Saturday, April 14, 2012

தொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்

ஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும் சம்பாதிக்கக்கூடிய யோகமானது ஜாதக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பானது அமையாது. மற்றவர்கள் கொடுத்தும்  ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை. எவ்வளவுதான் செல்வம் செல்வாக்குடன் இருந்தாலும், சம்பாதித்து லாபத்தை அடையக்கூடிய யோகம் இருந்தால் மட்டுமே லாபம் அமையும்
.
ஜோதிடத்தில் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு திசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு செல்வம் சேர்ந்து விடுவது மட்டுமின்றி அவரின் சந்ததியினருக்கும் போதிய செல்வங்களை சேர்த்து வைத்துவிட முடியும். சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவிற்கு சக்தியையும் கொடுக்கும்.

ஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால், 10ம் வீட்டின் அதிபதியும், 10ம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கக்கூடிய தசா புக்தியானதும் பலமாக இருந்தல் மிகவும் அவசியம். தசா புக்தி என்பது ஒருவரின் பிறந்த கால தசா இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புக்திகளை குறிப்பிடுவதாகும். இந்த தசா புக்திகளைக் கொண்டுதான் அவருக்கு உண்டாகக்வடிய பலா பலன்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நவக்கிரகங்கள் சுழற்சி முறையில் நம்மை ஆட்சி செய்வது தான் தசா புக்தி ஆகும். குறிப்பாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றனரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் திசையானது முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் திசைகள் சுழற்சி முறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். திசையின் உட்பிரிவாக ஒவ்வொரு கிரகத்தின் திசையிலும் ஒன்பது  கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலங்கள் 120 வருடங்கள் என்பதனால், எல்லாத் திசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்ய முடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.

ஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனை பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தை தரக்கூடிய தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தை அடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய திசையானது பலம் பெற்ற கிரகத்தின் திசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10 லும், திரிகோண ஸ்தானங்களாகிய 1,5,9 லும், தனலாப ஸ்தானங்களாகிய 2,11 லும் நவகிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் 1,4,5,7,9,10 ல் அமைவதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவைகள் திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 3,6,10, 11 அமைவதும் நல்லது. மேற்கூறியவாறு கிரகங்கள் அமையப்பெற்றால் நற்பலன்கள் உண்டாகும் என்றாலும்  அமையும் கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் மட்டுமே நற்பலனை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர்  நட்பு கிரகங்களாகும். அதுபோல சனி, சுக்கிரன், புதன், ராகு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.

உதாரணமாக, சனியானவர் 3,6, 10, 11 ல் அமைந்தால் அதன் தசா புக்தி காலத்தில் நற்பலன்களை வாரி வழங்குவார் என்றாலும், சனி தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, அதன் வீடுகளான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, தனது சொந்த வீடான மகரம், கும்பத்தில் அமைந்தோ, அதன் தசா புக்தியானது நடைபெற்றால் நற்பலன்களை அடைவது மட்டுமின்றி எல்லா வகையிலும் லாபங்களை எளிதில் அடைய முடியும். அதுவே சனியானவர் தனக்கு பகை கிரக வீடான சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருந்து அதன் தசாபுக்தியானது நடைபெற்றால் எதிர்பார்க்கும் நற்பலன்களை அடைவதில் தடைகள் உண்டாகும்.

ஆக, நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமானப் பலன்கள் கிடைக்கும். அதுவே, நடக்கக்கூடிய திசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடடைய திசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் திசையாக இருந்தாலும் (சுபர் 3,6,8,12 பாவிகள் 8,12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் திசை பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் திசை, பாதக ஸ்தானத்தில்அமையப் பெற்ற கிரகங்களின் திசையாகவும், இருந்தாலும், தொழிலில் லாபங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.

தசாபுக்தி  பலன்களை பற்றி தெளிவாக ஆராயும் போது லக்னாதிபதிக்கு பகை கிரகங்களின் தசா புக்தியிலும், தசா நாதனுக்கு சஷ்டாஷ்டமமான 6,8 ல் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி காலங்களிலும் தொழில் ரீதியாக லாபங்கள், வெற்றிகள் அடைய தடைகள் ஏற்படும். இது மட்டுமின்றி ஒருவருக்கு நடைபெறக்கூடியது 3&வது  திசை காலங்களிலும் அவர் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் முழு பலனை அடைய முடியாமல் எதிலும் ஒரு  திருப்தியற்ற நிலையே உண்டாகும். 3&வது திசையானது என்னதான் யோகம் பெற்ற கிரகத்தின் திசையாக இருந்தாலும் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய தடைகள் ஏற்படுகிறது. 3&வது திசையானது தொழிலில் முன்னேற்றம் தராது என்றாலும், தனித்து செயல்படாமல், யாருடனாவது கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் போது ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

என்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்க முடியாமல் போகும். ஆனால் ஒரு சிலருக்கோ தொழில் மூலம் அபரிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன் மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள் சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தோமேயானால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் திசைகள் நடைபெறும் போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம், தொழில் ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது திசை நடப்பில் இருப்பவர்கள் தொழிலில்  பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை.

எனவே, தொழில் ரீதியாக ஒருவர்  முன்னேற்றமடைய வேண்டுமானால் என்னதான் யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசா புக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


2 comments:

தமிழ்மகன் said...

உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) ----- http://www.mytamilpeople.blogspot.in/2009/09/blog-post_29.html

Anonymous said...

iyya 10 am athipathi 8 il ucham petral kidaikkum palangal enna