காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
மக்கள் பெருக்கம், இட நெருக்கடி போன்றவற்றால் கட்டாயம் தினமும் அனைவரும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் வசிப்பது ஓரிடமாகவும் பணிபுரிவது ஓரிடமாகவும் இருக்கிறது. சொந்தமாக வீடு வாங்கி வசிக்க விரும்புபவர்கள் எங்கு இடம் மலிவாக கிடைத்தாலும் வீடு கட்டி குடியேறி விடுகிறார்கள். மற்ற வசதிகளை நினைத்து பார்ப்பதில்லை. அதன் பயனாக காய் கறி வாங்க வேண்டும் என்றாலும் 2,3, கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இது மட்டுமின்றி வீடு ஓரு ஊரிலும் பணி வேறு ஊறிலும் இருப்பவர்கள் வாரம் ஒரு முறை குடும்பத்தை பார்த்து விட்டு செல்ல சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணமும் அலைச்சலை ஏற்படுத்தவதாக உள்ளது. சிலர் வெளி நாடுகளிலேயே வாழ வேண்டிய சூழ்நிலையால் தூர தேசங்களுக்கு படையெடுத்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஜோதிட ரீதியாக யாருக்கு அதிக பயணங்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று பார்த்தால் பயணங்களுக்கு காரகத்துவம் வகிக்கக் கூடிய கிரகம் சந்திரனாகும். சந்திரன் திசை புக்தி நடைபெறுகின்ற சமயங்களில் தான் பயணங்கள் அதிகம் ஏற்படுகின்றது.
சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டில் சுப கிரக பார்வையுடன் இருந்தால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். 12 பாவங்களில் ஜென்ம லக்னத்திற்கு 3,6,9,12ஆம் வீட்டைக் கொண்டு பயணங்களை தீர்மானம் செய்யலாம். 3,6ஆம் வீட்டைக் கொண்டு குறுகிய கால பயணத்தையும் 9,12ஆம் பாவத்தைக் கொண்டு தூர பயணம் வெளியூர் வெளி நாடு பயணங்களையும் தீர்மானிக்கலாம்.
மூன்றாம் அதிபதி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் சுபர் சேர்க்கையுடன் அமையப் பெற்று அடிக்கடி பயணங்களும் அனுகூலங்களும் உண்டாகும். 3ஆம் வீடு வலுப்பெறுவது மட்டுமின்றி 3ஆம் வீட்டை சுபர் பார்ப்பது நல்லது. 3ல் சந்திரன் அமையப் பெற்று வலுவுடன் இருந்தால் அடிக்கடி பயணமும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.
மூன்றாம் அதிபதி பலமாக இருந்து சூரியன், சந்திரன் குரு, சுக்கிரன், ஆகியோர் சுபர் பார்வை பெற்று அமையப் பெற்றால் அடிக்கடி பயணங்களும் பயணங்களால் பொருளாதார ரீதியாக மேன்மையும் உண்டாகும்.
மூன்றாம் அதிபதியும் சந்திரனும் பலமிழந்து 3ல் சனி, செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தால் பயணங்களால் மனக்கவலையும், சங்கடங்களும் ஏற்படும்.
9,12ம் வீடுகள் தூர பயணம் வெளியூர் பயணம் வெளி நாடு பயணங்களை குறிக்கக் கூடிய ஸ்தானமாகும். 9,12க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 9,12க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், வெளியூர் வெளிநாடு பயணம் ஏற்படும். கடகம் விருச்சிகம் மீனம் ஆகியவை ஜல ராசிகள் ஆகும். இவைகள் 9,12ம் வீடுகளாக இருந்து அதில் சந்திரன் அமையப் பெற்றால் வெளியூர் பயணங்கள் உண்டாகும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் 9,12ல் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் வலிமையாக அமையப் பெற்றால் வெளியூர் பயணமும், பயணங்களால் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய லாபமும் உண்டாகும். 9,12ஆம் வீடுகளில் சுப கிரகங்கள் பலமாக அமையப் பெற்றால் பயணங்களால் ஏற்றங்கள் உண்டாகும். 9,12ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் அமைந்து அதன் திசை நடைபெற்றால் பயணங்களால் இழப்பு ஏற்படும்.
9,12ல் சனி ராகு போன்ற கிரகங்கள் சுபர் பார்வையுடன் அமையப் பெற்று சுப ஆதிபத்யம் பெற்றிருந்தால் கடல் கடந்து அயல் நாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். 9,12ல் ராகு,சனி அமையப் பெற்று அதன் திசை நடைபெற்றால் அயல்நாட்டவர் தொடர்பும் ஜீவன ரீதியாக அயல் நாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் பயணங்கள் ஏற்படுவதற்கான யோகங்கள் இருப்பது முக்கியமில்லை. அந்த யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் தான் பயணங்கள் ஏற்படும். அதுவும் ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகமாக இருந்தால் தான் அந்த திசையில் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். கோட்சார ரீதியாக ஏழரை சனி அஷ்டம சனி போன்ற சங்கடமான காலமாகவும் இருக்க கூடாது. கோட்சார நிலையும் திசா புக்தியும் நன்றாக இருந்தால் வெளியூர் மூலமாக யோகங்களும் பொருளாதார மேன்மையும் உண்டாகும்.
No comments:
Post a Comment