Wednesday, December 12, 2012

செவ்வாய்திசை



                                
    நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலங்களில் பல்வேறு விதமான நற்பலன்களை உண்டாக்குவார். செவ்வாய் திசையானது சுமார் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் இரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவராவார். செவ்வாயின் ஆட்சி வீடுகள்  மேஷம், விருச்சிகம், உச்ச வீடு மகரம், நீசவீடு கடகம், செவ்வாய் ஒரு பாவகிரகமாக இருப்பதால் 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். உடல் வலிமை, ரத்த ஒட்டம் நிர்வாக திறன், அதிகாரப் பதவி, உடன் பிறப்பு போன்றவற்றிற்கு காரன் செவ்வாயாவார்.

    செவ்வாய் பலம் பெற்றிருந்து திசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவியினை அடையும் வாய்ப்பினை கொடுக்கும். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் உயர்பதவி, இல்வாழ்வில் இனிமை அழகான புத்திர பாக்கியம், பூமி மனை சேர்க்கை போன்ற அனுகூலமானப் பலன்கள் உண்டாகும்.

    செவ்வாய் பகவான் பகை, நீசம் மற்றும் பாவிகளின் சேர்க்கைப் பெற்று காணப்பட்டாலும், அதுபோல பாதகஸ்தானத்திலோ, 8,12 லோ அமைந்திருந்தாலும் அதன் திசா காலங்களில் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், மனக்கவலைகள் குடும்பத்தில் பிரச்சனை எதிர்பாராத விபத்துக்களால் உடல் உறுப்புகளை இழக்க கூடிய நிலை, ரத்த காயம் படுதல், நெருப்பினால் கண்டம், சகோதரர்களிடையே பகைமை, கோபத்தினால் புக்தி தடுமாற்றம், காக்காய் வலிப்பு நோய், மூளை மற்றும் இருதய சம்மந்தப்பட்ட நோய்கள், வீடு, மனை, வண்டி வாகனங்களை இழக்க கூடிய நிலை அரசு வழியில் பிரச்சனை, உத்தியோகத்தில் வீண் பழிச்சொற்கள் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

    குறிப்பாக செவ்வாய் பகவான் பெண்களுக்கு களத்திர காரகன் மற்றும் ரத்த காரகன் என்பதால் செவ்வாய் பலமிழந்திருந்தால், மாதவிடாய் கோளாறுகள் கர்ப சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், குழந்தை பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.

    மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் செவ்வாய்க்குரியதாகும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை முதல் திசையாக வரும். செவ்வாய் பகவான் பலம் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடலமைப்பு, சிறப்பான ஆரோக்கியம், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். இளம் வயதில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, விளையாட்டு துறைகளில் சாதனை செய்யும் அமைப்பு,  எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் உயர் பதவிகளை வகுக்கும் யோகம் நல்ல நிர்வாக திறன் ஏற்படும். முதுமையில் நடைபெற்றால் பயமற்ற நிலை, பூமி மனையால் அனுகூலம் நல்ல உடலமைப்பு, சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும் யோகம் உண்டாகும்.

    அதுவே செவ்வாய் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் உடல் பாதிப்பு, வெட்டு காயங்கள் நெருப்பால் கண்டம் உண்டாகும். இளம் வயதில் நடைபெற்றால் விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் வம்பு பிரச்சனைகள் ஏற்படக்கூடிய நிலை உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் நெருங்கிய நண்பர்களை இழக்கும் நிலை, உடல்நிலை பாதிப்பு, எதிலும் வீண் வாக்கு வாதம் முன் கோபம் சண்டை சச்சரவு உண்டாகும். முதுமையில் ஏற்பட்டால் ரத்த அழுத்தம்,  ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு உடல் பாதிப்பு, பங்காளிகளால் பிரச்சனைகள் ஏற்படும். இருதய கோளாறும் உண்டாகும். 

செவ்வாய் திசை செவ்வாய் புக்தி 

செவ்வாய் திசையில் செவ்வாய் புக்தி 4 வருடம் 27 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் நல்ல உடல்வலிமை, நல்ல ஆரோக்கியம், குடும்பத்தில் தன சேர்க்கை, புதிய வீடுகட்டி குடி புகும் அமைப்பு பூமி மனையால் திறமையுடன் சம்பாதிக்க யோகம் எதிலும் தைரியமும் செயல்படும் திறமை, எதிரிகளை வெல்லும் வலிமை, அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகள் வகித்திடும் யோகம், வம்பு வழக்குகளில் சாதகப்பலன், எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆடை ஆபரண சேர்க்கையாவும் உண்டாகும். கடன்கள் குறையும்.

