Wednesday, November 21, 2012

சந்திர திசை



சந்திர திசை

      ஒருவரை கவிஞராக்கும் திறனும் கற்பனை வளம் அதிகரிக்க கூடிய ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு. ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் சந்திரனுக்குரியதாகும். இந்த நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கு சந்திர திசை முதல் திசையாக நடைபெறும். சந்திரனின் தசா காலங்கள் 10 வருடங்களாகும்.

    மாதூர்காரகனாகிய சந்திரன் தாயார், பராசக்தி, சுவையான, விருந்து உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், உடல்நிலை, சீதள நோய்கள், இடதுகண், புருவம், அரிசி, உப்பு, மீன், கடல் கடந்து செல்லும் பயணங்கள், தெய்வீக பணி, மனநிம்மதி, கற்பனை வளம், நிம்மதியான உறக்கம் போன்றவற்றிற்கு காரகனாகுகிறார்.

    சந்திரனானவர் ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து திசை நடைபெற்றால் நல்ல மனவலிமை தைரியம், துணிவு, அழகான உடலமைப்பு, மற்றவரை கவரும் பேச்சாற்றல், தாய்க்கு நல்ல உயர்வுகள் உண்டாகும். அதிலும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைய பெற்று திசை நடந்தால் சமுதாயத்தில் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் அமையும். அதிலும் சந்திரன் 12&ல் இருந்தாலும் 12&ம் அதிபதியின் சேர்க்கையோ தொடர்போ இருந்தாலும் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பயணங்களால் அனுகூலம் பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும்.

    சந்திரன் பகை நீசம் பெற்று அமைந்து சர்ப கிரகங்களான ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை, ஜல தொடர்புடைய நோய்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு, ஏதிலும் துணிந்து செயல்பட முடியாத நிலை, பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகைமை ஏற்படும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 லும் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 லும் அமைந்தால்  நற்பலன்கள் ஏற்படும். அது தேய்பிறை சந்திரனாக இருந்தால் 3,6,10,11 ல் அமைந்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

    சந்திரன்&குரு சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றாலும் இக்கிரகங்களின் நட்சத்திரங்களில் அமைந்து திசை நடைபெற்றாலும் அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.

     சந்திரன் பலமாக அமைந்து  குழந்தை பருவத்தில் சந்திர திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், குடும்பத்தில் சுபிட்சம், தாய்க்கு அனுகூலங்கள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை, பெரியோர்களை மதித்து நடக்கும் பண்பு, சிறந்த பேச்சாற்றல் ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால், சிறப்பான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் நல்ல கௌரவம் அந்தஸ்து, பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முதுமை பருவத்தில் நடை பெற்றால் நல்ல உடலமைப்பு, தெய்வீக காரிங்களில் ஈடுபாடு மகிழ்ச்சி சந்தோசம் யாவும் அதிகரிக்கும்.

    அதுவே சந்தின் பலமிழந்து குழந்தை பருவத்தில் நடைபெற்றால் ஜல சம்மந்தபட்ட பாதிப்பு, தாய்க்கு கண்டம் ஏற்படும் இளம் வயதில் ஏற்பட்டதால் கல்வியில் மந்தம் மனகுழப்பம் ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை  வீண் குழப்பங்கள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பு, ஜல சம்மந்தப்பட்ட நோய்கள், எதிலும்  சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை, நீரால் கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.


                         சந்திர திசை சந்திர புக்தி

      சந்திர திசை சந்திர புக்தி காலங்களானது 10 மாதங்களாகும்.   

சந்திர பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக இருந்து அவர் 2,11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும் நட்பு கிரக சேர்க்கை, பார்வை சாரம் பெற்றிருந்தாலும் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுபகாரியம் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி மனை, வண்டி வாகன, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். சந்திரனுக்கு குருபார்வையிருந்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

   அதுவே  சந்திரன் தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து, பகை, நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கைப் பார்வை பெற்றோ இருந்தாலும் 6,8,12 ஆகிய  மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும், பண விரயங்கள் ஏற்படும், மனக்குழப்பங்கள், ஏதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம் கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே பகைமை, அரசு வழியில் தொல்லை, இடம் விட்டு இடம் செல்லக் கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படும்.


சந்திர திசையில் செவ்வாய் புக்தி

     சந்திர திசையில் செவ்வாய் புக்தி 7மாதங்கள் நடைபெறும்.

  செவ்வாய் பகவான் பலம் பெற்று ஜென்மலக்னத்திற்கும் திசா நாதனுக்கும் கேந்திர திரி கோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நட்புகிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும் செயற்கரிய செயல்களை செய்யும் வீரமும், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் பெயர் புகழ் உயரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் பூமி மனை சேர்க்கை, சகோதர வழியில் அனுகூலம், அரசாங்க வழியில், உயர்பதவிகள், விருதுகள் பெறும் வாய்ப்பு உண்டாகும் நெருப்பு மருந்து சம்மந்தப்பட்ட துறைகளில் லாபம் கிட்டும்.

    செவ்வாய் பகை நீசமாகி பாவிகள் சேர்க்கை பார்வையுடன் 8,12ல் அமைந்திருந்தால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, ரத்த காயம் ஏற்படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம், எதிரிகளால் தொல்லை, மனதில் பயம், பணவிரயம், வீடு மனை பூமி வண்டி வாகனங்களால் வீண் விரயம், சகோதரர்களிடையே ஒற்றுமையில்லாத நிலை, அரசாங்கத்திற்கு அபாரதம் செலுத்த வேண்டிய கட்டாயம், தொழிலில் நலிவு, தீயால் சொத்துக்கள் சேதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும், குடும்ப வாழ்விலும் பிரச்சனைகள் உண்டாகும்.

சந்திர தசா ராகு புக்தி

      சந்திர திசை ராகுபுக்தி காலங்கள் 1 வருடம் 6மாதங்களாகும்.

  ராகு பகவான் சுப பார்வை சேர்க்கையுடன் 3,6,10,11&ம் வீடுகளில் அமைந்து சுபகிரக சம்பந்தம் பெற்றிருந்தாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தாலும் வியாதி இல்லாமல் நல்ல ஆரோக்கியம், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, எதிர்பாராத பெரிய அளவில் பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர் புகழ் யாவும் உயரும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் காரியங்கள் யாவும் ஜெயமாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கைகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகளும் அமையும்.

    ராகு பகவான் 2,5,8 போன்ற இடங்களிலோ பாவிகளின் சேர்க்கை, பார்வை பெற்று காணப்பட்டாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தாலும் உடல் நிலையில் பாதிப்பு, உண்ணும் உணவே விஷமாக கூடிய நிலை, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தந்தைக்கு கண்டம், பிரிவு, தாய்க்கு தோஷம் வியாதி, குடும்ப வாழ்வில் பிரிவு பிரச்சனை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, தோல் வியாதி, அரசாங்க வழியில் தண்டனையை அடையக் கூடிய நிலை போன்றவற்றால் மனநிம்மதி குறையும்.

சந்திர திசா குருபுக்தி

      சந்திர திசை குருபுக்தி காலங்கள் 1 வருடம் 4 மாதங்களாகும்.

   குருபகவான் ஜெனன காலத்தில் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும் தசா நாதனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் 2,11&ல் அமையப் பெற்றாலும், பொன் பொருள் சேர்க்கை செல்வம் செல்வாக்கு உயரக கூடிய யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் அனுகூலம், உடல் நிலையில் மேன்மை, வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம், கல்வியில் மேன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

    குருபகவான் பலமிழந்து பகை நீசமாகி 6,8,12 லும் திசா நாதனுக்கு 6,8,12 லும் காணப்பட்டாலும் தன விரயம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, நாணயக் குறைவு, அவமானம் போன்றவை ஏற்படும். அரசாங்கம் மூலம் எதிர்ப்பு உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபட இயலாத நிலை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, திராத வியாதி, கடன் தொல்லை, புத்திரர்களால் மனநிம்மதி குறைவு, பெரியவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடிய நிலை, உற்றார் உறவினர்களிடையே வீண் பிரச்சனைகள் ஏற்படும்.

சந்திர திசை சனி புக்தி

      சந்திர திசையில் சனி புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

 சனி பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை, உதவி உண்டாகும். பொருளாதார மேன்மை சேமிப்பு பெருகும் வாய்ப்பு, எடுக்கின்ற காரியங்களால் வெற்றி, வேலையாட்களால் ஆதரவு, வண்டி வாகனங்களால் மற்றும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

    சனி பலமிழந்து இருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலை, குடும்பத்தில் கலகம், வேலையாட்களால் பிரச்சனை, நெருங்கியர்களே துரோகம் செய்ய கூடிய நிலை, இருக்கும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை தேவையற்ற வம்பு வழக்குகள், எதிர்பாராக விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும்.

சந்திர திசை புதன் புக்தி

      சந்திர திசையில் புதன் புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும்.

   புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் சிறப்பான வாக்கு சாதுர்யம், பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றால் மற்றவரைக் கவரக் கூடிய அமைப்பு, பொருளாதார மேன்மை உற்றார் உறவினர்களால் ஆதரவு கல்வியில் மேன்மை, கற்ற கல்வியால் உயர்வுகளை வகிக்கும் யோகம், புக்தி கூர்மை, பல வித்தைகளை கற்கும் ஆற்றல் மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை ஏற்படும்.

    புதன் பலமிழந்திருந்தால் உற்றார் உறவினர்களிடமும் தாய் மாமன் வழியிலும் பகை, கல்வியில் மந்த நிலை, கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை, ஞாபக சக்தி குறைவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் போன்றவை ஏற்£ட்டு மன நிம்மதி குறையும்.

சந்திர திசா கேது புக்தி

     சந்திர திசை கேதுபுக்தி காலங்கள் 7 மாதங்களாகும்.

  கேது சுப பலம் பெற்றிருந்தால் நல்ல தெய்வீக சிந்தனை, பக்தி, பொருளதார நிலையில் உயர்வு, அசையும் அசையா சொத்துகளால் லாபம், மருத்துவ விஞ்ஞான துறைகளில் நாட்டம், மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை, அசையா சொத்துகளும் சேரும் வாய்ப்பு ஏற்படும்.

    கேது நின்ற வீட்டதிபதி பலவீனமாக இருந்தாலும்,  கேது அசுப ப்பலம் பெற்றிருந்தாலும், ஏதிலும் பயம், மனக்குழப்பம், ஏதிலும் முழு ஈடுபாடற்ற நிலை வயிற்று வலி, தோல் நோய்களால் பாதிப்பு, இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலையில் கணவன் மனைவியிடையே பிரிவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, உறவிர்களிடையே பகை, எதிர்பாராத வீண் விரயங்கள், திருமணம் நடைபெற தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் அரசு வழியில் தண்டனை, வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

சந்திர திசை சுக்கிர புக்தி

     சந்திர திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.

  சுக்கிர பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் பெண்களால் அனுகூலம்,செல்வ சேர்க்கை, வீடு மனை, பூமி மற்றும் ஆடை ஆபரண சேர்க்கை,  வண்டி வாகனங்களால் வாங்கும் யோகம், நல்ல தூக்கம், கட்டில் சுகம், கலைத் தொழில் ஈடுபாடு குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கை, யாவும் உண்டாகும்.

    சுக்கிர பகவான் பலமிழந்திருந்தால் மனதில் உற்சாக குறைவு, தேவையற்ற குழப்பம், மர்மஸ்தானங்களில் பாதிப்பு,  தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, கடன் வறுமை, பெண்களால் அவமானம், வீடுமனை வண்டி வாகனம், சுகவாழ்வை இழக்கும் நிலை ஏற்படும்.

சந்திர திசை சூரிய புக்தி

     சந்திர திசையில் சூரிய புக்தியானது 6 மாதகளால் நடைபெறும்.

 சந்திரன் பலம் பெற்றிருந்தால் வீரம் விவேகம் கூடும். எடுக்கும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றிகிட்டும். தந்தைக்கு மேன்மை தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் பதவிகள், பெருமைகள் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். ஆண் புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலை உயர்வடையும்.

    சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.

சந்திரன் பரிகாரம்

    திங்கட்கிழமைகளில் விரதம் இருந்தல் பௌர்ணமி நாட்களில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைத்தல் செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தல் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபடுதல் சந்திரனின் அதிதேவதையான பார்வதியை திங்களன்று வணங்குதல், 2 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிதல் வெள்ளை நிற ஆடைகளை உபயோகத்தால் போன்றவை சந்திரனுக்கு செய்யும் பரிகாரங்களாகும். முத்தை உடலில் படும்படி அணிவது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

Thursday, November 15, 2012

சூரியதிசை


சூரியதிசை

     நவ கிரகங்களின் தலைவனாக விளங்க கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் 3,6,10,11 ஆகிய ஸ்தாங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்றாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகத்தை உண்டாக்குவார். சூரிய திசையானது மொத்தம்  6வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களின் தசா  காலங்களிலேயே சூரிய திசை காலங்கள் மட்டும் தான் மிகவும் குறுகிய காலமாகும். சூரியன் பலம் பெற்று பலமான இடத்தில் அமைந்து திசை நடைபெற்றால் சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும், பல சமுதாய நலப் பணிகளில் ஈடுபடக்கூடிய யோகம் உண்டாகும்.

    சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகங்களான சந்திரன் செவ்வாய் குரு போன்றவர்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளின் இருப்பதும், அக்கிரகங்களின் சாரம் பெற்றிருப்பதும் சிறப்பான பலனை உண்டாகும்.சூரியன் சிம்மத்தில் ஆட்சியும், மேஷத்தில் உச்சமும், துலாத்தில் நீசம் பெறுவார்

      சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும்,  மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும்,8,12 ஆகிய  வீடுகளில் அமையப் பெறுவதும், சனி, ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாரம் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் அமையப்பெறும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்து பலம் இழந்து விடுகின்றன. ஆனால் சூரியனையே பலமிழக்க வைக்க கூடிய தன்மை ராகுபகவானுக்கு மட்டுமே உண்டு.மேற்கூறியவாறு சூரியன் அமையப்பெற்று அதன் திசை நடைபெறுமேயானால் உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, அரசாங்க வழியில் தண்டனை அடையக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழுந்து சூரியதிசை நடைபெறும் காலங்களில் அனுகூலமற்ற பலன்களை அடைய நேரும்.

     சூரியன் தந்தை, ஆத்மா, பல்,வைத்தியம்,ஒற்றை தலைவி,மாணிக்கம், ஏகவாதம், யானை, கோதுமை,பால்,மிளகு,பகல் காலம் வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரகனாகிறார்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில்  பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் சூரிய திசை நடைபெறுமேயானால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தையின் தந்தைக்கு உயர்வுகள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசிர்வாதம், நோயற்ற வாழ்க்கை தந்தைக்கு மேன்மை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவி, அறிவாற்றல் பேச்சாற்றல் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் அமைப்பு உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சிறப்பான உடலமைப்பு, கௌரவமான பதவிகளைவகுக்கும் யோகம் பொருளாதார ரீதியாக உயர்வுகள் சமுதாயத்தில் புகழ், பெயர் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு கொடுக்கும்.  அதுவே சூரியன் பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில் சூரியதிசை நடைபெற்றால் ஜீரம், தோல் வியாதி, தந்தைக்கு கண்டம் ஏற்படும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் சோம்பேறி தனம்,  அரசு வழியில் பிரச்சனை நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.  முதுமை பருவத்தில் நடைபெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு பொருளாதார நெருக்கடி உண்டாகும்.


                              சூரிய திசை சூரிய புக்தி

    சூரிய திசை சூரிய புக்தியின் காலங்களில் 3&ம் மாதம் 18&நாட்களாகும்.  

சூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில்  சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை, மற்றும் பிள்ளைகளால்  நேசிக்கப்படும் யோகம், மனநிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வதரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமணம், சிறப்பான புத்திரபாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் தந்தையால் சாதகப்பலன்கள், மற்றும் கணக்கு, கம்பியூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும்.

    அதுவே சூரியன் பலமிழந்து அமைந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு, இருக்கும் இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, வீரம், அக்கினி பயம் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.

                              சூரிய திசையில் சந்திர புக்தி
     
            சூரிய திசையில் சந்திர புக்தி காலங்கள் 6 மாதமாகும்.

  சந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர  திரிகோணத்திலோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை சுபர் சாரம் பெற்று தசாநாதனுக்கு, 5,9&ல் இருந்தால் அணுகூலமான நற்பலன்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும், பெண்களால் யோகம் தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு துறவு பூர்விக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

    சந்திரன் பலமிழுந்து நீசமாகி பாவிகளுடன் சம்மந்தமாகி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று திசா நாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்று இருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு மரணபயம், சிறுநீரக பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்று போக்கு வயிற்று வலி,  சோம்பல் போன்றவை உண்டாகும். சிறுநீரக கோளாறு ஏற்படும். வயிற்று பிழைப்பிற்கே அல்லாட நேரிடம்.


சூரிய திசையில் செவ்வாய் புக்தி

சூரிய திசையில் செவ்வாய் புக்தியானது 4&மாதம் 6நாட்கள் நடைபெறும். 

செவ்வாய் பகவான் லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அமைப்பெற்றால் பூமி மனை சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

    அதுவே செவ்வாய் சூரியன்  சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றோ, பகை, நீசம் பெற்றோ செவ்வாய் புக்தி நடைப்பெற்றாலும் 8,12&ல் அமைந்து  புக்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுதடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, மரணத்திற்கு சமமான கண்டம், வெட்டு காயம் படும்நிலை, ஜீரத்தினால் உபாதை, திருடர் மற்றும் பகைவரால் பிரச்சனை, நெருப்பினால் கண்டம், எடுத்த காரியங்கள் தடைப்படும் நிலை, அரசு வழியில் தண்டனை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.

                          
                             சூரிய திசை ராகு புக்தி

     சூரிய திசையில் ராகுபுக்தியானது 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். 

  சூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று ராகு சுபர் சேர்க்கைப் பெற்று சுப கிரகங்களின் பார்வைப் பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.

     அதுவே ராகு லக்னத்திற்கு 8,12ல் அமைய பெற்று பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பணவிரயம் ஏற்படகூடிய நிலை விபத்தினால் கண்டம், எப்பொழுதும் துக்கம் உண்டாக கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.

                  சூரிய திசையில் குரு புக்தி

     சூரிய திசையில் குரு புக்தியானது 9&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

குரு பகவான் கேந்திர திரிகோணங்களில், ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டிலிருந்து சுபர் சேர்க்கை பெற்றருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு, பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.

    குரு பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, திசாநாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்றோ, இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று  அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சனை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

                          சூரிய திசையில் சனி புக்தி

     சூரிய திசையில் சனி புக்தியானது 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

  சனி பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலும் 3,6,10,11&ல் இருந்தாலும் தனக்கு நட்புகிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஆட்சி உச்சம், பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் வேலையாட்களால் அணுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரணம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூட கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துகளால் அணுகூலம் ஏற்படும்.

    சனி பலமிழந்து பகை நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால் உடல் நலபாதிப்புகள் மனதில் சஞ்சலம், நீசர்களுடன் சகவாசம், அரசு வழியில் பிரச்சனை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பகை இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு  வழக்கு கலகம் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தபட்ட நோய், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கண்டங்கள் ஏற்படும்.

                            சூரிய திசை புதன் புக்தி
    
      சூரிய திசையில் புதன் புக்தியானது 10 மாதம் 6 நாள் நடைபெறும்.

 புதன் பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தாலும், நல்ல தைரியம் துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வபக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி தொழில் வியாபாரத்தில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம், கம்பியூட்டர் போன்றவற்றில்  அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.

     புதன் பகவான் லக்னத்திற்கு 6,8,12&ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் மனநிலை பாதிப்பு, நரம்பு சம்மந்த பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபக சக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் கெட்ட பெயர் எடுக்கும் நிலை, தாய் வழி மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

                               சூரிய திசையில் கேது புக்தி

    சூரிய திசையில் கேது புக்தியானது 4 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.

  கேது பகவான் 3,6,11&ம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கையும் பெற்றிருந்தாலும்,  சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை சாரம் பெற்று கேந்திர திரிகோணத்திலிருந்தாலும் தெய்வ பக்தி மிகுதியாகும் கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழ் பெருமையும் உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகும் கிட்டும்.

    கேது 2,8&ல் இருந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் பணவிரயம், தந்தைக்கு கண்டம், தலையில் நோய், சீறுநீரக பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம் வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

                                
                      சூரிய திசையில் சுக்கிர புக்தி

      சூரிய திசையில் சுக்கிர புக்தி 1வருட காலம் அதாவது 12மாதங்கள் நடைபெறும்.

  சுக்கிர பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர,திரிகோணத்திலோ, 2,11&ம் இடங்களிலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றாலும் அரசாங்க வழியில் அனுகூலம் வண்டி வாகன சேர்க்கை ஆடை ஆபரண  மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.

     சுக்கிரன் பலமிழந்து லக்னத்திற்கு 6,8,12&ல் மறைந்து, பகை நீசம் பெற்று, பாவிகளின் சேர்க்கையுடனிருந்தால் சர்க்கரை வியாதி, மர்மஉறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, திருப்தியற்ற நிலை, திருமண சுபகாரியம் நடைபெற தடை, மனநிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுதுபடுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாது சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.


சூரியனை வழிபடும் முறை பரிகாரங்கள்

    ஞாயிற்று கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல், உபவாசம் இருத்தல் சூரியனின் அதி தேவதையான சிவனை வணங்குதல் பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், சந்தியா வதனம், உபாயனம் செய்தல், காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹருதயம் பாராயணம் செய்தல் 1 அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல், மாணிக்க கல் பதித்த மோதிரம் உடலில் படும்படி அணிதல். செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்தல் போன்றவை சூரியதிசை, சூரியபுக்தி காலங்களில் செய்ய வேண்டிய பரிகாரங்களாகும்.


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 please call  me at  Cell - 0091 - 7200163001,   9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.


Wednesday, November 7, 2012

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை.

குண அமைப்பு;
     
ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும். அழகான உடலைப்பும், வசீகரமான கண்களும் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தி முந்திடுவார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.

குடும்பம்;
     
அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்ப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.

தொழில்;
     
முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

நோய்;
     
இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்.

திசை பலன்கள்;
     
ரேவதி நட்சத்திராபதி புதன் பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இத்திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் திசை காலங்களில் புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும்  அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.
     
மூன்றவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.
     
நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும், சந்திரன் 10வருடமும் செவ்வாய் 7வருடமும் நடைபெறுவதால் இத்திசைகளின் காலங்களிலும் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.
     
ரேவதி நட்சத்திர காரர்களுக்கு ராகு திசை மாராக திசையாகும்.

விருட்சம்;
     
ரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

      ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல்,  சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவனந்தபுரம்;
      கேரள மாநிலத்தின் தலை நகரம். அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தல விருட்சம் இலுப்பை.

இலுப்பைப்பட்டு;
      நாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ள மணல் மேடு என்ற இடத்தில் நீலகண்டேசுவரரும் அமுதவல்லியும் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

இரும்பை மாகானம்;
      திண்டி வனத்திலிருந்து 30 கி.மீ தொலைவுள்ள கடுவெளிச்சி சித்தர் தவம் புரிந்த ஸ்தலம். தல மரம் இலுப்பை.


கூற வேண்டிய மந்திரம்;
      பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்
      ச மீருத்யே வராபயோஜ்வயகரம்
    ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.

பொருந்தாத நட்சத்திரங்கள்
     அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. 

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Monday, November 5, 2012

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்




     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தாறாவது இடத்தை பெறுவது உத்திரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மீன ராசிக்குரியதாகும். இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர்  வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் து, ஞ, ச, ஸ்ரீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் யா, ஞ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
   
உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

குடும்பம்;
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். அமையும் மனைவியிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவுப் பிரியர்களாக இருப்பார்கள்.  இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்.

தொழில்;
     
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

நோய்;
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடக்க திசை சனி திசை என்பதால் ஜல தொடர்புடைய பாதிப்பு அஜீரண கோளாறு, அடிபட்டு கைகால்களில் எலும்புகளில் அடிப்பட கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்லீரலில் பிரச்சனை, அதிக மருந்துகள் உண்பதால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உண்டாகும். குடிப்பழக்கமும் அதிகமிருக்கும். உடலின் கீழ்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

திசை பலன்கள்;
    
சனி திசை உத்திரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு முதல் திசையாக வரும். இது மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். சனி திசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடும் குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கையும் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
     
இரண்டாவதாக வரும் புதன் திசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் நல்ல  ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக  அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.
     
முன்றாவதாக வரும் கேது திசை சாதகமற்றதாக இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.

      நான்காவதாக வரும் சுக்கிர திசை இருபது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

விருட்சம்;
     
உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரமுள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிதல், வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குலம் கிணறு வெட்ட  இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருநங்கூர்;
      எம்பெருமான் நின்ற கோலத்தில் நிலமகள், திருமகளோடு புருஷோத்தம பெருமாள் என்ற பெயர் கொண்டு அருள் பாலிக்கிறார். ஸ்தலத்தின் வடக்கே உள்ள திருக்குளமே திருபாற் கடலாகும். தல விருட்சம் வேம்பு.

வைத்தீஸ்வரன் கோயில்;
      இந்த கோயிலும் உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களின் பரிகாரஸ்தலமாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
      ஓம் காமகா மாய வித்மஹே
      ஸர்வசித்யை ச தீமஹி
    தன்னோ தேனு ப்ரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்
      பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  


Saturday, November 3, 2012

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தைந்தாவது இடத்தை பெறுவது பூரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3&ம் பாதங்கள் கும்ப ராசிக்கும் 4&ம் பாதம் மீன ராசிக்கும் சொந்தமானதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் கணுக்கால்களையும், 4&ம் பாதம் கால், முன்னங்கால்களையும் ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஸே, ஸோ, தா, தீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் நோ, நௌ ஆகியவையாகும். இது  ஆண் இனமாக கருதப்படுகிறது.

குண அமைப்பு;
     
பூரட்டாதி நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் நியாய அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். தொலை நோக்கி சிந்தனை அதிகம் என்பதால் எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி குறை கூறுவதை பொறுத்து கொள்ள மாட்டார்கள். எந்த பிரச்சனைகளையும் ஞாயமாக தீர்த்து வைப்பார்கள் உணர்வுகளை அடக்கி ஆளக்கூடிய திறன் கொண்டவர்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். பால், நெய், தயிர், போன்றவற்றை விரும்பி உண்பார்கள். அப்பாவி பிழைக்க தெரியாதவர் என பலர் நினைத்தாலும் சாதுர்யமாக பேசி பொருள் பட ஈடுபடுவார்கள். எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல், பிறர் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன்  வேலையுண்டு என இருந்தாலும் சமூகத்தின் மீது பற்றுடையவர்கள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளாமல் பழைய விதி முறைகளையே பின்பற்றுவார்கள். யாருக்கும் தொந்தரவு தாரத இளகிய மனம் கொண்டவர்கள்.

குடும்பம்;
     
பூரட்டாதி நட்சத்திர காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவர்களுக்கு தாமரை இலையில் தண்ணீர் போலத்தான் பட்டும் படாமல் இருக்கும். வாழ்க்கையில் பற்றுதல் குறையும். பிள்ளைகள் மீது அதிக பாசம் இருக்கும். தாய் தந்தைக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைபடமாட்டார்கள். அது போல தங்களுடைய சொத்தையும் யாருக்கும் விட்டு கொடுக்கும் மாட்டார்கள். சிறு வயதிலேயே பெரிய அனுபவங்களையும், கசப்பான சம்பவங்களையும் சந்திக்க நேரிடும். ஆடை  அணிகலங்சளை விரும்பி அணிவார்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள்.  ஞான அறிவாற்றல் அதிகம் இருக்கும்.

தொழில்;
     
பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் துறவறம், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்கள்.  26 வயது வரை கஷ்டங்களை சந்தித்தாலும் 27 வயது முதல் பல வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் உயர்வடையும். கல்வி ஆசிரியர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலர் கல்லூரி பள்ளி போன்றவற்றை நிர்வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சங்கங்கள் வைத்து நடந்துவார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வி துறைகளிலும் பொதுப்பணி தலைவர்களாகவோ பணிபுரிவார்கள். பணம் புரளும் இடம், தங்கம் விற்குமிடம் எக்ஸிகியூட்டில் துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். விளையாட்டு துறையில் சிறந்த வீரர்கள் என்பதால் அதிலும் பரிசுகளையும், லாபங்களையும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

நோய்கள்;
      எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்களாதலால் நோய்கள் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. வந்தால் கால் முட்டுகளில் வலி வந்து மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;
      பூரட்டாதி நட்சத்திராதிபதி குருபகவான் என்பதால் முதல் திசையாக குரு திசை வரும்  இத்திசையின் மொத்த காலங்கள் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இளம் வயதிலேயே சுப கிரக திசை வருவதால் கல்வியில் முன்னேற்றமும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.
     
இரண்டாவதாக 19 வருட காலங்கள் சனி திசை நடைபெறும். இத்திசை காலங்களில் அசையா சொத்து சேர்க்கை, பூமி மனை வாங்கும் யோகம், வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். மக்களின் செல்வாக்கும் கிட்டும்.
     
மூன்றாவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
     
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும்.
     
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் பிள்ளைகளால் பெருமைகளும், பொன்,பொருள் சேரும் யோகமும், சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.

விருட்சம்;
     
பூரட்டாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள தேமா மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை அக்டோபர் மாதத்தில் 12 மணிக்கு மேல் தலைக்கு மேல் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
வண்டி வாகனம் வாங்குதல், கடன்களை தீர்த்தல், விக்கிரங்களை பிரதிஷ்டை செய்தல், மந்திரம் ஜெபிப்பது, மந்திர உபசேம்  செய்வது நல்லது, கிணறு வெட்டுவது, மரகன்று நடுவது, செங்கல் சூளையிடுவது நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருக்கோளிலி;
      எனப்படும் திருக்குவளை ஸ்தலம். தஞ்சை மண்டலத்திலுள்ள ஏழ சிவ தலங்களில் ஒன்று நவகிரகங்களின் குற்றங்களை பொறுத்து அருள் செய்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் பெற்றவர். இக்கோயில் நவகிரகங்களின் பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.

சொல்ல வேண்டிய மந்திரம்
  ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம்
    யஷாய குபேராய
    வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
    தன தான்ய ஸம்ருத்திம் மே
      தேஹிதாபய ஸ்வாஹா!

பொருந்தாத நட்சத்திரங்கள்
      கிருத்திகை, உத்திரம், உத்திராடம் புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Thursday, November 1, 2012

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்




     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்து நான்காவது இடத்தை பெறுவது சதய நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு அலி இனமாக கருதப்படுகிறது. இது கும்ப ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடல் பாகத்தில் முழங்கால், கணுக்கால் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் தோ, தௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
சதய நட்சத்திராதிபதி ராகுபகவான் என்பதால் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் உண்மையாக பழகுவார்கள். நல்ல அறிவாளியாகவும் நேர் வழியில் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவாக பேசுபவர்களாகவும், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பகைவர்களை ஒட ஒட விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் நேரம் பார்த்து அடி கொடுப்பார்கள். பிறர் சொத்துகளுக்கு ஆசைபட மாட்டார்கள். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். எல்லாருக்கும் உதவக் கூடிய குணம் இருப்பதால் சொத்தை கூட விற்க வேண்டி வரும். கொடுத்த வாக்கை பிச்சை எடுத்தாவது காப்பாற்றி விடுவார்கள். மனிதாபி மானம் மிக்கவர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

குடும்பம்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவிக்கு அடங்கி நடப்பது போலும் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போலும் தோன்றினாலும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி விடுவார்கள். உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். தன் சொத்தையே விற்று போண்டியாகி  நிற்பார்கள். ஆனால் இவர்கள் வைத்திருக்கும் பாசத்தைப் போல அவர்களும் இருப்பார்களா?  என்றால் வாங்கும் வரை வாங்கி விட்டு பின்பு ஒதுக்கி தள்ளி விடுவார்கள். எனவே இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.  பெண்களால் அதிகம் விரும்ப படுவராக இருப்பதால் சில நேரங்களில் தடம் மாறவும் வாய்ப்பபுண்டு. 18 வயது வரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராக இருப்பார்கள்.

தொழில்;

    சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் சுய சிந்தனையுடன் செயல்படுவார்கள் கற்றறிந்தவர்களின் சொல்படி நடப்பார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பெரிய குறிக்கோளுடன் செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று லாபம் சம்பாதிப்பதுடன் பல சாதனைகளையும் செய்வார்கள். ஆரம்பத்தில் உத்தியோகம் செய்யவராக இருந்தாலும் 39 வயது முதல் சொந்த காலில் நின்று சுய தொழில் புரிவார்கள். பைலட், தொழிலதிபர்கள், தொழில் சங்க தலைவர்களாக இருப்பார்கள். சிலர் ஸ்டீல் கார் தொழில்சாலை, சாயப்பட்டறை, பனியன் கம்பெனி, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற துறைகளில் சாதிப்பார்கள். கனரகங்களை விற்பது, அனல் மின் நிலையம் கட்டுவது மேம்பாலம் போடுவது, சாலை அமைப்பது போன்றவற்றில் திறமையாக செயல்பட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

நோய்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருக்கும். இதனால் இதய துடிப்பு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். ஹார்ட் அட்டாக்கும் வரலாம். தோல் நோய்களும் ஏற்படும்.

திசை பலன்கள்;
     
சதய நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசையின் மொத்த காலங்கள் 18 வருடங்கள் என்றாலும், பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் கல்வியில் ஈடுபாடும் நல்ல நடத்தையும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பெரியோர்களை மதிக்காத நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை, பாவ சொற்களை பேசும் அமைப்பு உண்டாகும்.

      இரண்டாவதாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் சேரும். குடும்ப சூழலும் சிறப்பாக அமையும்.
     
மூன்றாவதாக வரும் சனிதிசை காலங்கள் 19 வருடங்களாகும். இத்திசை காலங்களில் பொருளாதார உயர்வும் அசையா சொத்து சேர்க்கையும், பழைய பொருட்களால் அனுகூலமும், வேலையாட்களின் ஆதரவும் கிட்டும்.
     
நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பூர்வீக வழியில் அனுகூலமும், பிள்ளைகளால் மேன்மையும் கிட்டும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். 

      ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறுவதால்  ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும்.

விருட்சம்;
     
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் கடம்ப மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 11 மணி அளவில் உச்சி வானத்தில் காணலாம்.

சதய நட்சத்தரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
திருமணம், குழந்தைக்கு பெயர் வைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், கிரக பிரவேசம் செய்தல், வீடு கட்டுதல், ஆடு மாடு வாங்குதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல் போன்றவையாகும்.

வழி பாட்டு ஸ்தலங்கள்

பிச்சாண்டார் கோயில்;
  திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி.மீ தொலை உள்ள உத்தமர் கோயில், பிரம்மா சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது.

கடம்பர் கோயில்;
      கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள தட்சிண காசியில் கடம்பவனநாதராக ஈசன் முலையம்மையோடு காட்சி தரும் ஸ்தலம்.

கூடல்;
      மதுரை மாநகரில் உள்ள வைணவ திவ்ய தேசம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த நின்ற மற்றும் சூரிய நாரயணன் 3 கோலங்களில் காட்சியளிக்கிறார்.

கடம்பனூர்;
     முருக பெருமான் ஐந்து ஸ்தலங்களில் சிவ பிரதிஷ்டை செய்ய வழிபட்ட கோவில் கடம்பனூர், பெருங்கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளம் கடம்பனூர், வாழிக்கடம்பனூர் ஆகியவையாகும். இத்தலங்களில் முருகன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.

கூற வேண்டிய மந்திரம்
      ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
      சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
    ஊர்வாருகமிவ பந்தனான்
      ம்ருத்யோர் முஷீயமாம்ருதாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்
   
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001