Sunday, March 31, 2013

விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு





     எதிர்பாராமல் நிகழக் கூடிய அசம்பாவிதமான சம்பவங்களுக்கு பெயர் தான் விபத்து. யாருமே தமக்கு அடிபட வேண்டும். ரத்த காயங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால் அதை மீறி தம்மையும் அறியாமல் நிகழ்ந்து விடுகின்ற விபத்துக்களை நம் விதி என்று எடுத்துக் கொள்கிறோம். சிலர் அப்படிப்பட்ட சமயங்களில் யார் முகத்தில் விழித்தோமோ? யார் எதிரில் வந்தார்களோ? என்று புலம்புவதும் உண்டு. திடீரென்று நடக்கக் கூடிய விபத்துகளால் சிலர் ரத்த காயங்களுடன் தப்பிக்கின்றனர். சிலர் உடல் உறுப்புகளை  இழக்க நேரிடுகிறது. சிலருக்கோ உயிரே போய் விடுகிறது. இப்படி ஏற்படுகின்ற விபத்துகளால் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி உடன் இருப்பவர்களும், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

விபத்துகளை தவிர்க்க எத்தனையோ சட்ட திட்டங்களை அரசாங்கம் நிர்ணயித்தாலும் அதையும் தாண்டி அசம்பாவிதங்கள் நிகழத்தான செய்கின்றன. அப்பொழுது விதியை மதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது-. ஜோதிட ரீதியாக இதற்கெல்லாம் காரணம் என்ன எனப் பார்க்கின்ற போது ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பதே ஆகும். 8ம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்திருந்தாலோ, 8ம் வீட்டதிபதி பாவ கிரக சேர்க்கை பெற்று பகை வீட்டில் அமையப் பெற்றாலோ, எதிர் பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது-.
     
ஆயுள் காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும், உடல் ஊனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். அது போல ரத்தக்காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் ரத்த சம்மந்தப்பட்டவற்றிற்குக் காரகனாக விளங்குகிறார்.
     
பொதுவாகவே சனி, செவ்வாய் 8ல் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது. குறிப்பாக இம்மாதிரி கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு சனி திசை செவ்வாய் புக்தி காலங்களில் செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் அதிகமான பாதிப்புகளை உண்டாகுகிறது.
     
ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ 8ம் வீட்டையோ, பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும். லக்னாதிபதி பலம் இழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.
     
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம் நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளில் கண்டம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
     
வாகன காரகன் என்று சொல்லக் கூடிய சுக்கிரன் சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
     
கால புருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக் கூடிய விருச்சிகத்தில் சனி செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
    
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும்.
     
சூரியன் செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்.
     
சனி ராகு சேர்க்கை பெற்றிருந்தால் செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் ராகு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் விபத்துக்கள் உண்டாகும்.
     ஜென்ம லக்னத்திற்கு 8ல் பாவிகள் இருந்தால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றாலும் சுபர் பார்வை இருந்தால் பாதிப்புகள் குறையும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: