இராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பின்னர் 17-01-2023 மாலை 06.05 வரை மகர இராசியிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.
(வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி 57.04 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.23 மணிக்கு தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு மாறுதலாகிறார். அதன் பின்னர் 29-03-2023 மதியம் 01.06 மணி வரை மகர இராசியிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.)

சனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி
Ø  குருபகவான் தனுசு ராசியில் 05-11-2019 முதல் 20-11-2020 வரை
Ø  குருபகவான் மகர ராசியில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை
Ø  குருபகவான் கும்ப ராசியில் 20-11-2021 முதல் 13-04-2022 வரை
Ø  குருபகவான் மீன ராசியில் 13-04-2022 முதல் 22-04-2023 வரை

சனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது திருக்கணிதப்படி
Ø  ராகு மிதுன ராசியில், கேது தனுசு ராசியில் வரும் 07-03-2019 முதல் 23-09-2020 வரை
Ø  ராகு ரிஷப ராசியில், கேது விருச்சிக ராசியில் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 வரை
Ø  ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை
சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், மிதுன இராசிக்கு அஷ்டம சனியும், கடக இராசிக்கு கண்ட சனியும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், தனுசு இராசிக்கு ஏழரை சனியில் பாதசனியும், மகர ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும், கும்ப இராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனி பெயர்ச்சியின் மூலம் சிம்மம், விருச்சிகம், மகர இராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். ரிஷபம், கன்னி இராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.
                சனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு ஏற்படக்கூடிய பொதுப் பலன்கள், சாரப்பலன்கள், கும்ப இராசியில் அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதின் பலன்கள், வக்ர கதி பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
                எனக்கு ஆதரவு தரும் வாசக அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
ஜோதிட மாமணி
முனைவர் முருகுபாலமுருகன்

சனி பகவானும் பரிகாரமும்
சனி மகரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், மிதுன இராசிக்கு அஷ்டம சனியும், கடக இராசிக்கு கண்ட சனியும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், தனுசு இராசிக்கு ஏழரை சனியில் பாதசனியும், மகர ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும், கும்ப இராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனி பெயர்ச்சியின் மூலம் சிம்மம், விருச்சிகம், மகர இராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலனை அடைவார்கள். ரிஷபம், கன்னி இராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும். இதனால் மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்ப இராசி நேயர்கள் கண்டிப்பாக சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.

சனிக்குரிய எளிய பரிகாரங்கள்
Ø  சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.
Ø  சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
Ø  சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.
Ø  சனிக்குரிய கல்லான நீலக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
Ø  சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மற்றும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சமமாக உடைத்து, உடைப்பட்ட தேங்காயில் எள், எண்ணெயை நிரப்பி தீபமேற்றி சனி பகவானை வணங்குவது நல்லது.
Ø  கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
Ø  கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.
Ø  எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
Ø  சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

சனிக்குரிய வழிபாட்டு ஸ்தலம் திருநள்ளாறு
     இத்தலம் பேரளம் காரைக்கால் இரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரி சொல் நதிக்கும், வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத்தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது. இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பீபராண்யம், நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால்
நல்  +  ஆறு, திருநள்ளாராயிற்று.
இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனிஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த ஸ்தலமாகும்.
இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.
சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும்  இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர். இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாகும். இச்சன்னதியின் முன்புறம் மகர கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம்.
நளதீர்த்தம் கோயிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.

கோயில் முகவரி
அருள் மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளார் அஞ்சல்
காரைக்கால்
புதுவை மாநிலம்

திருக் கொள்ளிக்காடு
     மனிதர்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகிறார்களே என மனம் வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வணங்கினார். சிவனும் அவரின் ஆதங்கத்தை கண்டு நடுநிலைமையுடன் அனைவருக்கும் நீதி வழங்குவதில் நீயே சிறந்தவன் என பாராட்டினார். இத்தலத்தில் சனி பொங்கு சனியாக வீற்றிருக்கிறார்.

No comments: