Friday, May 18, 2012

தனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்



தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல், நினைவாற்றல், எதிலும் சிந்தித்து  செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனே ஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும், சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு  காரகன் என வர்ணிக்கக்கூடிய  சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல்  புதன் சந்திரன் சேர்க்கை பெற்று  பலம் பெற்றால் ஜல தொடர்புடைய தொழில் செய்யக்கூடும்.
புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள் வழியில் முன்னேற்றம், நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும. புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம், கடகம், துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை, இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான் பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும், புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

No comments: