Sunday, March 31, 2013

விபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு





     எதிர்பாராமல் நிகழக் கூடிய அசம்பாவிதமான சம்பவங்களுக்கு பெயர் தான் விபத்து. யாருமே தமக்கு அடிபட வேண்டும். ரத்த காயங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால் அதை மீறி தம்மையும் அறியாமல் நிகழ்ந்து விடுகின்ற விபத்துக்களை நம் விதி என்று எடுத்துக் கொள்கிறோம். சிலர் அப்படிப்பட்ட சமயங்களில் யார் முகத்தில் விழித்தோமோ? யார் எதிரில் வந்தார்களோ? என்று புலம்புவதும் உண்டு. திடீரென்று நடக்கக் கூடிய விபத்துகளால் சிலர் ரத்த காயங்களுடன் தப்பிக்கின்றனர். சிலர் உடல் உறுப்புகளை  இழக்க நேரிடுகிறது. சிலருக்கோ உயிரே போய் விடுகிறது. இப்படி ஏற்படுகின்ற விபத்துகளால் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி உடன் இருப்பவர்களும், மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

விபத்துகளை தவிர்க்க எத்தனையோ சட்ட திட்டங்களை அரசாங்கம் நிர்ணயித்தாலும் அதையும் தாண்டி அசம்பாவிதங்கள் நிகழத்தான செய்கின்றன. அப்பொழுது விதியை மதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது-. ஜோதிட ரீதியாக இதற்கெல்லாம் காரணம் என்ன எனப் பார்க்கின்ற போது ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பதே ஆகும். 8ம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்திருந்தாலோ, 8ம் வீட்டதிபதி பாவ கிரக சேர்க்கை பெற்று பகை வீட்டில் அமையப் பெற்றாலோ, எதிர் பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது-.
     
ஆயுள் காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும், உடல் ஊனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். அது போல ரத்தக்காரகன் என வர்ணிக்கப்படக் கூடிய செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் ரத்த சம்மந்தப்பட்டவற்றிற்குக் காரகனாக விளங்குகிறார்.
     
பொதுவாகவே சனி, செவ்வாய் 8ல் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது. குறிப்பாக இம்மாதிரி கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு சனி திசை செவ்வாய் புக்தி காலங்களில் செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் அதிகமான பாதிப்புகளை உண்டாகுகிறது.
     
ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ 8ம் வீட்டையோ, பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகும். லக்னாதிபதி பலம் இழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.
     
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம் நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளில் கண்டம் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
     
வாகன காரகன் என்று சொல்லக் கூடிய சுக்கிரன் சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
     
கால புருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக் கூடிய விருச்சிகத்தில் சனி செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
    
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கை பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும்.
     
சூரியன் செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்.
     
சனி ராகு சேர்க்கை பெற்றிருந்தால் செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் ராகு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும் விபத்துக்கள் உண்டாகும்.
     ஜென்ம லக்னத்திற்கு 8ல் பாவிகள் இருந்தால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றாலும் சுபர் பார்வை இருந்தால் பாதிப்புகள் குறையும்.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Thursday, March 28, 2013

பஞ்ச மகா புருஷ யோகத்தின் சிறப்பம்சங்கள்



     
ஜோதிடம் என்பது மனிதனின் உயிர் நாடியாகும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்தவை நடப்பவை, நடக்க இருப்பவை போன்றவற்றைப் பற்றி அறிய ஜோதிடம் ஒரு கால கண்ணாடியாக விளங்குகிறது. பொதுவாக ஜோதிடர் என்பவர் ஒருவரின் ஜெனன  கால ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களை ஆராய்ந்து பலன் கூறவாரே தவிர அவரால் எதையும் மாற்றி அமைத்து விட முடியாது. கிரகங்களுக்குரிய தக்க பரிகாரங்களை செய்வதன் மூலம் வேண்டுமானால் ஒரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். சில கிரக அமைப்புகள் நற்பலனையும் சில கிரக அமைப்புகள் கெடு பலனையும் உண்டாக்கும். இதில் நற்பலனை உண்டாக்கும் கிரக அமைப்புகளால் உண்டாகும் பஞ்ச மகா புருஷ யோகத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
     
யோகத்தில் சிறந்த யோகம் பஞ்ச மகா புருஷ யோகமாகும். பொதுவாக கேந்திர ஸ்தானங்கள் எனக் கூறப்படும் 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பல்வேறு அற்புதங்கள் உண்டாகிறது. அதனைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம். 

அம்ச யோகம்

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10ல் குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெற்றால் அம்ச யேகாம் உண்டாகிறது. இதனால் செல்வம் செல்வாக்கு புத்திர வழியில் மேன்மைகள், பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக் கூடிய யோகம் போன்ற பல்வேறு வகையில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.

ருச்சுக யோகம்

     நவ கிரகங்களில் செவ்வாய் ஒரு மிகச் சிறந்த கிரகமாகும். ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரங்களில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தால் ருச்சுக யோகம் உண்டாகிறது-. இந்த யோகத்தால் பூமி மனை வாங்கும் யோகம், நல்ல நிர்வாக திறமை, உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் போலீஸ் இராணுவம் போன்றவற்றில் பணி புரியும் வாய்ப்பு, உடன் பிறந்தவர்களால் அனுகூலம், உடலில் நல்ல ரத்த ஒட்டம், எதிலும் தைரியத்துடன் செயல்படக் கூடிய ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக 10ல் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ருச்சுக யோகம் உண்டாவது மட்டுமின்றி திக் பலமும் பெறுவதால் பல வகையில் அதிகாரமான பதவிகளை வகிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் கொடுக்கும்.

பத்திர யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் புதன் பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது-. இதனால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, சமுதாயத்திற்கு ஒரு நல்ல அந்தஸ்து உயர்வு, உண்டாகும். குறிப்பாக 4ல் பலம் பெற்றிருந்தால் கல்வியில் மிகப் பெரிய சாதனை செய்யக் கூடிய அமைப்பு, 7ல் பலம் பெற்றிருந்தால் மனைவி மற்றும் கூட்டு தொழிலால் அனுகூலங்கள் 10ல் பலம் பெற்றிருந்தால் தொழில் துறையில் சாதனை மேல் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக புதன் சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் சுபராகவும் பாவிகள் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் மாறுவார். புதன் பகவான் சுபர் சேர்க்கை பெற்று சுபராகும் பட்சத்தில் கேந்திரங்களில் பலம் பெற்று பத்திர யோகம் ஏற்பட்டால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்பதால் யோகத்தின் பலனை முழுமையாக அடைய முடியாது. புதன் பகவான் பாவிகள் சேர்க்கை பெற்று கேந்திரங்களில் அமைந்தால் மட்டுமே யோகத்தின் பலனை அடைய முடியும்.

மாளவியா யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் மாளவியா யோகம் உண்டாகிறது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, செல்வம், செல்வாக்கு சேரும் யோகம், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். பஞ்ச மகா புருஷ யோகத்தில் மாளவியா யோகம் மட்டுமே 12 லக்ன தாரருக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேஷ லக்னத்திற்கு 7லும் ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுன லக்னத்திற்கு 10லும் கடக லக்னத்திற்கு 4லும், சிம்ம லக்னத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும் விருச்சிகத்திற்கு 7லும், தனுசுக்கு 4லும் மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும், மீனத்திற்கு லக்னத்தில் அமையும் போது மாளவியா யோகம் உண்டாகும்.

சச யோகம்
     
ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ சனி பகவான் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், சமுதாயத்தில் நல்ல உயர்வு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெயர், புகழ், அசையா சொத்து யோகம், வேலையாட்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

        
please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
          

Saturday, March 23, 2013

காதலித்து திருமணம் திருமணத்திற்கு பின் காதல்

     
காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்  இது இன்றைய இளைஞர்களின் வேத வாக்கு. பள்ளி படிப்பா, கல்லு£ரி படிப்பா? எதைப் பற்றியும் கவலை இல்லை. எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்பதை விட யாரின் மனதில் இடம் பிடித்திருக்கிறோம் என்பது தான் சவால். காதல் யாரிடமும் உத்தரவு பெற்று வருவதில்லை. காற்றுப் புகாத இடத்தில் கூட காதல் புகுந்து விடும். கோடி இளம் உள்ளங்களை இந்த காதல் தினமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கல்லாதவன் கூட கவிஞனாவான். காதல் வயப்பட்டால் பக்தியே இல்லாதவன் கூட நெற்றியில் விபூதி வைப்பான் தன் காதலியை வசப்படுத்த சந்தேகமென்றால் இந்த மாதம் 14ம் தேதியன்று பாருங்கள். தந்தை தினம், தாய் தினம், குழந்தைகள் தினம் என எத்தனையோ தினங்கள் வந்தாலும் இந்த காதலர் தினம் மட்டும் தான் களைகட்டும். கடற்கரை, பூங்கா, ஹோட்டல் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில் இளம் ஜோடிகளை மலர் கண்காட்சி போல விதவிதமாக பார்க்கலாம். இளம் உள்ளங்களே கண்டதும் காதல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து, தக்க வயதில் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு உங்களை வலிமை படுத்திக் கொண்ட பின்பு திருமண பந்தத்தை ஆரம்பியுங்கள். முடிந்த வரை பெற்றோரின் மனம் நோகாமல் அவர்களின் சம்மதத்துடன் வாழ்க்கையை அனுபவியயுங்கள். இது தான் உங்களுக்கும் நல்லது. உங்களை சார்ந்தவர்களுக்கும் நல்லது.
     
காதல் என்ற வளையத்திற்குள் வருவதற்கு அவரவரின் ஜெனன ஜாதக ரீதியாக 5ம் பாவமே முக்கிய காரணமாக அமைகிறது. ஒருவரை பார்த்தவுடன் மனதில் ஏற்படக் கூடிய ஈர்ப்பு தன்மை, உணர்வுகள், காதல் போன்றவற்றிற்கு 5ம் பாவத்தில் அமையக் கூடிய கிரகங்களே காரணமாகிறது.
     
5ம் பாவத்தில் சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்று, 5ம் அதிபதியும் பாவ கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ, பெற்றிருந்தால் காதல் வயப்படக் கூடிய அமைப்பு, தான் விரும்பியவரையே திருமணம் செய்து கொண்டு வாழும் யோகம் போன்ற யாவும் உண்டாகும். அது போல 5ல் பாவிகள் அமையப் பெற்று 7ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5,7க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும் ஜாதகருக்கு காதல் வயப்படக் கூடிய அமைப்பு உண்டாகும். 5,7க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்பு திருமணம் செய்யக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
     
நவ கிரகங்களில் ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரனாவார். பெண்களின் களத்திர காரகன் செவ்வாயாவார். மனம் மற்றும் அறிவு சம்மந்தப்பட்ட விஷயத்திற்கு காரகன் சந்திரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5,7 செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள்  அமைந்து சனி ராகுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சனி பார்வை 5,7க்கு இருந்தாலும் வேறு மதத்தவரை காதலித்து மனம் முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 
     
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7க்கு அதிபதிகள் இருந்தாலும் 5ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு, கலப்பு திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக 5,7ல் சனி ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் வேறு மதத்தவரையோ, இனத்தவரையோ காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 5,7க்கு அதிபதிகள் கேது சேர்க்கை பெற்றாலும் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் காதலித்தவரையே மணம் முடித்துக் கொள்வார்கள்.
     
காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டுமா? ஏன் திருமணம் செய்து கொண்டு காதலிக்கக் கூடாதா-? என் கேட்பவர்களுக்கு
     
5ம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளை குறிக்கக் கூடிய கிரகங்களாகிய சூரியன் செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் 5ல் அமையப்பெற்று பாவ கிரக சேர்க்கை பார்வை இன்றி குரு போன்ற சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றால் பெற்றோர்களும் பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்தவரையே மணமுடித்துக் கொண்டு திருமணத்திற்கு பின்பு ஒருவரையருவர் காதலித்து அன்புடன் வாழ முடியும்.
     
நவ கிரகங்கள் நம்மை ஆட்டி வைப்பதால் அதற்கேற்றார் போல நாமும் ஆடுகிறோம். காதல் என்ற பெயரில் உடலை மட்டும் ரசிக்கும் வேஷதாரிகளை தவிர்த்து உள்ளத்திற்கு மதிப்புக் கொடுத்து வாழுங்கள்.


please contact my postal adress  
Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Thursday, March 21, 2013

கண்டத்தை ஏற்படுத்தும் காலங்கள்




     
பொன் தேடி பொருள் தேடி அலையும் மானிடர்கள் எப்பொழுதாவது மரணத்தைப் பற்றி யோசித்தது உண்டா? எதிர் காலம் எப்படியிருக்கும். சுக வாழ்வு வாழ வேண்டுமே எங்கு செல்லலாம், எதை தேடலாம், எதை சேர்க்கலாம், எவ்வளவு படிக்கலாம் என தினம் தினம் தேடுதல்களை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது என்னுடையது இது உன்னுடையது என பிரித்தாளும் மனப்பான்மையால் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என அனைத்தையுமே பிரித்து வைத்து ஆளுமை செய்கின்றோம். ஆனால் போகும்போது எதையாவது கொண்டு செல்கின்றோமா என்றால் அது தான் இல்லை. மரணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. அந்த வார்த்தையை கேட்டாலே மனதில் பயம் உண்டாகி விடுகிறது-. கீதாசாரத்தில் கூறியிருப்பது போல எதை கொண்டு வந்தோம் எதை இழப்பதற்கு, எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகி விடுகிறது.
     
பள்ளி செல்லும் பருவத்தில் பல கனவுகளுடன் புத்தக மூட்டையை சுமந்த சென்ற எத்தனையோ குழந்தைகள் தீயில் கருகியதை பத்திரிகைகளில் பார்க்கவில்லையா? வாலிப பருவத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவு என்ற பெயரில் உடல் உறுப்புகளை தானம் செய்வதவற்றை நாம் பார்க்கவில்லையா-? வயது முதிர்ந்தும் தள்ளதா வயதில் குடுகுடு கிழவர்களாகியும் உயிருடன் இருப்பவர்களும் உண்டு. வாழ வேண்டிய வாலிப வயதில் அகால மரணத்தை தழுவுவர்களும் உண்டு. இந்த மரணம், விபத்து, கண்டம் இவை எல்லாவற்றையும் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது இதற்கு நவ கிரகங்களின் திருவிளையாடலே காரணமாக அமைகிறது.
      
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே 8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது-. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.
     
ஒரு சில தசாக்கள் சிலருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மிருக சீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக வரும் சனி திசையும், அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக வரும் செவ்வாய் திசையும், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6வது திசையாக வரும் குரு திசையும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7வது திசையாக வரும் ராகு திசையும் கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி.
     
ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானதிபதியின் தசா புக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசா புக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். சர லக்னம் என வர்ணிக்க பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகர  லக்னத்திற்கு 2,7ம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும். உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.

     ஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
     
அக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.
     
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2,7க்குரிய கிரகமான சுக்கிரனின் தசா புக்தி காலங்கிளலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
     
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 க்கு அதிபதிகள் மாரகாதிபதிகளாவார்கள் அதனால் 3ம் அதிபதி சந்திரனின் தசா புக்தி காலங்களிலும் 8ம் அதிபதி குருவின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது-. 3,8ல் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
     
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலத்திலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தல் கவனம் செலுத்துவது நல்லது.
     
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
     
சிம்ம லக்னத்தில் பிறந்வர்களுக்கு 3, 8க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும்  3,8ல் அமையும் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கித்தில் கவனம் செலுத்துவது நல்லது.
     
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குருவும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்றுள்ள  கிரகங்களின்   தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.
     
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாவார். செவ்வாயின் திசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
     
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.
     
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சுக்கிரன் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
     
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகள் ஆவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.
     
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாராகதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
     
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சனி ஆகியோர் மாரகாதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகள் எதிர் கொள்ள வேண்டும்.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Saturday, March 16, 2013

கோபத்தை கிளறும் கிரகங்கள்





    
  ஆத்திரம் அறிவுக்கு சத்துரு என்பார்கள். அதிகமாக கோபப்படும் ஒரு மனிதன் எதையும் சாதிக்க முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனும், தன்னால் இயலாது என ஒரு காரியத்தில் முடிவெடுப்பவனும் தான்  அதிக கோபப்படுகிறான். கோபம் அவனை தன்னிலை இழக்க செய்வதுடன் எந்தவொரு செயலையும் ஒழங்காக செய்து முடிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் எவ்வளவு தான் ஈகை குணமும் இரக்க குணமும் இருந்தாலும் அதை மற்றவர்கள் தங்கள் சமயத்திற்கேற்றார் போல பயன்படுத்தி கொண்டு நன்றி மறப்பதுடன் அவனுக்கு மூர்க்கன் என்ற பட்டப் பெயரையும் வழங்குகின்றனர். நாம் ஒவ்வொரு மனிதனுடைய இயல்புகளையும் மாற்ற முயற்சிக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால் கோபமே நம் மீது கோபப்பட்டு நம்மை வீட்டு ஒடி விடும். ஒருவரின் ஜாதக ரீதியாக அதிக கோபப்படும் மனிதன் யார்? கோபப்பட வைக்கும் கிரகம் எது-? எந்தெந்த கிரகங்களின் ஆதிக்கத்தால் கோபம் வரும் என்பதை பற்றி தெளிவாக அறியலாம்.

  குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலமாக அமைய வேண்டும். நவ கிரகங்களில் மனோகாரகன் சந்திரனாவார். சந்திரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல், மனோ தைரியம், கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சந்திரன் பலஹீனமாக அமைந்திருந்தால் அதிக கோபப்படும் அமைப்பு, தேவையற்ற மனக்குழப்பங்கள், சில நேரங்களில் மனநிலையே பாதிக்க கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன் பலமாக அமைந்திருந்தால் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன் களையும், பலஹீனமாக இருந்தால் தேவையற்ற குழப்பங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
     
பொதுவாக பௌர்ணமி, அமாவாசை காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரித்து பிறரிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குறிப்பாக தினமும் வரக் கூடிய சந்திர ஒரை நேரங்களில் கூட மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானமாக செய்ய வேண்டிய காரியங்கள் கூட குழப்பம் நிறைந்ததாகி விடும்.
     
அதிகமாக கோபப்படக் கூடிய ஒருவரிடம் யாரும் நெருங்கி பழகவோ, நட்பு வைத்து கொள்ளவோ விரும்புவதில்லை. இப்படிப்பட்ட குணநலன்கள் அமைவதற்கு அவரின் ஜாதகத்தில் உள்ள பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அவரின் ஜென்ம லக்னமாகிய ஒன்றாம் பாவம் உதவுகிறது. லக்னம் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால் கோபம் அதிகமாக வரும். இப்போது கோபத்தை ஏற்படுத்த கூடிய கிரகங்களைப் பற்றி தெளிவாக காண்போம்.
     
நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடபடுபவை சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, ஆகியவையாகும். ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களுக்-கு சுப கிரகங்களின் பார்வை இருந்தால் கோபம் இருந்தாலும் நல்ல  குணமும் இருக்கும். அதிகாரம் செய்யக் கூடிய ஆற்றலை தரும். சூரியனின் ராசியான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கும் சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சூரிய திசை நடப்பவர்களுக்கும் மேற்கூரிய பலன்கள் பொருந்தும். சூரியன் பாவிகளின் சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் பலமிழந்திருந்தால் தேவையில்லாமல் கோபப்படும் நிலை, மற்றவர்களுடன் சண்டை போடக் கூடிய அவல நிலை சமுதாயத்தில் கெட்ட பெயர், கௌரவக் குறைவு போன்றவை உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்தில் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையுடன் அமையப் பெற்றிருந்தால் கோபம் அதிகம் வரும். அதுவும் அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற சிக்கல்களையும் சண்டை சச்சரவுகளையும் சந்திக்க நேரிடும். அதுவே செவ்வாய் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தாலோ 10ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றாலோ, கோபம் கொண்டவராகவும் அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருந்தாலும் சிறந்த நிர்வாக திறமையும். அதிகார பதவிகளை வகிக்க கூடிய ஆற்றலும் இருக்கும்.
     
சனியின் ஆதிக்க ராசிகளாக மகர, கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு மாறுபட்ட குணாதிசயம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சனி சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் கோபமிருந்தாலும் நியாயவாதியாகவும், குணசாலியாகவும் காரியவாதியாகவும் இருப்பார். சனி பாவகிரக சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்தால் முரட்டு தனம், பிடிவாத குணம் தவறான செயல்களில் ஈடுபட கூடிய அமைப்பு உண்டாகும். அதிலும் சனி ராகு 10ம் வீட்டில் அமையப் பெற்று சனியின் தசா புக்தி நடைபெற்றால் சட்ட விரோத செயல்களை செய்ய கூடிய நிலை உண்டாகும்.

    நவ கிரகங்களில் கோபத்திற்கு அதிக காரணகர்த்தா யாரென்று பார்த்தால் ராகு பகவான் தான். ஜென்ம  ராசியில் ராகு அமையப் பெற்றால் அதிக கோபப்படக் கூடிய குணம் இருக்கும். முரட்டு தனம் ஆணவகுணம், அசட்டு தைரியம், அகங்கார குணம் யாவும் உண்டாகும். சுபர் பார்வை சேர்க்கை பெற்றால் காரியத்தில் கண்ணாக செயல்படும் அமைப்பு, பல்வேறு வகையில் வாழ்வில் உயர்வுகளை சந்திக்க கூடிய யோகம் உண்டாகும். பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் அதிக முரட்டு தனம், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட கூடிய அமைப்பு, பல கொடூர செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும்.

  கேது பகவான் ஞானகாரகன் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படும் அமைப்பு கொடுக்கும். சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொடுக்கும். அதுவே சனி சந்திரன் சேர்க்கை பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

ஒருவரது குண நலன்களை அவர்கள் பேசும் விதத்தை கொண்டு தெரிந்து கொள்ள முடியும். பேச்சு திறனைப் பற்றி அறிய உதவுவது 2ம் பாவமாகும். 2ம் பாவத்தில் சூரியன், செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் அதிகார குணமும், சனி ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் வேகம் விவேகமும், மற்றவர் மனதை புண்படுத்தக் கூடிய அளவிற்கு பேசும் குணமும் உண்டாகும்.
     
மனிதராய் பிறந்த நாம் முடிந்த வரை கோபத்தை குறைத்து கொள்வதும், மற்றவர் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்வதும் நல்லது. உரிய தியானங்கள் தெய்வ பரிகாரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி கொள்வோமாக.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Wednesday, March 13, 2013

பன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்


 நவ கிரகங்களில் நிழல் கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு&கேது இருவருக்கு சொந்த வீடு இல்லை. தங்கள் இருக்கும் இடத்தையே சொந்த வீடாக கொண்டு பலன் தருவார்கள். பொதுவாக ராகு பகவான் தந்தை வழி தத்தாவிற்கு திடீர் வளர்ச்சி, தீய பழக்க வழக்கம், வேறு சாதி, வேறு மதம், வயிறு கோளாறு, விபத்து, நவீன கரமான செயல் போன்றவைக்கு காரகன் ஆவார். 

கேது பகவான் ஞானம், தெய்வீக செயல், ஆன்மீக பணி, காதல், வேறு சாதி, வேறு மதம், விஷத்தால் கண்டம் போன்றவைக்கும், மறு ஜென்மத்திற்கு காரகன் ஆவார். பொதுவாக ராகு&கேது பாவிகள், உப ஜய ஸ்தானமான 3,6,10,11ல் ஜெனன காலத்தில் அமையப் பெற்றால் அனுகூல பலனை உண்டாக்குவார். ராகு கேது இருவரும் கேந்திரத்தில் இருந்தால் அந்த பாவத்தை பாதித்தாலும் ராகு கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் ஏற்ற மிகு பலனை உண்டாக்குகிறார்கள். பொதுவாக சனி சுக்கிரன் நண்பர்கள், புதன், கேது சமம். சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள், ராகு&கேது இருவரும் உடன் இருக்கும் கிரகத்தின் இயல்புக்கு ஏற்ற படி பலனை வழங்குவார்கள். ராகு கேது பொதுவாக தோஷத்தை உண்டாக்கி வாழ்வில் பல்வேறு நிலையில் இடையூறுகளை உண்டாக்குகிறார்கள்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் ராகு&கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்;-&
    
ஜென்ம லக்கினத்தில் ; ராகு  இருந்தால் முன் கோபம், வேகம், விவேகம், முரட்டுத்தனம் அகோர முகம் இருக்கும். கேது இருந்தால் நிதானம், ஆன்மீக, தெய்வீக எண்ணம், சோம்பேறித்தனம் ஏற்படும்.

2ல் இருந்தால் ;  2ல் ராகு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை, பேச்சில் முரட்டுத்தனம், தன நெருக்கடி, களத்திர தோஷம் உண்டாகும். 2ல் கேது இருந்தால் ;  பேச்சில் நிதானம், குடும்ப வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை, ஆன்மீக தெய்வீக செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
     
3ல் இருந்தால்  ;  3ல் ராகு இருந்தால் எடுக்கும் முயற்சியில் வெற்றி தைரியம் துணிவு ஏற்படுமென்றாலும்  சகோதர தோஷத்தை தரும் 3ல் கேது இருந்தால் ;  ஏற்றம், உயர்வு, உடன் பிறப்பிற்கு தோஷம் என்றாலும் பெண் உடன் பிறப்பு ஏற்படலாம்.
     
4ல் இருந்தால் ;  4ல் ராகு இருந்தால் கல்வியில் தடை, தாய்க்கு தோஷம் கண்டம், சொந்த வீடு வாகனம், அமையத் தடை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு ஏற்படும் 4ல் கேது இருந்தால் ;  தாய்க்கு தோஷம், கல்வியில் தடை என்றாலும் மருந்து கெமிக்கல் தொடர்புள்ள கல்வி, பரந்த மனப்பான்மை உண்டாகும்.

5ல் இருந்தால் ;  ராகு 5ல் இருந்தால் உயர் கல்வியில் தடை, பூர்வீக தோஷம், புத்திர தோஷம் வயிறு வலி உண்டாகும். கேது 5ல் இருந்தால் ;  வயிறு கோளாறு, புத்திர தோஷம் என்றாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
     
6ல் இருந்தால் ;  ராகு 6ல் இருந்தால் எடுக்கும் முயற்சி வெற்றி, எதிரிகளை வெல்லும் அமைப்பு தைரியம் துணிவு உண்டாகும். நிண்ட ஆயுள் எதிர் பாராத பண வரவு உண்டு. கேது 6ல் இருந்தால் ;  புகழ், பெருமை, எடுக்கும் முயற்சியில் அனுகூலம், வீண், வம்பு வழக்கு ஏற்படும்.
    
7ல் இருந்தால் ;  ராகு 7ல் இருந்தால் களத்திர தோஷம், வே-று மதம் பெண்ணை திருமணம் செய்யும் நிலை, கூட்டாளிகளால் அனுகூலம் இல்லாத நிலை ஏற்படும் கேது 7ல் இருந்தால் ;  காதல் திருமணம், மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். சுக வாழ்வு பாதிப்பு.

8ல் இருந்தால் ;  ராகு 8ல் இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கும் நிலை, விபத்து, விஷத்தால் கண்டம், களத்திர வழியில் உறவினர்கள் பகை உண்டாகும்.கேது 8ல் இருந்தால் ;  உடல் நிலை பாதிப்பு, உறவினர் பகை, விபத்து குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும்.
     
9ல் இருந்தால் ;  ராகு 9ல் இருந்தால் வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம், தந்தைக்கு கெடுதி, தந்தை வழி உறவினர் பகை, தவறான பழக்க வழக்கம் உண்டாகும். பெண்னென்றால் புத்திர தோஷம் உண்டாடும்.கேது 9ல் இருந்தால் ;  தந்தைக்கு தோஷம், தெய்வீக காரியம், பொது காரியங்களில் ஈடுபடும் நிலை, பொருளாதார நெருக்கடி, கஷ்டம் உண்டாகும்.

10ல் இருந்தால் ;  ராகு 10ல் இருந்தால் எதிர்பாராத உயர்வு, ஏற்றம் நவீனகரமான செயல் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு, திடீர் தன வரவு ஏற்படும். கேது 10ல் இருந்தால் ;  பொதுக் காரியங்களில் ஈடுபடும் நிலை, எதிலும் நிதானம், நேர்மை இருக்கும்.

11ல் இருந்தால் ;  ராகு 11ல் இருந்தால் எதிர்பாராத உயர்வு ஏற்படும். தொழில் சுய முயற்சியால் வெற்றி, ஸ்பெகுலேஷன் மூலம் உயர்வு உண்டாகும். மூத்த சகோதர தோஷம் ஆகும். கேது 11ல் இருந்தால் ;  எடுக்கும் முயற்சியில் வெற்றி அனுகூலம், தொழில் ரீதியாக லாபம் உண்டாகும். மூத்த சகோதர தோஷம், சகோதரி வாய்ப்பு உண்டு.
  
12ல் இருந்தால் ; ராகு 12ல் இருந்தால் கண்களில் பாதிப்பு, கட்டில் சுக வாழ்வில் பிரச்சனை என்றாலும் வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம் உண்டாகும். கேது 12ல் இருந்தால் ; ஸ்தல தரிசனம் உண்டாகும். மறு பிறவி இல்லை. கட்டில் சுக வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படும்.


please contact my postal adress  


Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.


Astro Ph.D research scholar



No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.



Tuesday, March 5, 2013

சுக்கிர திசை




சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும். சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும். பண வரவுகளுக்கும்  பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு.

    சுக்கிரன் தனித்து அமையாமல் பாவ கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அது போல சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை ரீதியாக பிரச்சனைகளை உண்டாகும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். கண்களில் நோய் தவறான பெண்களின் சேர்க்கையால் பாலியல் நோய்களுக்கு ஆளாக கூடிய நிலை, மர்ம உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை வியாதி, போன்றவை ஏற்படும். சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய் க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது. அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்களங ஏற்படும்.

பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.

அதுவே சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூவமற்ற நிலை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். 

சுக்கிர திசை சுக்கிரபுக்தி

    சுக்கிர திசையில் சுக்கிர புக்தியானது 3&வருடங்கள் 4&மாதங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம், ஆடை ஆபரண மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, புத்திர பாக்கியம், பகைவரை வெல்லும் வலிமை, கலை, இசைத்துறைகளில் நாட்டம், உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கஷ்டம் துக்கம், பிரிவு, சண்டை சச்சரவு, மர்மஸ்தானங்களில் நோய், பெண்களால் பிரச்சனை, வீடு மனை, வண்டி  வாகனங்களை இழந்து நாடோடியாக திரியும்  அவலம் உண்டாகும்.

சுக்கிர திசை சூரிய புக்தி

   சுக்கிர திசையில் சூரிய புக்தியானது 1வருடம் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள் வெளியூர்  வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் அமையும் யோகம். அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் அரசு வழியில்  தொல்லை, வேலையாட்களால் பிரச்சனை, இடம் விட்டு இடம் போகும் நிலை, தந்தைக்கு தோஷம் பூர்வீக வழியில் அனுகூலமற்ற நிலை, பங்காளிகளுடன் வம்பு வழக்கு, சமுதாயத்தில் கௌரவ குறைவு கண்களில் பாதிப்பு போன்ற சாதகமற்ற பலன் ஏற்படும்.

சுக்கிரதிசை சந்திர புக்தி

   சுக்கிர திசையில் சந்திர புக்தி 1வருடம் 8மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம். ஜலத் தொடர்புடையவைகளால் அனுகூலம் வெளியூர்  வெளிநாட்டு பயணங்களால் லாபம்  தாய் வழியில் மேன்மை, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம் கணவன் மனைவியிடையே ஒற்றும¬ ஏற்படும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
   சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் நிலை, ஜலத்தொடர்புடைய உடல் நிலை பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகை, ஜீரணமின்மை, வயிறு கோளாறு, கர்ப கோளாறு, கண்களில் பாதிப்பு, வண்டி வாகனங்களால் வீண் விரயம், தேவையற்ற மனக்குழப்பங்கள், எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

சுக்கிர திசையில் செவ்வாய் புக்தி
    
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தியானது 1வருடம் 2 மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் இழந்த வீடு மனை சொத்துக்கள் திரும்ப கைக்கு கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம் விவேகம் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலமும் நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பூமி மனை இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட  உடல் நிலை பாதிப்பு நெருப்பால் கண்டம், ஆயுதத்தால் காயம் படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை பணநஷ்டம், சகோதரர் மற்றும் பங்காளிகளால் மனகஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகள், கலகம் அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

சுக்கிர திசையில் ராகுபுக்தி
   
சுக்கிர திசையில் ராகுபுக்தி 3வருடங்கள் நடைபெறும். 

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள் வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், உணவே விஷமாக கூடிய நிலை, வயிறு உபாதைகள், புத்திர பாக்கியம் உண்டாக தடை, எதிர்பாராத விபத்துகளால் கண்டம், வம்பு வழக்கில் தோல்வி, எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை ஏற்படும். தேவையற்ற பெண் சேர்க்கை, விதவையுடன் தொடர்பு தொழிலில் நலிவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

சுக்கிர திசை குருபுக்தி

   சுக்கிர திசையில் குருபுக்தியானது 2 வருடம் 8மாதங்கள் நடைபெறும். 

குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, எடுக்கும்  காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவர்களை அழிக்கும் ஆற்றல் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் பிரச்சனை, உடல் நிலையில் பாதிப்பு, சமுதாயத்தினரால் அவமதிப்பு, பிராமணர்களால் சாபம், எதிர்பாராத விபத்துகளால் கண்டம், பணக்கஷ்டம், கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, சுபகாரியங்களில் தடை, சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாக கூடிய நிலை ஏற்படும்.

சுக்கிர திசையில் சனிபுக்தி

   சுக்கிர திசையில்  சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும்.  

சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம். வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சனி பலமிழந்திருந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதிர்பாராத விபத்துக்களால் கண்டம் மற்றவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் அமைப்பு வண்டி வாகனங்களை இழக்கும் நிலை பகைவர்கள் அதிகரிக்கும் நிலை உண்டாகும்.

சுக்கிர திசையில் புதன் புக்தி

   சுக்கிர திசையில் புதன் புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும். 

புதன் பலம் பெற்றிருந்தால் கணக்கு, கம்பியூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஆடை ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல் பேச்சாற்றல், ஞாபக சக்தி கணக்கு துறைகளில் ஈடுபாடு தான தரும காரியங்கள் செய்ய கூடிய வாய்ப்பு அமையும். நினைத்து நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியல் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிர திசையில் கேது புக்தி
  
 சுக்கிர திசையில் கேது புக்தியானது 1வருடம் 2மாதங்கள் நடைபெறும்.

கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். தாராள தனவரவும் கிட்டும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், உடல் நிலை பாதிப்பு, வயிறு கோளாறு கல்வியில் மந்த நிலை, விபத்துகளால் கண்டம் பணவிரயம், விதவைகளால் வீண் பிரச்சனைகள் இடம் விட்டு இடம் சுற்றி தரியும் சூழ்நிலை உண்டாகும்.

சுக்கிர திசைக்குரிய பரிகாரங்கள்

   வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது, வைரக்கல் மோதிரம் அணிவது, மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது உத்தமம். வைரக்கல்லை அணியலாம். 

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
Guest Faculty For M.Sc. B.Sc. astrology, KARPAGAM UNIVERSITY, Coimbatore.
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.