Saturday, March 16, 2013

கோபத்தை கிளறும் கிரகங்கள்





    
  ஆத்திரம் அறிவுக்கு சத்துரு என்பார்கள். அதிகமாக கோபப்படும் ஒரு மனிதன் எதையும் சாதிக்க முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனும், தன்னால் இயலாது என ஒரு காரியத்தில் முடிவெடுப்பவனும் தான்  அதிக கோபப்படுகிறான். கோபம் அவனை தன்னிலை இழக்க செய்வதுடன் எந்தவொரு செயலையும் ஒழங்காக செய்து முடிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் எவ்வளவு தான் ஈகை குணமும் இரக்க குணமும் இருந்தாலும் அதை மற்றவர்கள் தங்கள் சமயத்திற்கேற்றார் போல பயன்படுத்தி கொண்டு நன்றி மறப்பதுடன் அவனுக்கு மூர்க்கன் என்ற பட்டப் பெயரையும் வழங்குகின்றனர். நாம் ஒவ்வொரு மனிதனுடைய இயல்புகளையும் மாற்ற முயற்சிக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால் கோபமே நம் மீது கோபப்பட்டு நம்மை வீட்டு ஒடி விடும். ஒருவரின் ஜாதக ரீதியாக அதிக கோபப்படும் மனிதன் யார்? கோபப்பட வைக்கும் கிரகம் எது-? எந்தெந்த கிரகங்களின் ஆதிக்கத்தால் கோபம் வரும் என்பதை பற்றி தெளிவாக அறியலாம்.

  குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலமாக அமைய வேண்டும். நவ கிரகங்களில் மனோகாரகன் சந்திரனாவார். சந்திரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல், மனோ தைரியம், கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சந்திரன் பலஹீனமாக அமைந்திருந்தால் அதிக கோபப்படும் அமைப்பு, தேவையற்ற மனக்குழப்பங்கள், சில நேரங்களில் மனநிலையே பாதிக்க கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன் பலமாக அமைந்திருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன் களையும், பலஹீனமாக இருந்தால் தேவையற்ற குழப்பங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
     
பொதுவாக பௌர்ணமி, அமாவாசை காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரித்து பிறரிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குறிப்பாக தினமும் வரக் கூடிய சந்திர ஒரை நேரங்களில் கூட மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானமாக செய்ய வேண்டிய காரியங்கள் கூட குழப்பம் நிறைந்ததாகி விடும்.
     
அதிகமாக கோபப்படக் கூடிய ஒருவரிடம் யாரும் நெருங்கி பழகவோ, நட்பு வைத்து கொள்ளவோ விரும்புவதில்லை. இப்படிப்பட்ட குணநலன்கள் அமைவதற்கு அவரின் ஜாதகத்தில் உள்ள பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அவரின் ஜென்ம லக்னமாகிய ஒன்றாம் பாவம் உதவுகிறது. லக்னம் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால் கோபம் அதிகமாக வரும். இப்போது கோபத்தை ஏற்படுத்த கூடிய கிரகங்களைப் பற்றி தெளிவாக காண்போம்.
     
நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடபடுபவை சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, ஆகியவையாகும். ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களுக்-கு சுப கிரகங்களின் பார்வை இருந்தால் கோபம் இருந்தாலும் நல்ல  குணமும் இருக்கும். அதிகாரம் செய்யக் கூடிய ஆற்றலை தரும். சூரியனின் ராசியான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கும் சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சூரிய திசை நடப்பவர்களுக்கும் மேற்கூரிய பலன்கள் பொருந்தும். சூரியன் பாவிகளின் சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் பலமிழந்திருந்தால் தேவையில்லாமல் கோபப்படும் நிலை, மற்றவர்களுடன் சண்டை போடக் கூடிய அவல நிலை சமுதாயத்தில் கெட்ட பெயர், கௌரவக் குறைவு போன்றவை உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்தில் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் கோபம் அதிகம் வரும். அதுவும் அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற சிக்கல்களையும் சண்டை சச்சரவுகளையும் சந்திக்க நேரிடும். அதுவே செவ்வாய் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தாலோ 10ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றாலோ, கோபம் கொண்டவராகவும் அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருந்தாலும் சிறந்த நிர்வாக திறமையும். அதிகார பதவிகளை வகிக்க கூடிய ஆற்றலும் இருக்கும்.
     
சனியின் ஆதிக்க ராசிகளாக மகர, கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு மாறுபட்ட குணாதிசயம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சனி சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் கோபமிருந்தாலும் நியாயவாதியாகவும், குணசாலியாகவும் காரியவாதியாகவும் இருப்பார். சனி பாவகிரக சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்தால் முரட்டு தனம், பிடிவாத குணம் தவறான செயல்களில் ஈடுபட கூடிய அமைப்பு உண்டாகும். அதிலும் சனி ராகு 10ம் வீட்டில் அமையப் பெற்று சனியின் தசா புக்தி நடைபெற்றால் சட்ட விரோத செயல்களை செய்ய கூடிய நிலை உண்டாகும்.

    நவ கிரகங்களில் கோபத்திற்கு அதிக காரணகர்த்தா யாரென்று பார்த்தால் ராகு பகவான் தான். ஜென்ம  ராசியில் ராகு அமையப் பெற்றால் அதிக கோபப்படக் கூடிய குணம் இருக்கும். முரட்டு தனம் ஆணவகுணம், அசட்டு தைரியம், அகங்கார குணம் யாவும் உண்டாகும். சுபர் பார்வை சேர்க்கை பெற்றால் காரியத்தில் கண்ணாக செயல்படும் அமைப்பு, பல்வேறு வகையில் வாழ்வில் உயர்வுகளை சந்திக்க கூடிய யோகம் உண்டாகும். பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் அதிக முரட்டு தனம், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட கூடிய அமைப்பு, பல கொடூர செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும்.

  கேது பகவான் ஞானகாரகன் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படும் அமைப்பு கொடுக்கும். சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொடுக்கும். அதுவே சனி சந்திரன் சேர்க்கை பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

ஒருவரது குண நலன்களை அவர்கள் பேசும் விதத்தை கொண்டு தெரிந்து கொள்ள முடியும். பேச்சு திறனைப் பற்றி அறிய உதவுவது 2ம் பாவமாகும். 2ம் பாவத்தில் சூரியன், செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் அதிகார குணமும், சனி ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் வேகம் விவேகமும், மற்றவர் மனதை புண்படுத்தக் கூடிய அளவிற்கு பேசும் குணமும் உண்டாகும்.
     
மனிதராய் பிறந்த நாம் முடிந்த வரை கோபத்தை குறைத்து கொள்வதும், மற்றவர் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்வதும் நல்லது. உரிய தியானங்கள் தெய்வ பரிகாரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி கொள்வோமாக.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: