Saturday, April 28, 2012

கடகம் லக்னமும் தொழில் அமைப்பும்

கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்த லக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால், பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு, போலீஸ், ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு, பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும்.

செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை, உணவு வகைகள், ஓட்டல் எனவும், மேற்கண்டவற்றுடன்  இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில் கௌரவமான பதவிகளை  வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளையும், அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும்.

செவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம், வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு, புதன் போன்றவர்கள் 10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி மற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

குரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி, நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வருமானம் அமையும்,

செவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம்  வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில், நிலையான வருமானமற்ற நிலை  ஏற்படும். செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் அனுகூலங்கள், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001





No comments: