Tuesday, November 29, 2011

திருமணம்பொருத்தம் பார்க்காவிட்டால் வருத்தம்


திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். திருமண வயதை அடைந்த ஆண், பெண் இ ருவருக்கும் தங்களுக்கேற்ற வரனை தேர்ந்தெடுப்பதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் ஜோதிடம் என்ற சிறந்த கலையைக் கொண்டு இருவருக்கும் பொருத்தம் உள்ளதா என்பதனை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். நட்சத்திர பொருத்தங்கள் எவை, ஜாதக பொருத்தங்கள் எவை என தெளிவாக பார்ப்போம்.

தசாவிக பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் ஆனது 10 வகையான பொருத்தம் ஆகும். அதனை தசாவிக பொருத்தம் எனக் கூறுவார்கள்.

1. தின பொருத்தம்

திருமணத்தின் போது இருவருக்கும் தின பொருத்தம் சிறப்பாக இருந்தால் இருவரும் அனைத்து செல்வமும் பெற்று சந்தோஷமாக இருப்பார்கள்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26 ஆகிய நட்சத்திரம் ஆக இருந்தால் தின பொருத்தம் உண்டு. குறிப்பாக 7வது நட்சத்திரமாக வந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யக் கூடாது.

ஏக நட்சத்திரம் :
 பெண், ஆண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் ரோகிணி, திருவாதிரை, உத்திரட்டாதி, ரேவதி ஆக இருந்தால் மிகவும் உத்தமம். அஸ்வதி, கிருத்திகை, மிருக சீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுனுஷம், பூராடம், உத்திராடம் ஆக இருந்தால் மத்திமம், மற்றவை பொருந்தாது.

2. கண பொருத்தம்

பெண் ஆண் இருவருக்கும் ஒரே கணமாக இருந்தால் கண பொருத்தம் உத்தமம். ஆண் தேவ கணமும் பெண் மனுஷ கணமும் ஆனால், உத்தமம். பெண் தேவ கணமும் ஆண் மனுஷம் அல்லது ராக்ஷஸ கணமானால் மத்திமம். மற்றவை பொருந்தாது.
கண பொருத்தம் இருந்தால் இருவருக்கும் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். செல்வம் தாராளமாக உண்டாகும்.

3. மகேந்திர பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இதன் மூலம் இருவருக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 13க்கு மேல் வந்தால் உத்தமம். 7க்கு மேல் மத்திமம். இதனால் வாழ்வில் இன்பம் உண்டாகும்.

5. யோனி பொருத்தம்

பெண் ஆண் இருவரும் ஒரே யோனியில் உத்தமம். வேறு யோனி ஆனால் மத்திமம். பகை யோனி யாகில் பொருந்தாது.
பகை யோனிகள்  நட்சத்திரங்கள்
குரங்கு  ஆடு : பூராடம் திருவோணம் து பூசம், கிருத்திகை
சிங்கம்  யானை : அவிட்டம் பூரட்டாதி து பரணி ரேவதி
குதிரை  எருமை : அசுவனி, சதயம் து சுவாதி, அஸ்தம்
பசு  புலி : உத்திரம் உத்திராடம் து விசாகம் சித்திரை, உத்திரட்டாதி.
எலி  பூஜை : மகம், பூரம் து ஆயில்யம், புனர்பூசம்
பாம்பு  எலி : ரோகிணி, மிருக சீரிஷம் து மகம், பூரம்
கீரி  பாம்பு : உத்திராடம் து ரோகிணி, மிருக சீரிஷம்.
மானும்  நாயும் : கேட்டை, அனுஷம் து மூலம், திருவாதிரை.
இது இருவரின் உடல் பொருத்தம் ஆகும்.

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசிக்கு ஆண் ராகி 7, 9, 10, 11, 12, ஆக இருந்தால் உத்தமம். 3, 4, ஆக இருந்தால் மத்திமம். இதனால் மன ஒற்றுமை உண்டாகும்.

7. ராசி அதிபதி பொருத்தம்

பெண் ராசி அதிபதிக்கு ஆண் ராசி அதிபதி நட்பு ஆனால் உத்தமம். சமம் ஆனால் மத்திமம் பகை ஆனால் பொருந்தாது. இதனால் உறவினர்கள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
கிரகம்    நட்பு சமம் பகை
சூரியன் சந்தி, செவ் புதன் சுக்கி, சனி
 குரு  ராகு, கேது
சந்திரன் சூரி, புத செவ், குரு ராகு, கேது
  சுக்கி, சனி
செவ்வாய் சூரி, சந்தி சனி, சுக்கி புதன், ராகு
 குரு  கேது
புதன் சூரிய, சுக்கி செவ், குரு சந்திரன்
  சனி, ராகு
குரு சூரிய, சந்தி சனி, ராகு புதன்
 செவ்வாய் கேது சுக்கிரன்
சுக்கிரன் புதன் சனி, செவ்  சூரிய
 ராகு கேது குரு சந்தி
சனி புதன், சுக்கி குரு சூரிய
 ராகு,கேது  சந்தி, செவ்
ராகு சுக்கி, சனி புதன் சூரிய, சந்தி
கேது  குரு செவ்

8. வசிய பொருத்தம்

ராசி                      வசிய ராசிகள்
மேஷம்              சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்               கடகம், துலாம்
மிதுனம்            கன்னி
கடகம்             விருச்சிகம், தனுசு
சிம்மம்              துலாம், மீனம்
கன்னி             ரிஷபம், மீனம்
துலாம்              மகரம்
விருச்சிகம்      கடகம், கன்னி
தனுசு               மீனம்
மகரம்             கும்பம்
கும்பம்               மீனம்
மீனம்          மகரம்
பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். இதனால் ஒருவருக்கு ஒருவர் வசியம் உண்டாகும்.

9. ரச்சு பொருத்தம்

மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்  சிரக ரச்சு.
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம்  கண்ட ரச்சு
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  உதர ரச்சு.
பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி  தொடை ரச்சு.
அசுவனி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி  பாதரச்சு.
பெண், ஆண் இருவரும் ஒரே ரச்சு ஆக இருந்தால் பொருத்தம் இல்லை. இது மாங்க்லய பொருத்தம் ஆகம். கண்டிப்பாக இருக்க வேண்டும்.

10. வேதை பொருத்தம்

அசுவனியும் கேட்டையும், பரணியும் அனுஷமும், கிருத்திகையும் விசாகமும், ரோகிணியும் சுவாதியும், திருவாதிரையும் திருவோணமும் புனர்பூசமும் உத்திராடமும். பூசமும் பூராடமும், ஆயில்யமும் மூலமும், மகமும் கேட்டையும், பூரமும் உத்திரட்டாதியும், உத்திரமும் பூரட்டாதியும், அஸ்தமும் சதயமும், ஒன்றுக்கு ஒன்று வேதையாம். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் மூன்றும் ஒன்றுக்கு வேதையாம். ஆண், பெண் இருவருக்கு வேதை உண்டானால் பொருத்தம் இல்லை.

திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திர பொருத்தத்தில் 5க்கு மேல் இருந்தால் திருமணம் செய்யலாம். குறிப்பாக தினம், யோனி, ரச்சு பொருத்தம் இருப்பது மிகவும் உத்தமம். மேற்கூறிய பொருத்தமானது நட்சத்திர பொருத்தம் மட்டுமே அதுமட்டும் இல்லாமல் திருமண பொருத்தத்தில் இருவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜாதக ரீதியாக என்னென்ன விஷயங்களை பார்க்க வேண்டும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

செவ்வாய் தோஷம்

பெண்ணுக்கோ, ஆணுக்கோ ஜென்ம லக்கினத்திற்கு 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். செவ்வாய் தோஷம் ஆனது இருக்கும் இருக்க வேண்டும். ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செயயக் கூடாது. அப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்து வைத்தால் பிரிவு, பிரச்சனை ஒரு சில இடத்தில் இழப்பு உண்டாகிறது.

ராகு கேது தோஷம்

திருமணத்திற்கு உரிய பாவங்களான 2, 7, 8ல் ராகு கேது இருந்தாலும் ராகு கேது பிடியில் அனைத்து கிரகமும் இருந்தாலும் திருமண வயதில் ராகு திசை, கேது திசை நடைபெற்றாலும் சர்ப்ப தோஷம் ஆகம. சர்ப்ப தோஷம் உண்டாகி இருந்தால் செவ்வாய் தோஷத்தை போல இருவருக்கும் தோஷம் இருப்பது மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றால் பிரிவு பிரச்சனை உண்டாகும்.

தசா சந்தி

ஆண், பெண் இருவருக்கும் ஒரே தெசா புத்தி நடக்கக் கூடாது. அப்படி இருவருக்கும் ஒரே தசா புத்தி நடந்து இருவருக்கும் திருமணம் செய்தால் திருமண வாழ்வு ஒன்றாக இருக்கிறது. குறைந்த பட்சம் 3 வருட இடைவெளி இருப்பது நல்லது.

மன பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது மட்டும் இல்லாமல் இருவருக்கும் மண பொருத்தம் இருப்பது மிகவும் உத்தமம். அதாவது இருவருக்கும் மன ரீதியாக பிடித்து இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் மணப் பெண், ஆண் வீட்டாரின் உறவினர்களுக்கும் பிடித்து இருக்க வேண்டும்.

வயசு பொருத்தம்

ஆண் பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் மட்டும் இன்றி வயசு பொருத்தமும் இருக்க வேண்டும். ஆண் பெண் இருவரில் ஆணுக்கு வயது அதிகமாகவும் பெண்ணுக்கு குறைவாகவும் இருப்பது மட்டும் இல்லாமல் இருவருக்கும் வயது வித்தியாசம் 3 முதல் 6 வயது வரை இருக்கலாம். அதை விட்டு இருவருக்கும் வயது வித்தியாசம் சுமார் 10 வயது 15 வயது என இருப்பது நல்லது அல்ல.

சகுன பொருத்தம்

குறிப்பாக இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும்போதும், பெண் பார்க்கும்போது சகுனம் சிறப்பாக இருக்க வேண்டும். சகுனம் நன்றாக இல்லை என்றால் திருமணம் செய்யக் கூடாது. இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்தால் தான் திருமணம் செய்யலாம். அதில் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு  கேது தோஷம், தசா சந்தி, மனப் பொருத்தம், வயசு பொருத்தம் மிகவும் முக்கியம்.

களத்திர தோஷம்

ஜென்ம லக்கினத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடு சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு 7ல் பாவிகள் அமையப் பெற்று ஒருவருக்கு தோஷம் இல்லாமல் இருந்தால் மணவாழ்வு சிறப்பாக இருக்காது. குறிப்பாக இருவருக்கு தோஷம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் இருவருக்கும் இருக்க வேண்டும்.

