Friday, October 14, 2011

வாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா? முதிர்ச்சியாகவா?

7ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலனும் பாவ கிரகங்கள் இருந்தால் கொடுபலனும் அடையநேரிடும். 7ம் வீட்டில் குரு சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணையானது பொன் போன்ற நிறம் கொண்டவராக இருப்பார். 

புதன் அமையப் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கை துணையானது மாநிறமாக இருப்பார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் கறுப்பு நிறமாக இருப்பார்கள். அதுபோல 7ம் வீட்டிலிருக்கும் கிரகங்களை கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையின் சுபாவத்தையும் வெளித் தோற்றத்தையும் அறியலாம்.

7ல் சூரியன் அமையப் பெற்றால் மணவாழ்வில் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது. 7ம் வீட்டில் சந்திரன் புதன் அமையப்பெற்றால் இளமையான வாழ்க்கைத் துணை உண்டாகும். 7ல் சுக்கிரன் அல்லது செவ்வாய் அமையப் பெற்றால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய இளவயது வாழ்க்கைத் துணை அமையும். 7ல் குரு அமையப் பெற்றால் நல்ல குண நலம், அறிவாற்றல், கவர்ச்சியான உடலமைப்பு கொண்டவர் வாழ்க்கை துணைவராக அமைவார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக அமைவார். அதுபோல 7ல் அமையக் கூடிய கிரகங்களைக் கொண்டு கூட ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணையில் இயல்பினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

7ம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் நல்ல அழுகான நற்பண்புகளை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். அதுபோல சுக்கிரன் சந்திரன் அமைந்தாலும் நல்ல பண்புள்ள வாழ்க்கை துணை அமையும். சனி ராகு அமையப் பெற்றால் மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. குறை உள்ளவர் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புஉண்டாகும்.

சுக்கிரன் 7ம் வீட்டில் வலுவாக ஒரு ஆண் ஜாததகத்தில் அமையப் பெற்றால் பல பெண்களை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும். குரு பலமாக அமையப் பெற்றால் நல்ல மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஏற்படும். சனி செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் அமையப் பெற்றால் வரக்கூடிய மனைவிக்கு ஒரு நிலையான மனநிலை இருக்காது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, உடலில் தழும்புகள் இருக்கும்.

7ல் சந்திரன் செவ்வாய் அமைந்து சனி பார்த்தால் மனைவிக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக 7ல் அமையக் கூடிய கிரகங்களை பொருத்துதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? கசப்பான சம்பவங்கள் நடைபெறுமா? என்பதைப் பற்றி அறியலாம்.

7ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் அவர்களுடய ஆசைகள் அபிலாஷைகள் திருப்திகரமாக நிறைவேறும். பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்று தெரியாமல் சில செயல்களை செய்து சில கசப்பான அனுபவங்களை அடைவார்கள். 7ம் வீட்டில் புதன் போன்ற கிரகங்கள் பலஹீனமாக அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் திருப்திகரமான நிலை இருக்காது. 7ம் வீட்டில் ராகு பகவான் இருந்து சுபர்பார்வையின்றி இருந்தால் மண வாழ்க்கையே அமையாது. அப்படி அமைந்தாலும் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாழ்க்கைத் துணையாக அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 1, 7, 12ல் பாவிகள் அமையப் பெற்று 5ல் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றால் மணவாழ்க்கை அமைவது கேள்விக்குறியாகி விடும். அதுபோல சூரியன் 1, 6, 12ல் இருந்தால் ஏக தாரம்தான் செவ்வாய் சுக்கிரன் இணைந்து 5, 7, 9ல் இருந்தாலும் ஏகதாரம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் ராகு இணைந்து 6, 7, 8ல் இருந்தால் எத்தனை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை நன்றாக இருக்காது.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Sunday, October 2, 2011

சாதகம் செய்யுமா சனி சஞ்சாரம்?

நவகிரகங்களில் சனி பகவானை அறியாதவர்களே இருக்க முடியாது. பகவான் ஒரு சிலருக்கு கெடுதிகளை தந்தாலும் ஒரு சிலருக்கு நற்பலனையும் அளிக்கிறார். செல்வம், செல்வாக்கு பொருளாதார மேன்மை உண்டாக்குகிறார். சனி பகவான் கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

கோட்சார ரீதியாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரித்தால் கெடு பலன் மட்டும்தான் தருவார் என்பதில்லை. சனி ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கோட்சாரத்தில் கெடுதியான ஸ்தானங்கள் இருந்தாலும் அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரிவு, மந்தமான சூழ்நிலை, வீண் வாக்குவாதம், தந்தை சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

3ல் இருந்தால் இளைய சகோதர தோஷம் என்றாலும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.

4ல் இருந்தால் கல்வியில் இடையூறு தாய்க்கு தோஷம் அசையா சொத்து அமைய இடையூறுகள் சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.

5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.

7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.

சனி பலமிழந்து இருந்தால் கெடு பலன்களை கொடுத்தாலும் சிலருக்கு ஏற்றமிகு வாழ்க்கையும் தருவார் என்பதே பொது விதி.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001