ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். பொதுவாக நாம் அன்றாடம் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும் பலன்கள் அனைத்தும் கோட்சார ரீதியாக கூறப்படும் பொதுப் பலன்களே ஆகும்.
கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமாக சனி பகவானே இருக்கிறார். சனி என்ற பெயரைக் கேட்டாலே எல்லோர் மனதிலும் ஒரு பய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம்.
சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை, 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனி பகவான் 3, 6, 11ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை, உடல் நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்ம ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி, என்றும் கூறுவார்கள்.
இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சனைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.
சனி 4ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.
சனி 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சனைகள், விரயங்கள் உண்டாகும்.
சனி 8ல் சஞ்சரிக்கும் போது, அஷ்டம சனி உண்டாகிறது. இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
குறிப்பாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரிக்கும் போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.
பொதுவாக மேற்கூறிய ஸ்தானங்களில் சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.
9.9.2009 அன்று திருக்கணிதப்படியும், 26.9.2009 அன்று வாக்கியப்படியும் ஏற்பட்ட சனி மாற்றத்தால் சனி பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் சிம்ம ராசியும், துலாத்திற்கு விரய சனியும், மிதுன ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் கும்பத்திற்கு அஷ்டம சனியும் மீன ராசிக்கு கண்ட சனியும், தனுசுவிற்கு ஜீவன சனியும் உண்டாகும். இதனால் இந்த ராசி நேயர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.
கன்னியில் சனி சஞ்சரிப்பதால் மேஷம், கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு இரண்டரை வருட காலங்கள் பொற்காலங்களாக அமைந்து நற்பலனை உண்டாக்கும்.
சனியால் பாதிக்கப்படும் நேயர்கள் சனிக்கு உகந்த பரிகாரங்களை செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு சனிக்கு பரிகாரம் செய்யலாம். முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும் சென்று பரிகாரம் செய்யலாம்.
-முருகு பாலமுருகன்
Mobile:0091-7200163001