மாங்கல்ய தோஷம்

பெண்களுக்கு 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8ம் வீட்டில் பாவிகள் இருந்தாலும், 8ம் அதிபதி பலம் இழந்தாலும் கணவருக்கு பாதிப்பு கணவரை இழக்க நேரிடும். இதற்கு கணவர் ஜாதகத்தில் 8ம் பாவம் அதாவது ஆயுள் பாவம் பலமாக இருக்கும் ஜாதகமாக பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும்.
                                     
                                                   முருகு பாலமுருகன், 0091 7200163001

Tuesday, November 22, 2011

என்ன பண்ணும் சந்திர தசை


                               நவகிரகங்களில் மிக மக்கிய கிரகமான சந்திர பகவான் தனது திசை புத்தி காலத்தில் பல்வேறு விநோதமான பலன்கள் உண்டாக்குகிறார். சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அது மட்டும் இன்றி தாய் ஜலம் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

பொதுவாக சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். சந்திரனின் திசை ஒருவருக்கு எப்படி இருக்கும் என்று பார்த்தால் சந்திரன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று திசை நடத்தினால் சமுதாயத்தில் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவ பதவிகள் வரும் சூழ்நிலை என்று பல்வேறு நற்பலன்கள் உண்டாகும். அதுவும் சந்திரன் 12ம் வீட்டில் இருந்தாலும் 12ம் அதிபதி சேர்க்கையோ தொடர்போ உண்டாகி இருந்தால் வெளியூர், வெளிநாடு பயணம், பயணமும் அதன் சார்ந்த விஷயங்கள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் சர்ப கிரகமும் என வர்ணிக்கப்படும் ராகு கேது சேர்க்கை பெற்று அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் மன குழப்பம், ஜல தொடர்புள்ள நோய்கள், பொருளாதார நெருக்கடி, தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.
குறிப்பாக சந்திரன் கேது சேர்க்கை பெற்று இருந்தால் மன குழப்பம் மட்டும் இன்றி பைத்தியம் ஆகும்நிலை கூட உண்டாகலாம். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை பிறக்கும் போதே நடக்கும். பொதுவாக சந்திர திசை பிறக்கும் போது நடைபெற்று சந்திரன் மற்றும் 4ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு கண்டம் உண்டாகும். பொதுவாக சந்திர திசை நடைபெற்றால் அடிக்கடி பயணங்கள் உண்டாகும். அது மட்டும் இல்லாமல் சந்திர புக்தி நடைபெற்றால் கூட பயணங்கள் அடிக்கடி உண்டாகும். சந்திர பகவானின் திசையானது சில லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும்

செவ்வாயின் லக்கினமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலத்தை உண்டாக்குவார்.
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார். பொதுவாக சந்திரன் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலனை தருவது இல்லை.

 மிதுனத்திற்கு 2ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார்.

கடக லக்னத்திற்கு சந்திரன் லக்கினாதிபதி என்பதால் சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும்.

சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்கினாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் திசையில் அடையலாம். அதுவும் பயணத்தில் சாதகமிகுந்த பலன் ஏற்படும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதி சந்திரன் என்பதால் சந்திர திசை சாதகமிகுந்த பலன்களை தரும்.

 துலா லக்கினத்திற்கு 10ம் அதிபதி சந்திரன் திசை நடைபெறும் போது தொழில் ரீதியாக அனுகூலமிகுந்த பலன்கள் உண்டாகும்.
விருச்சிக லக்கினத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் அனுகூலப் பலனை தரமாட்டார்.

தனுசு லக்கினத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால்சாதகமாக அமையப் பெற்றால் மட்டுமே நற்பலனை தருவார்.

 மகர லக்னத்திற்கு சந்திரன் 7ம் அதிபதி öன்பதால் ஏற்றத் தாழ்வு மிகுந்த பலனை தருவார்.

கும்ப லக்கினத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது மறைமுக எதிர்ப்பு உடம்பு பாதிப்பு ஏற்படும்.

மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமாக பலன்கள் உண்டாகும். பொதுவாக சந்திரன் திரிகோண ஸ்தானத்தில் அமையப் பெற்று திசை நடைபெற்றால் ஆன்மீக பணி, தெய்வீக பணி, பொது பணிகளில் ஈடுபட்டு பலருக்கு நல்லது செய்யும் அமைப்பு உண்டாகும்.

Astrologer Murugu Balamurugan -0091  7200163001/9383763001

சூரிய திசை என்ன செய்யும்


                  நவகிரகங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஜெனன ஜாதகம் பலமாக இருந்தால் நமக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். பொதுவாக ஒரு ஜாதகத்தின் பலா பலன்கள் நிர்ணயம் செய்கின்ற போது தசா புக்தி பலன்கள் ஒருவகையிலும் கோட்சார பலன்கள் ஒரு வகையிலும் நம்மை வழி நடத்துகின்றன.

          ஒருவருக்கு தசா புக்தி பலன்களை பார்க்கின்றபோது ஒருவருக்கு தசாநாதன் சிறப்பாக அமையப் பெற்று விட்டால் அதன் பலா பலன்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அதுவே ஒரு கிரகம் பலவீனமாக இருந்து விட்டால் அக்கிரகத்தின் தசா புக்தி காலங்களில் சோதனைகள் பல உண்டாகும். ஒரு ஜாதகத்தில் யோகங்கள் ஏற்படுவது முக்கியமில்லை. யோகத்தை ஏற்படுத்திய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் தான் அந்த யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். குறிப்பாக ஒரு ஜாதகம் மிகவும் பலமாக அமைந்து விட்டால் அக்கிரகத்தின் தன் காலத்தில் வேண்டிய அனைத்து செல்வஙகளையும் அடைந்து விடலாம். நல கிரகங்களில் ஒவ்வொரு திசையும் எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் எந்த திசை யாருக்கு சிறப்பான பலனை உண்டாக்கும் என்பதில் பற்றி விரிவாக பார்ப்போம்.
சூரிய திசை

                        நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் பார்ப்வேறு விநோதங்களை உண்டாக்குகிறார். சூரிய திசை 6 வருடங்களாகும். மிக குறுகிய காலமாக திசை நடத்தும் கிரகம் சூரியன் மட்டும்தான். சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடத்தினாலும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் தனது திசா காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம். அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம். சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன் செவ்வாய் குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும் அக்கிரகங்களின் சாரம் பெறுவதும் சிறப்பான பலனை உண்டாகும்.
                       சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும் மகரம் கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமையப் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் அமையப் பெற்றால் அனைத்து கிரகங்களையும் பலமிழக்க வைக்க கூடிய பலம் சூரியனுக்கு உண்டு. அதுவே சூரியன் ராகுவுக்கு அருகில் அமையப் பெற்றால் சூரியன் பலகீனம். அடைந்து விடுவார். அதனால் தான் சூரியன் ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கு மிக அருகில் அமையக் கூடாது.
               
                  மேற்கூறியவாறு சூரிய பகவான் பலவீனமடைந்தாலும் சனி போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று சூரிய திசை நடைபெற்றால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு கண்களில் பாதிப்பு, இருதய நோய், அரசாங்க தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை, ஆண்மைக் கோளாறு, ஜீவன ரீதியாக பிரச்சனைகள் உண்டாகும். அதுபோல சூரியனின் திசை நடைபெற்றால் தந்தைக்கு கூட சோதனைகள் உண்டாகிறது. சூரியன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றால் தந்தை வழி உறவினர்களிடம் கூட கருத்து வேறுபாடுகள் வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
                            சூரிய திசை நடைபெறும் காலங்களில் மாணிக்கக் கல் மோதிரம் அணிவது, சிவ வழிபாடு பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.
                  Astrologer  Murugu balamurugan -0091-7200163001.

வெளிநாடு யோகம்

                     மனிதனாக பிறக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பல்வேறு வகையில் போராடி வாழ்க்கையை நடத்துகின்றோம். சிலருக்கு இருக்கும் இடத்திலேயே ஒரு கௌரவமான நிலை பொருளாதார மேன்மை உண்டாகிறது. சிலருக்கோ வெளியூர் அமைப்பு, உண்டாகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு ஏற்றத் தாழ்வுகளுக்கும் நவகிரகங்கள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. பொதுவாக ஜனன ஜாதக அமைப்பு தான் நமக்கு உண்டாகும் பலா பலன்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

              ஜென்ம லக்னத்திற்கு 12ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் நட்புவீட்டில் அமையப் பெற்றிருந்தாலும் நட்பு கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பிறந்த ஊரில் பெயர், புகழுடன் வாழக் கூடிய அமைப்பு உண்டாகும். 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் 12ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் பிறந்த ஊரை விட வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்பும், தன் மூலம் அனுகூலமும் உண்டாகும். 12ம் வீட்டில் ஒரு கிரகம் பலமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால், அக்காலத்தில் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோலஜென்ம லக்னத்திற்கு 9ம் பாவம் வெளிநாடு யோகத்தை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 9ம் வீடு சர ராசியாகவோ, நீர் ராசியாகவோ இருந்தால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். 9ம் அதிபதி சர ராசி அல்லது ஜல ராசியில் அமையப் பெற்றால் அதன் தசா புக்தி காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோல 9ம் அதிபதி அமையப் பெற்ற நட்சத்திர அதிபதி ஜல ராசியாகவோ சர ராசியாகவோ அமையப் பெற்றால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும்.
         
          ஜென்ம லக்னத்திற்கு 9ம் அதிபதி 10, 12க்கு திபதியுடன் இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் வெளியூர் வெளிநாடு செல்லக் கூடியயோகம் உண்டாகும்.
              
    ஒருவர் ஜாதகத்தில் 3ம் அதிபதி குறுகிய பயணத்தை குறிக்கும் ஸ்தானமாகும். 3ம் அதிபதியோ 3ம் வீடோ 3ம் வீட்டதிபதி அமையப் பெற்ற நட்சத்திராதிபதியோ சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்தால் அடிக்கடி பயணங்கள் உண்டாகும்.
             அதுபோல 11ம் வீடோ, 11ம் அதிபதியோ 11ம் அதிபதி நின்ற நட்சத்திராதிபதியோ சர ராசி அல்லது ஜல ராசியாகவோ இருந்தால் அதன் தசா புக்தி காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும்.

               அதுபோல 9, 12ம் பாவங்களில் ராகு பகவான் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடந்தால் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும்.

கண்டத்தை ஏற்படுத்துபவர்கள் யார்


               நாம் அனைவருக்கும் எப்பொழுதும் நல்லதே நடப்பதில்லை. அதுபோது எப்பொழுதும் கெட்டதே நடப்பதில்லை. வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம் போல் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். பொதுவாகநமது வாழ்க்கையை வழி நடத்துவது நவ கிரகங்கள் தான். ஜனன ஜாதகத்தில் நவ கிரகங்கள் பலமாக இருந்தால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். யாருக்கு எப்போது கண்டம் உண்டாகிறது. கண்டத்திற்கு ஒப்பான உடல்நிலை பாதிப்புகள் எப்போது உண்டாகிறது என்பதனை பற்றி பார்ப்போம்.
     நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சனி பகவான்.  சனி ஒருவர் ஜாதகத்தில் வலுவாக அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி பகவானுக்கு மட்டும்தான் நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகமாகும். சிறப்பு வாய்ந்த கிரகமான சனி பகவான் ஆயுள் காரகன் மட்டுமின்றி ஜீவன காரகனாகவும் வர்ணிக்கப்படக் கூடியவராவார். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரன் புதன் வீட்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி நீசம் பெற்றோ சூரியனுக்கு அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றோ ஆட்சி உச்ச ஸ்தானத்தில் வக்ரம் பெற்றோ இருந்தால் ஆயுள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகிறது.
          
        மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை ஏற்படுத்தக் கூடியது எது என்று பார்த்தால் சில ஸ்தானங்களை மாரக ஸ்தானம்என்று பிரித்துள்ளார்கள். குறிப்பாக சரல் லக்னம் என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், கடகம், துலாம், மகரத்திற்கு 2, 7க்குடையவர்களும் ஸ்திர லக்னமென வர்ணிக்கக் கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்திற்கு 3, 8க்குடையவர்களும், உபய லக்னம் என வர்ணிக்கப்படக் கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனத்திற்கு 7, 11க்கு உடையவர்களும் மாரகாதிபதி ஆவார்கள். 

      பொதுவாக லக்ன லக்னத்திற்கு 8ம் அதிபதியும், சனி பகவானும் பலம் பெற்று இருந்தாலும், மற்ற கிரக அமைப்பும் சாதகமாக இருந்தால் நீண்டஆயுள் உண்டாகும். குறிப்பாக மாரகாதிபதியின் திசா புக்தி வருகின்ற சமயங்களில் நமக்கு கண்டங்கள் ஏற்படும் என்றாலும், அக்கிரகங்களின் அமைப்பிற்கேற்ப பலாபலன்கள் உண்டாகும்.


           ஒருவருக்கு கண்டத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் திசை மற்றும் புக்தி காலங்கள் வரும் எனில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் போகாது. வருகின்ற திசா புக்தியின் கிரகமானது ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகமாக இருந்தால் (சூரியன், சந்திரன்) கண்டிப்பாக பாதிப்பினைத் தருவார். ஆனால், வருபவர் இரு வீட்டு ஆதிபத்ய கிரகம் என்றால் மாரகத்தை துணிந்து செய்ய மாட்டார். அதற்கு பதில் மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தையும் பல்வேறு கஷ்டங்களையும் உண்டாக்குவார்.
            
               மாரக ஸ்தானாதிபதிகளை சுப கிரகங்கள் பார்த்தால் பெரிய கெடுதலை ஏற்படுத்தாமல் விட்டு விடுவார். அதுவே மாரக ஸ்தானாதிபதிகளை பாவ கிரகங்கள் பார்த்தாலும், பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் கொடிய வியாதியினை உண்டாக்குவார்.
            
          பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தால் மாரகாதிபதியின்  திசாபுக்தி காலத்தில் எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் மற்றும் கண்டங்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக மாரகாதிபதியும், மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களிலும் கெடுதியை உண்டாக்கும் என்றாலும் சுபர் பார்வை பெற்று பலமாக இருந்தால் கெடுதலை ஏற்படுத்த மாட்டார்கள். மாரகாதிபதியும் மாரகஸ்தானத்தில் உள்ள கிரகங்களும் பலமிழந்து அதன் திசா புக்தி நடைபெறுகின்ற போதுதான் எதிர்பாராத கண்டங்கள் சோதனைகள் எல்லாம் ஏற்படும். குறிப்பாக திசாபுக்தி சாதகமற்ற நேரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும்.
                            முருகு பாலமுருகன், -0091-7200163001

நினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்


                 மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று வகையாகப் பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர். மூன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் இ, எ, ஃ, கு ஆகியவை. 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.

திருமண அமைப்பு

               மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும் உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும் அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னை சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றலும் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக் கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணமிருப்பதால் இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையை பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாக பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தாம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் தற்பெருமை மிக்கவர்கள். பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள். இவர்களிடம் இருந்து வரக் கூடிய கண்டன வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள் ஆனாலும் கோபம் தனிந்த பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால் இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத்தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் கரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மீக தெய்வ பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.
உடலமைப்பும் ஆரோக்கியமும்
                           மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள். நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும் நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும் கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்பு தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கை
              மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லக் கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப்
போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.
பொருளாதாரம்
               மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாராத வகையில் திடீர் தன வரவுகளையும் கிடைக்கப் பெறுவார்கள். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருகுகாது. வாழ்க்கையில் பண முடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும் ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்கும் செலவு செய்யக் கூடிய வாய்ப்பு அமையும்.
தொழில்
                   மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும் போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்ட தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணி புரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்தில் இருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.
நண்பர்கள்  பகைவர்கள்
                 கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழகக் கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பார்கள். 5, 6ம் எண்ணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் போக முடியாது.
குருவுக்குரிய காலம்
                        நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவை சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக் கிழமை குருவுக்கு உகந்த நாள்.
குருவுக்குரிய திசை
                            குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலையைக் குறிப்பிடக் கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த சுப காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட கல்
     குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம். புஷ்பராகக் கல் பதித்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லா வகையிலும் மேன்மைகளையும் வெற்றிகளையும் அடையலாம்.
பரிகாரங்கள்
       குரு பகவானுக்கு வியாழக் கிழமை நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அலங்கரித்து மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.
தேவாநாஞ்ச ரீஷீணாஞ்ச
 குரும் காஞ்சாந ஸந்நியம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
 தம் நமாமி ஒருஹஸ்பதிம்
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
   அதிர்ஷ்ட தேதி  3, 12, 21, 30. நிறம்  பொன்நிறம், மஞ்சள், திசை  வடக்கு, கிழமை  வியாழன், கல்  புஷ்பராகம், தெய்வம்  தட்சிணாமூர்த்தி.

Monday, November 21, 2011

மாபெரும் சனிபெயர்ச்சி யாகம் - மற்றும் ஜோதிடர் மாநாடு


முருகு ராஜேந்திரன் நடத்தும் மாபெரும் சனிபெயர்ச்சி யாகம் - மற்றும் ஜோதிடர் மாநாடு டிசம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Sunday, November 20, 2011

ஜாதக ரீதியாக வாரிசு யோகம்


                     குழந்தை செல்வம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுமை பெற வைப்பதாகும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகிறார். அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.
ஜோதிட ரீதியாக நாம் ஆராய்கின்ற போது யாருக்கு சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியமே இல்லாதவர் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.

                                          ஜோதிட ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
                         ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.

ஆண் வாரிசு
நவ கோள்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய பாவங்களில் குரு அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.

பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன் சந்திரன் 5ல் வலுவாக அமைந்தாலும் 5ம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகத்தைக் கொடுக்கும்.

சர்புத்ரபாக்யம்
சர்புத்திர பாக்கியம் யாருக்கு அமையும் என்று பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும் இணைந்து அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும். 5ம் அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் அமையும்.

            புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி
காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும். சனி, ராகு, கேது, புதன் போன்ற கிரகங்கள் 5 ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும், 5ம் அதிபதியாக இருந்தாலும் 5ம் அதிபதி நீசம் அஸ்தங்கம் பெற்றாலும் ராகு கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் உண்டாவதில் தடை ஏற்படுகிறது. அதுபோல சந்திரனுக்கு 5ல் பாவிகள் இருப்பதும் 5ம் அதிபதி பலவீனம் அடைவதும் புத்திர தோஷமாகும். 5ம் வீட்டிற்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.

                அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.

ஜெனன காலத்தில் 5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்து புத்திர யோகம் அதாவது பிறருடைய குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் இடம் சுப கிரகங்களால் சூழப்பட்டு குரு பகவான் வலுவாக அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் அமையும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தாலும் பெருமையையும், உயர்வையும் அடைய முடியும்.
              
               அதுவே 5ம் அதிபதி பகை பெற்றோ 6, 8, 12களில் மறைந்தோ, பாதக அமையப் பெற்றோ, ராகு சனி சாரம் பெற்றோ, பாதகாதிபதி சாரம் பெற்றோ குரு பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ இருந்தால் புத்திரர் அனுகூலம் இருக்காது. தேவையற்ற பிரச்சனைகளையும் வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

நன்மை செய்யும் நான்காம் எண்

                       நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு சிறப்புகளும் தனித்தன்மைகளும் உண்டு. 4, 13, 22, 31ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஈ, M, கூ  ஆகியவை. ராகு ஒரு சாயா கிரகமாகும்.பிடிவாத குணம்

           நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாகக் கூறக் கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொதுநல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும்

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத் தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய உருவ அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி, மூட்டு வலிபோன்றவை ஏற்படும். மனஉளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். கார சாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறு நீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாசக் கோளாறு போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை

நான்காம் எண்ணுக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக் கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றாற்போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராகவும் இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம் :

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும், இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும். என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கின்றோமோ, இல்லையோ மற்றவர்களுக்கு தொழில் செய்யும் நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்புண்டு. என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும் ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினிர்ஸ், பௌதீக ஆராய்ச்சித் தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும.

நண்பர்கள், பகைவர்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாக இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்புண்டு. 5, 8ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்

ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுப காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை

தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலை வனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள் உலர்ந்து போன நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்

நான்காம் எண் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல்நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அர்த்த காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த நம்
ஹம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஸீம் ப்ரணமாம்யஹம்
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது மிகவும் உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28,
 நிறம் : மஞ்சள்,
 திசை : கிழக்கு,
 கிழமை :ஞாயிறு,
 கல் : கோமேதகம்,
தெய்வம் : துர்கை.
cell - 0091-72001 63001/9383763001

நட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்?

                உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில்ஒருவர் தான் சொல்ல முடியும். பிறக்கும் குழந்தைகள் கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டியலிட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிட ரீதியாக ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்து விட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகி விடக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது. 
                பொதுவாக ஜெனன ஜாதகம் சிறப்பாக அமைந்து விட்டால் ஆரோக்கியமான வாழ்வு உண்டாகிறது. கிரக நிலைகள் மட்டும் இன்றி பிறந்த நட்சத்திர ரீதியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 27 நட்சத்திர காரர்களும் எந்த எந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

              அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் மனக்குழப்பவாதியாக இருப்பார்கள். 8, 16 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி வாகனங்களால் ஆபத்தும் 45 வயதில் அரசு வழியில் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரும்.

                  பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் ஜுரமும், 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 25 வயதில் நாய்க்கடியால் பாதிப்பும் 27 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 30 வயதில் பால்வினை நோய்களும் 50 வயதில் சர்க்கரை நோயும் 53 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும், 59 வயதில் மூல வியாதியும் 64 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புண் உண்டாகும்.

                  கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் நீரால் கண்டமும், 7 வயதில் நெருப்பாலும் 10 வயதில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுவதால்கண்டமும் உண்டாகும். 11 வயதில் வண்டி வாகனங்களால் விபத்துக்களும் 21 வயதில் பால்வினை நோய்களும் 50, 55 வயதில் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 60 வயதில் மூல வியாதியால் பாதிப்பும் உண்டாகும்.

              ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 5, 7 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பும், 9 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும், 32 வயதில் உஷ்ண நோயும் 55 வயதில் திருடரால் கண்டமும், 57 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 65, 69 வயதுகளில் ஜல தொடர்புடைய பாதிப்பும் உண்டாகும்.

                           மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் தண்ணீரால் கண்டமும் 8 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும் 10 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 19 வயதில் ஆயுதங்களாலும் 21 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 33 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலையும் உண்டாகும்.

                    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் அம்மையாலும் 12 வயதில் நாய்க்கடியாலும் 16 வயதில் விஷத்தாலும் 18 வயதில் மேலிருந்து தவறி விழுவதாலும் 33 வயதிலும் 47, 55, 60 வயதுகளில் மூலம் மற்றும் வயிற்று போக்காலும் கண்டம் உண்டாகும்.

                               புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் வலிப்பு, 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை, 6 வயதில் ஆயுதங்களால் 15 வயதில் தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தால் 25 வயதில் அம்மை நோயால் 39 வயதில் வாத நோயால் 55, 68 வயதுகளில் நெருப்பு மற்றும் வயிற்று போக்கால் கண்டம் உண்டாகும்.

                       பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஆயுதங்களால் 7 வயதில் அம்மையால் 12, 16 வயதுகளில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும். 25 வயதில் தேவையற்ற நண்பர் சகவாசத்தால் 33 வயதில் திருடர்களால் 46 வயதில் நெருப்பு போன்றவற்றால் கண்டம் உண்டாகும்.

             ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரமும் 5 வயதில் நரம்பு தளர்ச்சியும், 14 வயதில் அம்மை நோயும்,16 வயதில் நீராலும் 25 வயதில் விஷத்தாலும் கண்டம் உண்டாகும். 45 வயதில் வண்டி வாகனங்களால் 55 வயதில் வாதம் போன்றவற்றால் 64, 68 வயதுகளில் நீரிழிவு நோய் கண்டம் உண்டாகும்.

                   மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 7 வயதில் அம்மை நோயும், 9, 15 வயதில் விஷம் போன்றவற்றாலும் 20, 24 வயதுகளில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 40, 47 வயதில் நாய்க் கடி போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும். 50 வயதில் திருடர்களாலும் 56 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.

            பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் விஷக் கடியாலும், 7 வயதில் அம்மையாலும் 8 வயதில் வயிற்று போக்காலும் 14 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

              உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் நெருப்பாலும் 5 வயதில் அம்மையாலும் 7 வயதில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும் 14 வயதில் மிருகங்களாலும் 19 வயதில் விஷத்தாலும் 32 வயதில் ஆயுதங்களாலும் 45 வயதில் உயரத்திலிருந்து தவறி விழுவதாலும் 55 வயதில் வலிப்பு நோயாலும் கண்டம் ஏற்படும்.

         அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜலத் தொடர்புடைய பாதிப்புகளும் 5 வயதில் மரம் முறிந்து மேலே விழுவதாலும் 25 வயதில் திருடர்களாலும் 33 வயதில் வண்டி வாகனங்களாலும் 50 வயதில் வாத நோயாலும், 57 வயதில் நம்பியவர்களே துரோகம் செய்வதாலும் 68 வயதில் தீராத வியாதிகளும் ஏற்பட்டு கண்டங்கள் உண்டாகும்.

          சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் 7 வயதில் அம்மை நோயும் 12 வயதில் விஷக் கடியாலும் 14 வயதில் உயரமான இடங்களில் இருந்து தவறி விழுவதாலும் 18 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 25 வயதில் வாதத்தாலும் 48 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும். 

                       சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 4 வயதில் அம்மை நோய் 7 வயதில் வண்டி வாகனங்கள் கண்டம் 12 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 25 வயதில் பால்வினை நோய்கள் 47, 54 வயதுகளில் வாதம் நீரிழிவு பிரச்சனைகள் 65 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

                       விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை 3 வயதில் வயிற்றுப் போக்கு 56 வயதில் ஆயுதங்களால் பாதிப்பு 68 வயதில் வாத நோய் உண்டாகும்.
                       
              அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் கை கால்களில் சிரங்கு 13  வயதில் நாய்க்கடி 22 வயதில் பால்வினை நோய் 28 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பு, 33 வயதில் எதிரிகளால் 40 வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 44 வயதில் வாத நோய் 55 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

            கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு கண்களால் பாதிப்பு, 7 வயதில் நாய்கடி, 13 வயதில் விஷத்தால் கண்டம் 21 வயதில் ஜலத்தால் கண்டம் 22 வயதில் பெண்களால் கண்டம் 30 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 50 வயதில் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
  
         மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 12 வயதில் நாய்க் கடியாலும் 20 வயதில் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுவதாலும் 44 வயதில் நாய் கடியாலும் விரோதிகளாலும் 64 வயதில் வயிறுமற்றும் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 75 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் கண்டம் உண்டாகும்.

              பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் அஜீரணக் கோளாறும், 9 வயதில் மிருகங்களாலும் 11 வயதில் வயிற்று போக்காலும் 19, 22 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 30, 34 வயதுகளில் அரசாங்கத்தாலும் விரோதிகளாலும் 40, 45, 57 வயதுகளில் பக்கவாதம் போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும்.

               உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறும், 5 வயதில் சிரங்கும், 7 வயதில் கண்களால் பாதிப்பும் 13 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 16 வயதில் நாய்க்கடியாலும் 27 வயதில் பால்வினை நோயாலும் 28 வயதில் ஆயுதங்களாலும் 35 வயதில் எதிரிகளாலும் 44 வயதில் நெருப்பால் 55 வயதில் வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோயால் பாதிப்பு உண்டாகும்.

           திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் ஜுரத்தாலும் 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 16 வயதில் விஷக் கடியாலும் 22 வயதில் பால்வினை நோயாலும் 36 வயதில் எதிரி மற்றும் திருடர்களாலும் 75 வயதில் உடல்நிலை பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

                     அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 5 வயதில் ஜுரம், 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு 13 வயதில் உயரமான இடங்களில் இருந்து விழுவதால் 16 வயதில் நாய்க்கடியால் 22 வயதில் விஷத்தால் 28 வயதில் பெண்கள் தொடர்பால் 36 வயதில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும்.

            சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரத்தால் 5ல் வண்டி வாகனங்களால் 9 வயதில் ஜலத்தால் 23 வயதில் விஷத்தால் 57, 61 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

                பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 5 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பு, 7 வயதில் அம்மை, 22 வயதில் பெண்களால் 33 வயதில் திருடர் மற்றும் ஆயதத்தால் 42 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையால் 50, 55 வயதில் வாத நோயால் கண்டம் உண்டாகும்.

             உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 15 வயதில் மிருகத்தால் 25 வயதில் பால்வினை நோயால் 30, 35 வயதில் நெருப்பால், 60 வயதில் வயிறுசம்மந்தப்பட்ட பாதிப்புகளால் கண்டம் உண்டாகும்.

              ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் உயரமான இடத்திலிருந்து விழுவதால் 12 வயதில் விஷத்தால் 20, 25 வயதுகளில் பெண்களால் 42 வயதில் திருடர்களால், 48, 51 வயது வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் 52 வயதில் மூல வியாதிகளால் 55, 58 வயதுகளில் வாத நோய்களால் கண்டம் உண்டாகும்.

       ஒவ்வொரு நட்சத்திரதாரர்களும் மேற்கூறிய வயதுகளில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.


                                                            cell - 72001 63001



சூரியனும் அஸ்தங்க தோஷமும்


ஜோதிடமாமணி
முருகுபாலமுருகன் 0091 72001 63001
           நல்லதொரு வாழ்க்கை அமைய நவகிரகங்களின் அருள் மிகவும் அவசியம், நவகிரகங்கள் பலம் இழந்தால் நற்பலன் அடைய இடையூறுகள் ஏற்படும்.கிரக பலம் பலவினத்தை பெறுத்தவரை சில கிரக சேர்க்கை கூட பலவீனமான பலனை ஏற்படுத்துகிறது. அதில் கூறிப்பாக நவகிரகங்களில் தலையாய் கிரகமான சூரியன் சேர்க்கை பெறும் கிரகங்கள் அஸ்தங்க தோஷத்தால் பலம் இழக்கிறது. மிகவும் உஷ்ண கிரகமான சூரியன் தனது உஷ்ண தன்மையால் தன்னுடன் இணையும் கிரகங்களை சக்தி இழக்க வைக்கிறது அப்படி சூரியன் சேர்க்கை பெற்று ஜெனன ஜாதகத்தில் அமைய பெற்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா அதாவது
 சூரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன குழப்பம்,ஜல தொடர்புள்ள நோய்கள் உண்டாகிறது. சூரியன் சந்திரன் இனைந்து இருந்தால் அமாவாசை  ஆகும்.
 சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ரத்த தொடர்புள்ள  நோய், சகோதர தோஷம்,வெட்டு காயங்கள் ஏற்படும் அமைப்பு யாவும் உண்டாகும்.பெண் ஏன்றால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
  சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் தாய் மாமனுக்கு தோஷம்,நரம்பு பலவீனம் ஏற்படும்.புதன் சூரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும்.பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை
 சூரியனுக்கு 11டிகிரிக்குள் குரு அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் புத்திர தோஷம், கொடுக்கல் & வாங்கலில் பிரச்சனை,பெரியோர்களிடம் கருத்துவேறுப்பாடு,முன்னோர் சாபத்தால் முன்னேற தடை போன்றவை உண்டாகும்
 சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் சுக வாழ்வு செகுசு வாழ்வு பாதிப்பு , பால் வினை நோய்,இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை,பெண்களால் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
 சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம், வேலையாட்களால் பிரச்சனைகள்,கடன் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
 எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார்.சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது கிரகண தோஷம் உண்டாகிறது,இதனால் தந்தைக்கு கெடுதி பெரியோர்களிடம் கருத்து வேறுப்பாடு சட்ட சிக்கல் யாவும் ஏற்படும்
  சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரிக்குள் அமையும்  கிரகங்கள் அதிக கெடுதலை தருகின்றனர்,  சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அமையும் போது பாவீனமான பலனை தரும் என்றாலும் அஸ்தங்கம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெற்றால் கெடுதலை தராமல் நற்பலனை உண்டாகும்