அதுவே செவ்வாய் பலமிழ்ந்து திசா புக்தி நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, வியாதியால் கவலை, கஷ்டம், உற்றார் உறவினர்களிடம் கலகம், பணவரவில் நெருக்கடி, ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பபை பிரச்சனை, கருச்சிதைவு யாவும் உண்டாகும். எதிர்பாராத விபத்துக்களால் உடலில் காயங்கள் ஏற்பட கூடிய நிலை, அரசு மற்றும் சகோதரர்கள் வழியில் பிரச்சனை, புத்திரபாக்கியம் உண்டாகும் தடை ஏற்படும்.

செவ்வாய் திசையில் ராகு புக்தி

     செவ்வாய் திசையில் ராகு புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும். 

ராகு பகவான் சுபகிரக சேர்க்கைப் பார்வைப் பெற்று அமைந்திருந்தால் நல்ல காரியங்களுக்கும்,புண்ணிய காரியங்களுக்கும் செலவு செய்ய கூடிய அமைப்பு உண்டாகும். குலப்பெருமை உயரும். குடும்பம் சுகமாக அமையும். மனைவி பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள், உடல் நலம் சீரடையும். எதிலும் துணிவுடன் செயல்பட்டு எதிகளை வெல்லக் கூடிய தைரியமும், வலிமையும் உண்டாகும். வெளியூர் வெளி நாடுகள் மூலம் அனுகூலம், பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களுடன் சிறப்பான  உறவு அமையும். பொருளாதாரமும் உயர்வடையும்.
ராகு பகவான் பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பாவிகள் சேர்க்கைப் பெற்று பலமிழந்திருந்தால் நெருப்பினால் கண்டம், உண்ணும் உணவே விஷமாக கூடிய நிலை, விஷப்பூச்சிகளால் கண்டம் இடம் விட்டு இடம் செல்ல கூடிய சூழ்நிலை, புத்திரர்களால் சோகம், தொழில் வியாபாரத்தில் நஷ்டம், தலைவலி போன்றவற்றால் அவதிப்பட நேரிடும்.

செவ்வாய் திசா குரு புக்தி

       செவ்வாய் திசையில் குரு புக்தியானது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

குருபகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், வண்டி வாகனம் மற்றும் அசையா சொத்து சேர்க்கை, பிள்ளைகளால் பெருமை, எடுக்கும் காரியங்களில் வெற்றி, குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் தடபுடலாக நிறைவேறும் யோகம் கல்வியில் மேன்மை, பலருக்கும் ஆலோசனை வழங்கும் அமைப்பு, சமுதாயத்தில் நல்ல பெயர் புகழ்யாவும் உண்டாகும். செல்வம் சேரும்.

குரு பகவான் பலமிழந்திருந்தால் திருடர்களால் தொல்லை, விஷ பூச்சிகளால் கண்டம், சிறுநீரக வியாதியால் அவதி, பெரிய வியாதிகள், தானிய உற்பத்தி பாதிப்பு, உற்றார் உறவினர் மற்றும் பங்காளிகளிடையே பிரச்சனை, குடும்பத்தில் கஷ்டம், பிள்ளைகளால் அவப்பெயர், செய்யும் தொழில் உத்தியோகத்தில் வீண் பழிகள் போன்ற அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் திசையில் சனி புக்தி

      செவ்வாய் திசையில் சனி பக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். 

சனி பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நல்ல தன லாபமும், பூமி மனை வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, அரசு வழியில் உயர் பதவியினை வகிக்கும் யோகம் உண்டாகும்.

சனி பலமிழந்து சனி செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலோ, சனி செவ்வாய் ஒருவரைவொருவர் பார்த்து கொண்டாலோ எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உடல் அங்கங்களை இழக்க கூடிய அவல நிலை ஏற்படும். தனவிரயம், தீயால் கண்டம், அரசு வழியில் சோதனைகள், அரசாங்கத்தில் அபராதம் கட்ட வேண்டிய நிலை யாவும் உண்டாகும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களிடையே பகைமை ஏற்படும். மனநிம்மதி குறையும்.

செவ்வாய் திசை புதன் புக்தி

     செவ்வாய் திசையில் புதன் புக்தி 11 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

புதன் பலம் பெற்றிருந்தால் தான தர்ம காரியங்களை செய்யும் வாய்ப்பு, சிறப்பான பேச்சாற்றல், எழுத்தாற்றல், கணிதம் கம்யூட்டர் துறைகளில் மேன்மை, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆற்றல் வண்டி வாகனம் மற்றும் ஆடை ஆபரண சேர்க்கை, தொழில் வியாபாரத்தில் லாபம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

புதன் பகவான் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் பாதிப்பு, ஞாபக சக்தி குறையும் நிலை, நரம்பு சம்மந்தமான பிரச்சனை, சித்தபிரம்மை, பகைவர்களால் பாதிப்பு, இடம் விட்டு இடம் செல்ல கூடிய நிலை நண்பர்கள் மற்றும் தாய் வழி மாமன்களிடையே விரோதம் ஏற்படும். மற்றவர்களால் பல பிரச்சனைகள், தேவையற்ற பழிச் சொற்கள் ஏற்படும்.

செவ்வாய் திசையில் கேது புக்தி

செவ்வாய் திசையில் கேது புக்தியானது 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

கேது பகவான் சுப பலம் பெற்று இருந்தால் நல்ல லாபமும் உயர்வும் உண்டாகும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்படும். வீடு மனை, வண்டி வாகன சேர்க்கைகள் கிட்டும். சகோதரிகளாலும் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு ஏற்படும்.

கேது பகவான் பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் நெருப்பு மற்றும், விஷத்தினால் கண்டம், தோல் நோய்கள் உடல் நிலையில் சோர்வு, சோம்பல் தன்மை, கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

செவ்வாய் திசையில் சுக்கிர புக்தி

     செவ்வாய் திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2 மாதங்கள் நடைபெறும்.

சுக்கிர பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் ஆடை ஆபரணங்கள் பூமி, வீடு, மனை யோகம், வண்டி வாகன யோகம், குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை, பெண் புத்திர பாக்கியம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, ஆயுள் ஆரோக்கியம் மேன்மையடையும், பெண்களால் உயர்வும், கலை துறைகளில் ஈடுபடும் ஏற்படும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களின் தொடர்பால் அவமானம், பாலியல் தொடர்புடைய நோய், சர்க்கரை வியாதி கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, அதில் பொருள் விரயம், நண்பர்களே துரோகிகளாக கூடிய நிலை, விளைச்சல் குறைவு போன்ற அனுகூலமற்ற  பலன்கள் ஏற்படும்.

செவ்வாய் திசையில் சூரிய புக்தி
    
செவ்வாய் திசையில் சூரிய புக்தியானது 4&மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் தீர்த்த யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு தான தரும காரியங்கள் செய்யும் வாய்ப்பு,அரசு அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவிகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எதிலும் தைரியமாக செயல்படக் கூடிய நிலை உண்டாகும். பகைவரை வெல்லும் தைரியம், துணிவு, குடும்பத்தில் சுபிட்சம், ஆடை ஆபரண சேர்க்கைகள் போன்ற சாதகமானப் பலனை அடைய முடியும்.

அதுவே சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, தலைவலி இருதய கோளாறு, விஷத்தால் கண்டம், விஷ ஜீரம் எதிர்பாராத வீண் விரயங்கள், தந்தைக்கு கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

செவ்வாய் திசையில் சந்திர புக்தி

     செவ்வாய் திசையில் சந்திர புக்தியானது 7 மாத காலங்கள் நடைபெறும்.

சந்திரன் பலம் பெற்று அமைந்திருந்தால் குடும்பத்தில் மகிழச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனை, வீடு வாகன சேர்க்கை, கலைத் துறையில் ஈடுபாடு, பெண்களால் அனுகூலம், நினைத்த காரியங்களில் வெற்றி, பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

    சந்திரன் பலமிழந்திருந்தால் மனக்குழப்பங்கள், எதிலும் திறமையுடன் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். சரியாக சாப்பிட முடியாத நிலை ஜலத் தொடர்புடைய உடல் நிலை பாதிப்புகள், ஜலத்தால் கண்டம் குடும்பத்தில் கஷ்டம்,  தொழில் வியாபாரத் நஷ்டம், தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட கூடிய அமைப்பு உண்டாகும்.


செவ்வாய்க்குரிய பரிகாரங்கள்

   செவ்வாய் கிழமைகளில் விரதம் இருத்தல் கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்ளுதல், தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தல் நல்லது. கோதுமை ரொட்டி, சர்க்கரை வெள்ளை எள் கலந்த இனிப்பு வகைகள், துவரை போன்றவற்றை  மணமாகாத ஆணுக்கு தானம் செய்வது,செண்பக பூவால் முருகனை அர்ச்சனை செய்வது, பவழ மோதிரம் அணிந்து கொள்வது நல்லது.
please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: